ராஜாக்களாக்கும் இரத்தம்

“உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, எங்கள் தேவனுக்கு முன்பாக, எங்களை ராஜாக்களும், ஆசாரியர்களுமாக்கினீர். நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்” (வெளி.5: 9,10).

விக்டோரியா மகா ராணியின் அரண்மனைக்கு, சற்று தூரத்தில் ஒரு ஏழை கிறிஸ்தவ பெண்மணி, அநேக குழந்தைகளோடு வசித்து வந்தாள். இந்த குடும்பத்தார் ஏழைகளாயிருந்தாலும், எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும், தேவனை துதித்துப் பாடிக்கொண்டிருப்பதையும், மகா ராணி கவனித்துக்கொண்டே வந்தார்கள்.

ஒரு நாள், தன் மனதில் ஏவப்பட்டவர்களாக, மகா ராணியார் தனது இரதத்தை, அந்த வீட்டின்முன் நிறுத்தி, அவர்களிடம், “சகோதரியே, நீங்கள் எப்பொழுதும் சந்தோஷமாய் இருக்கக் காரணம் என்ன?” என்று விசாரித்தார்கள். அதற்கு அந்த சகோதரி, மகா ராணி அவர்களே, இயேசு கிறிஸ்து தமது இரத்தத்தினால், எங்கள் பாவங்களையெல்லாம் மன்னித்து, எங்கள் அக்கிரமங்களையெல்லாம் நீக்கி, சாபங்களையெல்லாம் நீக்கிப்போட்டார். அவர் எங்களோடிருக்கிறபடியால், அவரிலே மகிழ்ந்து களிகூர்ந்துகொண்டேயிருக்கிறோம்” என்றாள்.

அந்த ஏழை சகோதரிக்கு, ஏதாவது உதவி செய்ய வேண்டுமென்று, மகா ராணி விரும்பினாலும், பெற்றுக்கொள்ள அந்த சகோதரி திட்டமாய் மறுத்துவிட்டாள். “எங்களுக்கு இயேசு போதும். பணம், செல்வம் ஒன்றும் வேண்டாம்” என்றாள். ஆனால் விக்டோரியா மகா ராணியோ விடவில்லை. திரும்பத் திரும்ப, உனக்கு என்ன தேவை என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். அதற்கு அந்த சகோதரி, “அம்மா, நீங்கள் பரலோகத்தில், என்னை தேவனுடைய சந்நிதியில் சந்திப்பேன் என்று வாக்குக்கொடுங்கள். அதுவே எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும்” என்றாள். அந்த பதில், விக்டோரியா மகா ராணியின் உள்ளத்தை அசைத்தது. ஆச்சரியப்பட வைத்தது. “ஆம், கிறிஸ்துவின் இரத்தத்தின் புண்ணியத்தினால், நான் நிச்சயமாகவே, பரலோகத்தில் உன்னை சந்திப்பேன்” என்று உறுதியான குரலிலே சொன்னார்கள்.

உண்மை தான். பரலோகத்துக்கு வழி, இயேசு கிறிஸ்துவின் இரத்தமே. இயேசு சொன்னார், “மரித்தேன், ஆனாலும் இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக் கிறேன். ஆமென், நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன் என்றார்” (வெளி. 1:18). இயேசு கிறிஸ்து, தம்முடைய இரத்தத்தால், நம்மோடு செய்த உடன்படிக்கை, இந்த உலக வாழ்க்கைக்கு மட்டும் உரியதல்ல. அது நித்தியமானது. “நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான இயேசு கிறிஸ்து” என்று அப்.பவுல் குறிப்பிட்டார் (எபி. 13:20).

நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு, “இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும், ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டு பண்ணினபடியால், அந்த மார்க்கத்தின் வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறது” (எபி. 10:19,20).

சீனாய் மலையிலே அவர் பண்ணின உடன்படிக்கை, கற்பலகையிலே எழுதப் பட்டது. அதினால் இஸ்ரவேலர் கானானை சுதந்தரித்தார்கள். ஆனால் கல்வாரியில் செய்த உடன்படிக்கையோ, கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் செய்யப்பட்ட மாறாத உடன்படிக்கை. நித்திய உடன்படிக்கை. பரம கானானுக்குள் நம்மைக் கொண்டு செல்லுகிறது. பரலோக வாசல்களை திறந்து வைக்கிறது.

நினைவிற்கு:- “அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே, சமாதானத்தை உண்டாக்கி, அவர் மூலமாய் நம்மை தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று” (கொலோ. 1:20).