இரத்தத்தால் ஜெயம்!

“ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும், தங்கள் சாட்சியின் வசனத்தினாலும், அவனை ஜெயித்தார்கள்” (வெளி. 12:11).

இந்த மாதம் ஆரம்பத்திலிருந்து, கிறிஸ்துவினுடைய இரத்தத்தைக் குறித்தும், இரத்தத்தால் வருகிற பலவிதமான ஆசீர்வாதங்களைக் குறித்தும், தியானித்து வருகிறோம். இயேசு கிறிஸ்துவின் இரத்தம், மனுக்குலத்திற்கு தேவனால் கொடுக்கப் பட்ட, பெரிய ஈவாகும். இயேசுவின் இரத்தம் இல்லாவிட்டால், சுவிசேஷம் இல்லை, பாவ மன்னிப்பு இல்லை, இரட்சிப்பு இல்லை. சாத்தானிடமிருந்தும், பாதாளத் திலிருந்தும், நித்திய அக்கினியிலிருந்தும் மீட்கப்பட வேறு வழியில்லை.

இயேசுவின் இரத்தத்தை, நீங்கள் தியானிக்கும்போது, அந்த இரத்தம், எவ்வளவு வேதனைகள், நிந்தைகள், அவமானங்கள் வழியாக வழிந்து வந்திருக்கிறது என்பதை இணைத்தே சிந்தித்துப்பாருங்கள். உலகத்தில், எந்த மனிதரும் பட்டிராத அளவு, அத்தனைப் பாடுகளையும், இயேசு அனுபவித்தார். வானத்துக்கும், பூமிக்கும் நடுவே, சிலுவை மரத்திலே தொங்கி சாபமானார். சரீரப் பாடுகளைப் பார்க்கிலும், ஆத்தும வியாகுலம், எவ்வளவு வேதனையானது! என்றைக்கு நீங்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டு, இரட்சிக்கப்பட்டீர்களோ, அன்றைக்கு இருளின் ஆதிக்கத்திலிருந்தும், சாத்தானின் பிடியிலிருந்தும், மீட்டெடுக்கப்பட்டு, அன்பின் குமாரனாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்துக்குள் வந்து விட்டீர்கள். இதனால் சாத்தான், உங்களுக்கு எதிராளியாக மாறி, கொடூரமாய் உங்கள்மேல் அக்கினியாஸ்திரங்களை எய்ய ஆரம்பிப்பான். உலகம், மாம்சம், பிசாசு என்னும், அந்தகார லோகாதிபதிகள், வான மண்டலத்திலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகள் உங்களோடு போராட ஆரம்பிக்கும். ஆனாலும் பயப்படாதிருங்கள். கிறிஸ்துவின் இரத்தத்தோடு, “பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்” (யாக். 4:7).

சாத்தான் ஒரு பயங்கரமான சிங்கம். யாரை விழுங்கலாமோ என்று வகைத் தேடி, சுற்றித்திரிகிற சிங்கம் (1 பேது. 5:8-9). அதே நேரம், கர்த்தரும் யூத ராஜ சிங்கமாய், உங்களுடைய அருகிலே நிற்கிறார் (வெளி. 5:5). சிங்கத்தின்மேலும், வலுசர்ப்பத்தின் மேலும், கர்த்தர் உங்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார். சிங்கத்தின்மேலும், விரியன் பாம்பின்மேலும் நடந்து, பால சிங்கத்தையும், வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுங்கள். கிறிஸ்துவின் இரத்தத்தால், சாத்தானுடைய தந்திரங்களையும், சதி ஆலோசனைகளையும் முறியடியுங்கள். ஒரு தேளின் கொடுக்கு, கூரிய கத்தியினால் நறுக்கப்பட்டுவிட்டால், அதனுடைய விஷம் உங்கள்மேல் இறக்க முடியாது. அதுபோல கரு நாகப்பாம்பின் விஷப்பற்களைப் பிடுங்கி விட்டால், அது என்ன தான் சீறினாலும், உங்களை சேதப்படுத்த முடியாது. அதுபோல, பால சிங்கம், பலமாக இரும்பு சங்கிலியினால் கட்டப்பட்டிருக்குமேயானால், உங்கள்மேல் பாய முடியாது. தேவபிள்ளைகளே, உங்களுடைய வாழ்க்கையிலே, கர்த்தர் கல்வாரிச் சிலுவையிலே பெற்ற ஜெயத்தை செயல்படுத்துங்கள். இயேசுவின் நாமத்தினாலே, ஒவ்வொரு சோதனைகளையும், போராட்டங்களையும் மேற்கொள்ளுங்கள். இந்த உலகத்தில் ஜெயங்கொண்ட வாழ்க்கையை, கர்த்தர் உங்களுக்கு வாக்குப் பண்ணி யிருக்கிறார்.

நினைவிற்கு:- “கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” (2 கொரி. 2:14).