மூன்று காரியங்கள்!

“உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்” (சங். 18:35).

இங்கே, மூன்று முறை “உம்முடைய” என்கிற வார்த்தை திரும்பத் திரும்ப வருகிறது. 1. உம்முடைய கேடகம் 2. உம்முடைய வலதுகரம் 3. உம்முடைய காருணியம். இதை சற்றே சிந்திப்போமா?

1. உம்முடைய இரட்சிப்பின் கேடகம்:- “தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர்” (நீதி. 30:5). “கேடகம்” உங்களுக்குப் பாதுகாப்பைத் தருகிறது. சாத்தான் உங்கள்மேல் தீய அம்புகளை எயும்போது, பொல்லாத மனுஷர் பில்லி சூனியங்களைக் கொண்டு, உங்களைத் தாக்கும்போது, கர்த்தர் ஒருவரே உங்களுக்கு கேடகமாய் இருக்கிறார். உங்கள்மேல் வரவேண்டிய ஆக்கினையை, இயேசு கிறிஸ்து தம்மேல் சுமந்தார்.

யுத்தக்களத்திலே விரோதி அம்புகளை எய்வான், ஈட்டிகளை வீசுவான். ஆனால் எந்த ஒரு மனுஷன், தன்னுடைய கைகளில் கேடகம் ஏந்தி நிற்கிறானோ, அவன் பாதுகாக்கப்படுவான். தேவபிள்ளைகளே, கர்த்தரே உங்களுக்குக் கேடகமாய் இருக்கிறார். “அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்” (சங். 91:4).

2. உம்முடைய வலதுகரம்:- கர்த்தருடைய புயம், “ஓங்கிய புயம்” என்றும், “உயர்ந்த கரம்” என்றும் வேதம் சொல்லுகிறது. அன்பு தேவன், உங்களை தம்முடைய நித்திய புயத்திற்குள்ளாக, வல்லமையான கரங்களுக்குள்ளாக மறைத்துப் பாதுகாக்கிறார். “அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்” (உபா. 33:27).

மோசே, இஸ்ரவேல் ஜனங்களை, அந்த தேவனுடைய பலத்த கரத்திலே ஒப்புவித்தார். காரணம் தேவனுடைய கரங்களே என்றும் நிலைத்து நிற்கும் கரங்கள்! உங்களுடைய கால்கள் கல்லில் இடறாதபடி பாதுகாக்கும் கரங்கள் (1 சாமு2:9). ஒருபோதும் சலித்துக்கொள்ளாமல், உங்களை முதிர்வயது மட்டும் தூக்கிச் சுமக்கும் கரங்கள் (ஏசாயா 46:4). தேவபிள்ளைகளே, தேவனுடைய கரம், உங்களோடுகூட இருக்குமென்றால், நீங்கள் பெரியவர்களாய் இருப்பீர்கள்.

3. உம்முடைய காருணியம்:- “உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்” (சங். 18:35). நீங்கள் பெரியவர்களாவது, உங்களுடைய திறமையினாலோ, அல்லது சன்மார்க்கத்தினாலோ அல்ல. கர்த்தருடைய காருணியத்தினால் தான். கர்த்தர் காருணியத்தால், உங்களை இழுத்துக் கொண்டார் (எரே. 31:3). அவருடைய காருணியத்தினாலும், உங்களை அழைத்தார் (2 பேதுரு 1:3). அவருடைய காருணியம் என்னுங் கேடகத்தினால், அவர் உங்களைப் பாதுகாத்தார் (சங். 5:12).

தேவபிள்ளைகளே, கர்த்தருடைய பாதுகாக்கும் கரம், கர்த்தருடைய காருணியம் எப்பொழுதும் உங்களோடுகூட இருக்கட்டும். அப்போது நீங்கள் பெரியவர்களாவீர்கள். சத்துருக்களுக்கு முன்பாக, கர்த்தர் உங்கள் தலையை உயர்த்தி, பெரியவனாக்குவார். உங்களை எதிர்த்து நிற்கிறவர்களின் மத்தியிலே, விசேஷித்த ஞானத்தையும், பெலத்தையும் கொடுத்து, உங்களைப் பெரியவர்களாக்குவார்.

நினைவிற்கு:- “அவருடைய காருண்யம் எத்தனை பெரியது? அவருடைய சௌந்தரியம் எத்தனை பெரியது? தானியம் வாலிபரையும், புது திராட்சரசம் கன்னிகைகளையும் வளர்க்கும்” (சக. 9:17).