இரத்தத்தால் சபை!

“உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்” (அப். 20:28).

கிறிஸ்து சிந்தின சுயரத்தத்தினாலே, தமக்கென்று மணவாட்டி சபையை சம்பாதித்தார், ஸ்தாபித்தார். சிலுவைக்குப் பின்புதான், நாம் ஆராதிக்கிற “சபை என்ற அமைப்பு” உருவாயிற்று. கிறிஸ்துவானவர், தம்முடைய இரத்தத்தால் கழுவி, இரட்சிக்கப்பட்டவர்களை ஒன்றுகூட்டி, ஆவியால் இணைத்து, சபையாக மாற்றுகிறார். சபை இணையாவிட்டால், விசுவாசிகளுக்கு பெலன் இருப்பதில்லை. சிதறுண்டு போவார்கள்.

பழைய ஏற்பாட்டிலே, எகிப்தைவிட்டு வெளியே வந்த, இஸ்ரவேல் ஜனங்கள் சபை என்று அழைக்கப்பட்டார்கள். புதிய ஏற்பாட்டிலே, கிறிஸ்துவினுடைய இரத்தத்தால் கழுவப்பட்டவர்கள், ஆவிக்குரிய இஸ்ரவேலர்களாகி, சபையாகக் காணப்படுகிறார்கள். அவர்கள் பரலோகத்திலே பெயர் எழுதியிருக்கிற முதற் பேறானவர்களின் சர்வ சங்கமாகிய சபை என்று அழைக்கப்படுகிறார்கள் (எபி. 12:23). இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக் கொண்டு வந்தார் (அப். 2:47).

சுயரத்தத்தினால் மீட்கப்பட்ட, சபையின் விசுவாசிகளைப் பார்த்து, அப். பவுல் ஆலோசனை சொல்லுகிறார். “கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே. ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள், சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்” (1 கொரி. 6:20). ஆம், தேவபிள்ளைகளே, இயேசு உங்களை மீட்கும் பொருளாக, கிரயமாக, தம்முடைய இரத்தத்தையே ஊற்றிக்கொடுத்திருக்கிறார். ஆகவே நாம் எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்திருந்தாலும், சிலுவையண்டை வந்து நிற்கும்போது, ஒரே குடும்பத்தார் என்பதை உணருகிறோம். ஒரே இரத்தம், நம்மைக் கழுவி அரவணைத்திருக்கிறது. ஒரே ஆவியானவர் நமக்கு உண்டு. ஒரே ஆவியால், நாம் தாகம் தீர்க்கப்பட்டிருக்கிறோம். ஆகவே நாம் கர்த்தருடைய வீட்டார், தேவனுடைய மாளிகை, அவருடைய மேய்ச்சலின் ஆடுகள், திராட்சச்செடியாகிய அவரில் படரும் கொடிகள்.

சங்கீதக்காரன் சொன்னார், “இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும், எத்தனை இன்பமுமானது?” (சங். 133:1). நமக்காக இரத்தம் சிந்தி ஜீவனைக் கொடுத்த இயேசு, இரத்தப் பாசமுள்ள சகோதரன். அவர் நம்மை சகோதரர்கள் என்று சொல்ல அவர் வெட்கப்படவில்லை (எபி. 2:11). ஆம், இயேசு கிறிஸ்து நம்முடைய மூத்த சகோதரன். பரலோகத்திலிருக்கிற பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவர்களே, இனி நமக்கு சகோதர, சகோதரிகள். சபை கூடி வருவதாலும், சபை ஐக்கியத்திலும் நமக்குக் கிடைக்கிற பெரிய ஆசீர்வாதங்களில் ஒன்று என்றென்றைக்குமுள்ள ஜீவன். அதாவது நித்திய ஜீவன். “என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும், கிருபையும் என்னைத் தொடரும்” என்றார் தாவீது (சங். 23:6).

ஒரு குச்சியை முறித்துவிடலாம். நான்கு குச்சிகள் இணைந்திருக்குமானால், முறிக்க முடியாது. ஒரு மாட்டை சிங்கம் மேற்கொண்டுவிடலாம். ஆனால் நான்கு மாடுகள் சேர்ந்து மேய்ந்தால், சிங்கத்தால் ஒன்றும் செய்ய முடியாது. ஒருவருக் கொருவர் ஜெபிக்க, ஒருவருடைய பாரத்தை ஒருவர் சுமக்க, ஒருவர்மேலுள்ள அனல் மற்றவர்கள்மேல் பற்றியெரிய, சகோதர ஐக்கியமாகிய சபை எவ்வளவு அவசியம்!

நினைவிற்கு:- “எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும், அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது” (1 யோவா. 1:3).