வழுவாதபடி காப்பவர்!

“வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவர்” (யூதா 1:24).

இன்று, இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொருவரையும் பார்த்து, “மகனே, மகளே, உன் ஓட்டத்தை கடைசி வரையிலும் வெற்றியோடு ஓடச்செய்ய நான் வல்லமையுள்ளவர். உன்னை வழுவாதபடிக் காத்துக்கொள்ள நான் வல்லமையுள்ளவர். என்னுடைய வல்லமையைத் தரித்துக்கொள்” என்று உற்சாகப்படுத்துகிறார்.

ஒருவேளை கடந்த நாட்களில், பலமுறை நீங்கள் வழுவிப்போய் இருந்திருக்கக்கூடும். உங்களுடைய கால்கள் சறுக்கியிருந்திருக்கக் கூடும். ஆனால் ஆண்டவர் உங்களைக் கைவிடவில்லை. நீங்கள் வழி விலகிச் செல்ல, அவர் ஒப்புக்கொடுக்கவேயில்லை. அவருடைய பலத்த கரத்தை நோக்கிப் பாருங்கள். அவருடைய கரம் உங்களை வழுவாதபடி காக்க வல்லமையுள்ளது.

ஒருமுறை, ஆல்ப்ஸ் மலையை சுற்றிக் காண்பிக்கும்படி, ஒரு செல்வந்தனை சுற்றுலா வழிகாட்டி அழைத்துச் சென்றான். ஆல்ப்ஸ் மலையில் ஏறுவதற்கு, அந்த செல்வந்தனுக்கு மிகவும் பயமாகி விட்டது. ஆனால் அந்த வழிகாட்டி, அவ்வப்போது, தன்னுடைய உறுதி வாய்ந்த கரங்களை நீட்டி, செல்வந்தன் கீழே விழுந்து விடாமலும், வழுவி விழாமலும், பாதுகாப்பாக அழைத்துச் சென்றான். இன்னும் சற்று உயரமான மலையில் ஏறினதும், அந்த செல்வந்தன் தன்னை அறியாமல் கீழே நோக்கிப் பார்த்தான். அங்கே அகலமான பாதாளம் இருப்பதைப் போல தெரிந்தது. அவன், எப்பொழுது கீழே நோக்கிப் பார்த்தானோ, அப்பொழுதே மரண பயம் அவனைப் பிடித்துக் கொண்டது.

அந்த வழிகாட்டி அவனைப் பார்த்து, “ஐயா, நான் ஏறக்குறைய முப்பது ஆண்டுகள், இந்த ஆல்ப்ஸ் மலையில் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறேன். ஆயிரக்கணக்கான மக்களுக்கு, இந்த மலையைச் சுற்றி காண்பித்திருக்கிறேன். ஆனால் ஒருவர்கூட, இதுவரை என் கைகளிலிருந்து வழுவி கீழே விழுந்தது இல்லை. என் கைகளைப் பாருங்கள்” என்று காண்பித்தார். அப்பொழுது, அவருடைய பயம் எல்லாம் மறைந்து போயிற்று.

தேவபிள்ளைகளே, கர்த்தருடைய கரத்தை நோக்கிப் பாருங்கள். அவருடைய கரம் உங்களை விழாமல் கடைசி வரையிலும், வழி நடத்த வல்லமையுள்ளதாக இருக்கிறது. அவருடைய பலத்த கரத்திலிருந்து, உங்களை யாரும் பறித்துக்கொள்ள முடியாது. அவர் உங்களைத் தமது கரத்தில் வரைந்திருக்கிறார். இயேசு கிறிஸ்து சோல்லுகிறார்: “நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும், அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை” (யோவான் 10:28).
நீங்கள் வழி விலகிப் போவதற்காகவா, அவர் உங்கள்மேல் அன்பு வைத்தார்? நீங்கள் வழி விலகிப் போவதற்காகவா, அவர் உங்களுக்குக் கிருபை பாராட்டி, சிலுவையிலே நொறுக்கப்பட்டார்? உங்களை வழுவிப் போகச் செய்வதற்காகவா ஆவியானவர், பரிசுத்த ஆவியினால் முத்திரையிட்டார்? நீங்கள் வழி விலகிப் போக உங்களைக் கர்த்தர் ஒருபோதும் ஒப்புக்கொடுக்கமாட்டார்! உங்களுடைய விசுவாசத்தைத் துவக்கின அவர், விசுவாசத்தை முடிக்கச் செய்ய, வல்லமையுள்ளவராய் இருக்கிறார் (எபி. 12:1).

நினைவிற்கு:- “உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன், உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்” (ஏசாயா 26:3).