தேவனால் வரும் செழிப்பு

“தேவன் வானத்திலிருந்து மழைகளையும், செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும், சந்தோஷத்தினாலும், நம்முடைய இருதயங்களை நிரப்புகிறார்” (அப். 14:17).

சமீபத்தில், நான் ஒரு சிறிய கடைக்குச் சென்றிருந்தபோது, அங்கே எழுதப்பட்டிருந்த ஒரு பெரிய வாசகம் என் இருதயத்தைக் கவர்ந்தது. அந்த வாசகம் என்ன தெரியுமா? “கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்” என்பதுதான். அதைப் பார்க்க, பார்க்க, என் இருதயத்தில் பரவசம் உண்டானது. ஆம், நிச்சயமாகவே கர்த்தர் உங்களுக்கு செழிப்புள்ள காலங்களைத் தந்தருளுவார்.

நானும், என்னுடைய மனைவியும் அரசாங்கத்திலே நல்ல உத்தியோகத்திலே பணியாற்றிக்கொண்டிருந்த போதிலும்கூட, எங்கள் குடும்பத்தில் எதிர்ப்பாராத செலவீனங்களினால் கஷ்டமும், நஷ்டமும் உண்டானது. இரண்டு பேருடைய சம்பாத்தியமும் பொத்தலான பையிலே போட்டதைப் போலவே இருந்தது. மிகுந்த துக்கத்தோடு, எங்களுடைய வீட்டிலே ஒரு உபவாச ஜெபக்கூட்டத்தை, ஒழுங்கு செய்திருந்தோம். அந்தக் கூட்டத்தை நடத்திய தேவ ஊழியக்காரர் முடிவிலே எங்களை ஆசீர்வதித்து, “இன்று முதல் கர்த்தர் உங்களுக்குச் செழிப்பான, பசுமையான நாட்களைக் கட்டளையிடுவார்” என்று சோன்னார்.

அவர் சொன்னவுடனேயே, ஒரு பெரிய விசுவாசம், நதிபோல என் உள்ளத்தை நிரப்பினது. அன்றே என்னுடைய பொருளாதார பிரச்சனையெல்லாம் நீங்கிப் போய் விட்டதை உணர்ந்தேன். அப்படியே கர்த்தர், அன்று முதல் எங்களை ஆசீர்வதித்தார். சங்கீதக்காரன் நன்றியோடுகூட, கர்த்தரைப் பார்த்து, “என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது” (சங்.31:15) என்று சொல்லி துதித்தார். அவருக்கு எவ்வளவு செழுமையான காலங்களைக் கர்த்தர் கட்டளையிட்டார், என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த, அவருடைய வாழ்க்கையில், கர்த்தர் மாறுதலை கொண்டுவந்து, பெரிய அரண்மனைகளை, வேலைக்காரர்களை, பெரிய பெரிய உத்தியோகஸ்தர்களையெல்லாம் கொடுத்தார். ஆம், ஒரு மனுஷனை தாழ்விலிருந்து உயர்த்தி, அவனுக்கு செழிப்பான வருஷங்களைக் கொடுக்கிறவர், “நம் தேவனாகிய கர்த்தர். அவர் இன்று செழிப்பான காலங்களை உங்களுக்குத் தருவேன்” என்று வாக்களிக்கிறார்.

எகிப்திலே கர்த்தர் ஏழு ஆண்டுகள், அருமையான செழிப்பை கட்டளையிட்டார். செழிப்பை அனுப்புவதற்கு முன்பாகவே, யோசேப்புக்கு உணர்த்தினார். அவர் ஏழு செழிப்பான கதிர்களை, சோப்பனத்திலே கண்டார்; ஏழு கொழுமையான பசுக்களையும் கண்டார். பூரணமான செழிப்பு அது! தேவபிள்ளைகளே, இன்று அவர் சோல்லுகிறார்: “உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர் “(உபா. 30:20).

தேவபிள்ளைகளே, அநேக காரியங்களைக் குறித்து, நீங்கள் கவலைப்பட்டுக் கலங்குகிறீர்களோ? வறுமையிலே, எவ்வளவு காலம் வாடுவதென்று சிந்திக்கிறீர்களோ? எனக்குக் கசப்பான வாழ்க்கைதான் கிடைத்தது என்று சொல்லுகிறீர்களோ? கலங்காதிருங்கள். ஒவ்வொரு கசப்பான மாராவையும் தாண்டி, ஒரு செழிப்பான ஏலிம் உண்டு. அங்கே பன்னிரண்டு நீரூற்றுக்களும், எழுபது பேரீச்சமரங்களும், உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன.

நினைவிற்கு:- “உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்” (நீதி. 28:20).