பரிந்து பேசும் இரத்தம்!

“மாம்சத்தின் உயிர், இரத்தத்தில் இருக்கிறது. நான் அதை உங்களுக்குப் பலிபீடத் தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன். ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது, இரத்தமே” (லேவி. 17:11).

ஒரு குடும்பத்தினர், ஜெபிக்கும்படியாக என்னை அழைத்திருந்தார்கள். அந்த வீட்டிலே இரவும், பகலும், “டொங், டொங்” என்கிற சத்தம் எங்கிருந்தோ எழும்பிக்கொண்டிருந்தது. இரண்டு, மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை, அந்த “டொங்” என்ற சத்தம் தொனித்துக் கொண்டேயிருந்தது. அது அவர்களுக்கு தொந்தரவாய் இருந்தது. அடிக்கடி பெலவீனத்தையும், வியாதியையும் கொண்டு வந்தது. நான் அந்த வீட்டிலிருக்கும்போதே, அந்த சத்தத்தை இரண்டு, மூன்று தடவை கேட்டு விட்டேன்.

ஒரு ஊழியர், விளக்கம் கொடுத்தார். நம் நாட்டில் “பூதம் காத்த புதையல்” என்பார்கள். இந்தியாவில், ஏழு பிறவிகளை நம்புகிற, சில செல்வந்தர்கள், அடுத்த பிறவியிலே தங்களுடைய செல்வங்களை அனுபவிக்க வேண்டுமென்று விரும்பி, வயதான காலத்தில் ஒரு பெரிய பானைக்குள் தங்களுக்கு இருக்கிற பொன், வெள்ளி, வைரம், முத்துக்கள் போன்றவற்றையெல்லாம் உள்ளே போட்டு, ஆழமான குழிக்குள் வைப்பார்கள். பிறகு எங்கிருந்தாவது, ஒரு சிறுவனை கடத்திக் கொண்டு வந்து, அவனுக்கு வேண்டிய உணவு, சுவீட்களையெல்லாம் கொடுத்து, அந்தக் குழியில் போடப்பட்ட நகைகளையும், பொக்கிஷங்களையும் காட்டி, இந்த நகைகளை நாங்கள் வந்து கேட்கும் வரை நீ கவனித்துக்கொள்ள வேண்டும். எங்களைத் தவிர வேறு யாருக்கும் கொடுக்கக் கூடாது என்று சத்தியம் செய்து, கொடுக்கச் செய்வார்கள்.

மறு வினாடியே, அந்த செல்வந்தன், தன் கையிலே மறைத்து வைத்திருக்கிற கூரிய கத்தியினால் சிறுவனின் கழுத்தை வெட்டி, அந்த இரத்தத்தோடுகூட, குழியிலே போட்டு புதைத்து விடுவதுண்டு. இப்படிப்பட்ட வன்முறையில் சிந்தப்பட்ட இரத்தமானது, இடைவிடாமல் சத்தமிட்டுக் கொண்டேயிருக்கும். பாருங்கள், காயீனுடைய காணிக்கை அங்கீகரிக்கப்படவில்லை என்பதை அறிந்ததும், அவன் எரிச்சலடைந்து, சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனை கொலை செய்தான். ஆம், இரத்தம் பேசக்கூடியது. ஆகவே, ஆபேலின் இரத்தம் பூமியிலிருந்து தேவனை நோக்கிக் கூப்பிட்டு முறையிட்டது. அதைக் கேட்ட கர்த்தர் பூமிக்கு இறங்கி வந்தார். காயீனைப் பார்த்து, “உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம், பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது என்றார்” (ஆதி. 4:10).

ஆனால் அன்பும், இரக்கமும், தயவுமுள்ள இயேசு கிறிஸ்து, சிலுவையிலே சிந்தின இரத்தம், நமக்காகப் பரிந்து பேசுகிறது. நமக்கு நன்மையானவைகளைச் செய்ய வேண்டுமென்று, பிதாவினிடத்திலே பேசிக்கொண்டேயிருக்கிறது. ஆம், அந்த இரத்தம் “பிதாவே, இவர்களுக்கு மன்னியும். தாங்கள் செய்கிறது இன்னது என்று அறியாதிருக்கிறார்களே” என்று கூப்பிட்டுக் கொண்டேயிருக்கிறது.

கிறிஸ்துவின் இரத்தம் உங்களுக்காக பரிந்து பேசியிராவிட்டால், எப்பொழுதுதோ, நீங்கள் துக்கத்தில் மூழ்கி போயிருந்திருப்பீர்கள். யோர்தானைப்போல நிந்தைகளும், அவமானங்களும் பொங்கி வந்தபோது, கிறிஸ்துவின் இரத்தம் அல்லவா உங்களை பாதுகாத்தது. “இந்த வருடம் இருக்கட்டும்” என்று கிறிஸ்துவின் இரத்தம் பிதாவினிடத்திலே கேட்டபடியால், இன்று நீங்கள் ஜீவனோடிருக்கிறீர்கள்.

நினைவிற்கு:- “நான் தாவீது குடும்பத்தாரின்மேலும், எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும், விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்” (சகரியா 12:10).