சாபத்தை முறிக்கும் இரத்தம்!

“என்றைக்கும் அந்தச் சாபத்தை ஆசீர்வாதமாகத் திருப்பின எங்கள் தேவன்” (நெகேமியா 13:2).

“சாபம்” என்பது, ஒரு கொடிய வல்லமை. இயற்கையிலே பல வல்லமைகளைக் காணலாம். சுனாமி, பூமியதிர்ச்சி, மின்னல், இடிமுழக்கம் என்பவை திடீரென்று தாக்கும்போது, இயற்கை, கொடூரமாகி விட்டதை உணருகிறோம். அதுபோல ஒருவனை சாபங்கள் தாக்கும்போது, அகால மரணங்களையும், தீராத நோய்களையும், தாங்க முடியாத கடன் பிரச்சனைகளையும் கொண்டு வருகின்றன. “ஐயோ, இந்த சாபத்திலிருந்து யார் எங்களை விடுதலையாக்குவார்” என்று தவிக்கிறார்கள்.

அப். பவுல் சொன்னார், “மரத்திலே தூக்கப்பட்ட எவனும், சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்” (கலா. 3:13). “உன் தேவனாகிய கர்த்தர் பிலேயாமுக்குச் செவிகொடுக்கச் சித்தமில்லாமல், உன் தேவனாகிய கர்த்தர் உன்மேல் அன்புகூர்ந்தபடியினால், உன் தேவனாகிய கர்த்தர் அந்தச் சாபத்தை உனக்கு ஆசீர்வாதமாக மாறப்பண்ணினார்” (உபா. 23:5).

சென்னையில் ஒரு செல்வந்தனை, வைர வியாபாரி என்று அழைப்பார்கள். ஆனால் அவரது வியாபாரம் என்ன தெரியுமா? இரகசியமாக, ஏராளமான சின்னஞ் சிறு குழந்தைகளை, சென்னையிலிருந்து கடத்திச் சென்று, மலேசியா தேசத்தில் ரப்பர் தோட்ட முதலாளிகளுக்கு, அவர்களை அடிமையாய் விற்றுவிடுவார். அங்கிருந்து விலையேறப்பெற்ற முத்துக்களையும், இரத்தினங்களையும் கடத்தி வந்து, சென்னையில் வியாபாரம் செய்வார்.

அந்த சிறு பிள்ளைகளுடைய பெற்றோர், எப்படி அழுதிருப்பார்கள்! அந்த பிள்ளைகளும், அனாதைகளைப்போல, ரப்பர் தோட்டங்களிலே அவ்வளவு வேதனை அனுபவித்து, வேலை செய்திருப்பார்கள்! முடிவில் அந்த செல்வந்தன் மர்மமான முறையிலே மரித்தார். அவருடைய இரண்டு பிள்ளைகளும் பைத்தியமானார்கள். அவர் மனைவி, வீட்டைவிட்டு துரத்துண்டாள். சம்பாதித்த அத்தனை சொத்துக்களும் பறிபோயின. இன்றைக்கு அந்த குடும்பங்கள், முற்றிலுமாய் அழிந்தது. காரணம் என்ன? சாபங்கள். இன்னொரு மந்திரவாதியைத் தெரியும். பொறாமை கொண்டு, சில குடும்பங்கள் அழியும்படி மந்திரம் செய்வார். அவருடைய எட்டு பிள்ளைகளும், ஒருவர் பின் ஒருவராக, வாலிப வயதிலே மரித்துப் போனார்கள். அவரோ, இரத்தம் கக்கி, பரிதாபமாக மரித்தார். சாபம் அல்லவா?

அநேக பெற்றோர், தங்களுடைய மகனுக்கு திருமணத்தில், எங்கே பணம் கிடைக்கும்? எங்கே அதிகமான நகை கிடைக்கும்? என்று கணக்குப் போடுகிறார்களே தவிர, அந்த குடும்பத்திலே என்ன சாபங்கள் பின்தொடருகின்றது என்று கவனிப்பதில்லை. மனம்போல நடப்பதும், குடி, விபச்சாரத்தில் இறங்குவதும், குடும்பத்தை எத்தனை சாபங்களுக்குள்ளாக்கி விடுகிறது!
குற்றமற்ற இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்படும் முன்னால், யூதர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? “இவனுடைய இரத்தபழி எங்கள்மேலும், எங்கள் பிள்ளைகள்மேலும் இருப்பதாக” என்று சொன்னார்கள் (மத். 27:26). தேவனுடைய பிள்ளைகளே, இன்று குடும்பமாக சிலுவையண்டை வாருங்கள். மரத்திலே தூக்கப்பட்டு, சாபமான முள்முடியின் மூலம் வருகிற இரத்தம், சகல சாபங்களையும் முறிக்கும். ஆசீர்வாதத்தைத் தரும்.

நினைவிற்கு:- “இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும்” (வெளி. 22:3).