இரத்தத்தினால் சமாதானம்!

“அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று” (கொலோ. 1:20).

இன்றைக்கு உலகத்தில் கிடைக்காத ஒரு பொருள் சமாதானமாகும். பெரிய செல்வந்தர்களானாலும் சரி, அரசியல்வாதிகளானாலும் சரி, நடிகர், நடிகை களானாலும் சரி, சமாதானமில்லாமல் தத்தளிக்கிறார்கள். “ஏதோ, ஒரு வேதனை இரவும், பகலும் எங்களுடைய உள்ளத்தை அரித்துக்கொண்டிருக்கிறது. உள்ளம் அலை மோதிக்கொண்டு, இனம் புரியாத ஒரு பயத்தினால் ஆளப்பட்டு வருகிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை” என்கிறார்கள். தங்களுடைய பாவங்களை அறிக்கை செய்து விட்டு விடாதவரையிலும், அவர்களுடைய உள்ளம் கலங்கிக் கொண்டுதான் இருக்கும். “துன்மார்க்கருக்குச் சமாதானமில்லை” (ஏசா. 57:21).

உலக மனுஷர், சமாதானத்தின் வழியை அறியாமல் தடுமாறுகிறார்கள். குடும்பத்திலே சமாதானமில்லை, தேசத்திலே சமாதானமில்லை. எங்கு பார்த்தாலும் யுத்தங்களும், யுத்தங்களின் செய்திகளும் உள்ளத்தைக் கலங்கப்பண்ணுகிறது. பயங்கரவாதத்தை எதிர்த்து போர்செய்து, சமாதானத்தைக் கொண்டுவருவோம் என்று, அமெரிக்க ஜனாதிபதியான ஜார்ஜ் புஷ் சூளுரைத்தார். ஆனால் தீவிரவாதங்கள் பெருகினதே தவிர, குறையவில்லை. கடல் இருக்கிறவரை அலைகள் இருக்கும். அதுபோல சாத்தான் இருக்கிற வரை, தீவிரவாதங்களும், கொலைகளும், இருக்கத் தான் செய்யும்.

ஆனால் இந்த பூமிக்கு சமாதானத்தைக் கொண்டு வரவே, இயேசு கிறிஸ்து, இந்த உலகத்துக்கு வந்தார். “சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை” (ஆதி 49:10). இயேசு கிறிஸ்துவே, வாக்களிக்கப்பட்ட சமாதானப் பிரபு (ஏசா. 9:6). அவர் சமாதானக் காரணர் (மீகா 5:5). இயேசு இந்த பூமியிலே பிறந்தபோது, தேவதூதர்களெல்லாம் உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி தேவனைத் துதித்தார்கள் (லூக். 2:14). இஸ்ரவேலின் ஆறுதல் வரக் காத்திருந்த சிமியோன், இயேசுவை தன் கைகளில் ஏந்தி, “ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்” (லூக். 2:29) என்று சொல்லி ஸ்தோத்திரித்தார்.
இயேசு கிறிஸ்து ஏன் இரத்தம் சிந்தி சிலுவையிலே பாடுபட்டு ஜீவனைக் கொடுத்தார்? ஆம், அவருடைய இரத்தம், உங்களுக்குள்ளே விழும்போது, பாவம் நீங்குகிறது. பிசாசு விலகுகிறது. தெய்வீக வெளிச்சமும், மகிமையும், உங்களுக்குள்ளே இறங்கி வருகிறது. கிறிஸ்துவின் இரத்தத்தை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும்போது, எல்லாப் புத்திக்கும் மேலான, தேவ சமாதானம் உங்களுக்குள் இறங்கி வரும். ஜீவநதி போன்ற தேவ சமாதானம் உங்களுடைய உள்ளத்தை மகிழ்விக்கும்.

கிறிஸ்துவின் இரத்தத்தால், நீங்கள் கழுவப்படும்போது, உங்கள் வாழ்க்கையிலே புயல் வீசினாலும், கடல் கொந்தளித்தாலும் சமாதானப் பிரபு எழுந்து, “இரையாதே, அமைதலாயிரு” என்று கட்டளையிடுவார். உயிர்த்தெழுந்த பிறகு, இயேசு சீஷர்களோடு பேசின முதல் வார்த்தை “உங்களுக்கு சமாதானம்” என்பதேயாகும். இந்த சமாதானம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தால் உங்களுக்கு கிடைக்கிற மாபெரும் சிலாச்கியமாகும்.

நினைவிற்கு:- “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன். என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை” (யோவா. 14:27).