ஆட்டுக்குட்டியும், உடன்படிக்கையும்!

“உன்னுடையவர்களை, நான் உன் உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலை பண்ணுவேன்” (சக. 9:11).

கிறிஸ்து தம்மைத்தாமே, அடிக்கப்படும் ஆட்டுக்குட்டியாக ஒப்புக்கொடுத்து, தம்முடைய இரத்தத்தினாலே உடன்படிக்கை செய்திருக்கிறார். வேதத்தில் நான்கு இடங்களில் “என் இரத்தத்தின் உடன்படிக்கை” என்று அவர் சொல்லுகிறார் (மத். 26:28, மாற். 14:24; லூக். 22:20; 1 கொரி. 11:25).

இயேசுகிறிஸ்து இன்றைக்கு, பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருந்தாலும், அந்த உடன்படிக்கையை நினைவுகூரும்படி, “இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருக்கிறார்” (வெளி. 19:13). உலகத்தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாகவும் (வெளி. 13:8), அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டியாகவும், அவர் காட்சியளிக்கிறார் (வெளி. 5:6).

இயேசுகிறிஸ்து, நம்மோடு செய்த இரத்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்து, பிதாவிடம் தம்முடைய இரத்தம் தோய்ந்த கரங்களைக் காண்பித்து, “என் பிள்ளைகளுக்காக, நான் இரத்தஞ் சிந்தியிருக்கிறேன். அவர்களுக்கு விரோதமாக இருக்கிற எல்லா பில்லி சூனியக்கட்டுகளும், சாபங்களும் முறிக்கப்பட வேண்டும். அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று மன்றாடிக்கொண்டேயிருக்கிறார்.

நீங்கள் கல்வாரி சிலுவையண்டை வந்து, இரத்த உடன்படிக்கை செய்து கொள்ளும்போது, உங்களுடைய பாவங்களைக் கழுவி, அவர் தமது இரத்தத்தால் சுத்திகரிப்பார். கிழக்குக்கும், மேற்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் பாவங்களை அகற்றி விடுவார். மட்டுமல்ல, “நீ எனக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு உன்னைத் தடுத்தேன்” (ஆதி. 20:6) என்று சொல்லுகிறார்.

முதன்முதலில், “உடன்படிக்கை” என்ற வார்த்தை வருவது, ஆதி. 6:18-ல் தான். கர்த்தர் நோவாவோடு ஜலப்பிரளயத்திற்கு முன்பும், உடன்படிக்கை செய்தார் (ஆதி. 6:18), பின்பும், உடன்படிக்கை செய்தார் (ஆதி.9:10-17). இங்கேயும் இரத்த உடன்படிக்கையை நினைவுகூரும்படி, அந்தப் பேழையின் உள்ளும், புறம்பும், கீல் பூசு என்று சொன்னார் (ஆதி. 6:14). “கீல் பூசுவது,” இயேசுவின் இரத்தத்தை பூசுவதற்கு அடையாளம். “உள்ளும், புறம்பும்” என்பது, நம்முடைய உள்ளான வாழ்க்கையையும், வெளியரங்கமான வாழ்க்கையையும் குறிக்கிறது.

ஜலப்பிரளயத்திற்கு பின்பு, நோவா செய்த முதல் காரியம், “கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும், சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டார்” (ஆதி. 8:20). “பலிபீடம்” கல்வாரி சிலுவைக்கு அடையாளமானது. சுத்தமான மிருகஜீவன்களை பலியிட்டதினிமித்தம், கர்த்தர் மீண்டும் நோவாவோடு உடன்படிக்கை செய்து, அடையாளமாக தனது வில்லை மேகத்தில் வைத்தார்.

தேவபிள்ளைகளே, இயேசுவின் இரத்தத்தை, அக்கினி வெடிக்குண்டைப்போல, சாத்தான் மீது வீசி எறியும் போது, எல்லா அந்தகார வல்லமைகளும், நீங்கிப்போய் விடக்கூடும். குடும்ப வாழ்க்கையில் ஐக்கியத்தைக் கெடுக்கிற, எல்லா தடைகளும் நொறுங்கிப் போகும். உலகம், பிசாசை முறியடித்த கிறிஸ்து, நிச்சயமாகவே, தம்முடைய இரத்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்து, உங்களுக்கு ஜெயத்தின்மேல் ஜெயத்தைத் தருவார்.

நினைவிற்கு:- “ஆகையால், உன் தேவனாகிய கர்த்தரே தேவன் என்றும், தம்மில் அன்புகூர்ந்து, தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறைமட்டும் உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன்” (உபா. 7:9).