புதிதாக்கும்!

“கர்த்தாவே, எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும், அப்பொழுது திரும்புவோம்; பூர்வகாலத்திலிருந்தது போல, எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும்” (புல. 5:21).

உள்ளத்தின் ஆழத்திலிருந்து, கர்த்தரை நோக்கி: “ஆண்டவரே, என் நாட்களைப் புதியவைகளாக்கும்” என்று சொல்லும்போது, கர்த்தர் உங்கள்மேல் இரங்காமல், உங்கள் வாழ்க்கையைப் புதிதாக்காமல் இருப்பாரோ?

ஒருமுறை ஒரு சகோதரி, மிகுந்த கண்ணீரோடுகூட, “ஐயா, வேலையற்ற என் கணவனுக்கு, இரவும், பகலும் நான் பாடுப்பட்டு, ஒரு வேலை வாங்கிக் கொடுத்தேன். ஆனால், இப்பொழுதோ, என் வீட்டில் வேலை சேத வேலைக் காரியையே, என் கணவன் திருமணம் சேதுகொண்டு, என்னை வீட்டை விட்டுத் துரத்தி விட்டார். என் நாட்கள் கண்ணீரிலும், துக்கத்திலும் கழிகிறது. கர்த்தர், என்னுடைய நாட்களைப் புதிதாக்குவாரா? என்று தேம்பினாள்.

எண்ணற்ற உள்ளங்கள், “ஆண்டவரே, எங்களுடைய நாட்களை ஆசீர்வதிக்க மாட்டீரா?” என்று புலம்புகின்றன. “காலையிலிருந்து இரவு வரையிலும், கடன் பிரச்சனையோடு தவிக்க வேண்டியதிருக்கிறது; வியாதியோடு வாட வேண்டிய திருக்கிறது. எங்களுக்கு விடிவு காலமே இல்லையா?” என்று கதறுகிறார்கள். தேவபிள்ளைகளே, கர்த்தரையே பாருங்கள். பூர்வநாட்களில் இருந்தது போல, எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும், என்று மன்றாடுவீர்களா?

இந்த ஜெபத்தை செய்தவர், “கண்ணீரின் தீர்க்கதரிசி” என்று அழைக்கப்படுகிற எரேமியாதான். இஸ்ரவேலின் இராஜாவாகிய சிதேக்கியாவை, பாபிலோனியர் சிறைபிடித்துக்கொண்டு போனார்கள். சிதேக்கியா ராஜாவின் பிள்ளைகளெல்லாம், அவன் கண்ணின் எதிரிலே வெட்டப்பட்டு, துடிதுடித்து இறந்தார்கள். ராஜாவின் கண்களிலிருந்து கண்ணீர் பொங்கினது. அவன் தேம்பித் தேம்பி அழுதான். அதைக் கண்ட பாபிலோனியர், சிதேக்கியாவின் கண்களையே பிடுங்கிப்போட கட்டளை யிட்டார்கள்.

அவன் கைகளிலே விலங்கிட்டு, பாபிலோனிய சிறையிலே அடைத்தார்கள். இதனால் எரேமியா தீர்க்கதரிசியின் உள்ளம் புலம்பினது. “ஐயோ, எங்களுடைய பாவங்களினிமித்தம் அல்லவா, இந்த வேதனைகளையும், துயரங்களையும் அனுபவிக்க வேண்டியதிருந்தது. கர்த்தாவே, எங்களை உம்மிடத்தில் திருப்பிக் கொள்ளும், எங்களுடைய நாட்களைப் புதியவைகளாக்கும்” என்று ஜெபித்தார்.

சங்கீதக்காரன் ஜெபித்தார்: “ஆண்டவரே, நீர் பூர்வகாலத்தில் சம்பாதித்த உமது சபையையும், நீர் மீட்டுக்கொண்ட உமது சுதந்தரமான கோத்திரத்தையும், நீர் வாசமாயிருந்த சீயோன் பர்வதத்தையும் நினைத்தருளும்” (சங். 74:2). அதுபோலவே, ஆபகூக் தீர்க்கதரிசி ஜெபித்தார். “கர்த்தாவே, வருஷங்களின் நடுவிலே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும், வருஷங்களின் நடுவிலே, அதை விளங்கப்பண்ணும்; கோபித்தாலும், இரக்கத்தை நினைத்தருளும்” (ஆப. 3:2).

தேவபிள்ளைகளே, இந்த பரிசுத்தவான்களைப் போல நீங்களும், “ஆண்டவரே, என்னுடைய நாட்களைப் புதிதாக்கும்” என்று மன்றாடுவீர்களா? கோடை காலத்திற்குப் பிறகு, வசந்த காலம் வருகிறதுபோல, உங்களுடைய வறண்ட நாட்களுக்கு அடுத்ததாக, கர்த்தரின் ஆறுதலின் நாட்கள் வருகின்றன.

நினைவிற்கு:- “தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக்கண்ட வருஷங்களுக்கும், சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்” (சங். 90:15).