பாவ மன்னிப்பாகிய இரட்சிப்பு!

“இவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது” (எபே. 1:7). “அவருடைய இரத்தத்தினாலே, பாவ மன்னிப்பாகிய மீட்பு, நமக்கு உண்டாயிருக்கிறது” (கொலோ. 1:14).

பாவ மன்னிப்பையும், இரட்சிப்பையும், எல்லா மனுஷர்களும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக, இயேசுகிறிஸ்து எருசலேம் நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார் (எபி. 13:12). எருசலேம் நகர வாசலுக்குள் பாடுபட்டிருந்தால், பாவ மன்னிப்பாகிய இரட்சிப்பு, யூதருக்கு மட்டுமே கிடைத்திருக்கும். ஆனால் நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டபடியினால், எந்த மனுஷனும் அவரண்டை வந்து, இரட்சிப்பின் சந்தோஷத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்!
“எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான்” (சங். 32:1). “இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது” (எபி. 9:22). ஆத்துமாவிற்காகப் பாவநிவர்த்தி செய்கிறது இரத்தமே” (லேவி. 17:11). மாம்சத்தின் உயிர் அதின் இரத்தத்தில் இருக்கிறது. ஆகவே, நம்முடைய இரத்தத்தை சுத்திகரிக்கும்படி, பாவக் கறைகளை நீக்கி, பரிசுத்தமாகும்படி, இயேசுகிறிஸ்து, தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தை சிந்திக்கொடுத்தார். பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களின் பாவங்களை, ஆடு மாடுகளின் இரத்தம் மூடினது. ஆனால் கிறிஸ்துவின் இரத்தம் மட்டுமே, மனிதனை பாவமறக் கழுவி, பரிசுத்தவான்களாக்குகிறது.

இயேசுகிறிஸ்து, தாம் காட்டிக் கொடுக்கப்படுகிற அன்று, இராத்திரியிலே பாத்திரத்தையும் எடுத்து, “இது பாவமன்னிப்புண்டாகும்படி, அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது” (மத். 26:27,28) என்று சோன்னார். “நீங்கள் அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும், மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே, மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே” (1பேதுரு 1:18,19).

இயேசு சாட்சியாக, தமது இரத்தத்தை பூமியிலே ஊற்றி, அந்த இரத்தத்தின் துளிகளை, இங்கேயே விட்டுவிட்டு போயிருக்கிறார். அந்த இரத்தத்தால் நமக்கு எவ்வளவு பெரிய ஆசீர்வாதம்! அந்த இரத்தம் நம்முடைய பாவ மன்னிப்புக்கென்று சிந்தப்பட்டிருக்கிற இரத்தம் (மத். 26:28). நம்மை பாவங்களற கழுவி சுத்திகரிக்கும் இயேசுகிறிஸ்துவின் இரத்தம் (1 யோவான் 1:7). நம்மைத் தைரியப்படுத்தி, பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு, தகுதிப்படுத்தும் இரத்தம் (எபி. 10:20). நம்முடைய மீட்பின் விலைக்கிரயமாக செலுத்தப்பட்ட, குற்ற நிவாரணபலியான ஆட்டுக்குட்டியின் இரத்தம் (1 பேதுரு 1:19). தேவனுடைய கோபாக்கினையிலிருந்து நம்மை நீங்கலாக்கி நீதிமான்களாக்குகிற இரத்தம் (ரோமர் 5:9). சமாதானத்தை உண்டாக்கி தேவனோடுகூட ஒப்புரவாக்கிக்கொள்ளும் இரத்தம் (கொலோ. 1:20). நம்மை, பரிசுத்தமாக்கும் இரத்தம் (எபி. 13:12). நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கும் இரத்தம் (வெளி. 5:10).

“ஆண்டவரே, பிளவுண்ட உமது சரீரத்தின் காயங்களில் பாயும் இரத்த ஊற்றால், என்னை ஒருமுறையாகக் கழுவியருளும். என் உள்ளத்தின் ஆழங்களையும், நினைவுகளையும், அந்தரங்க ஜீவியத்தையும் தூய்மைப்படுத்தும் என்று மன்றாடுவீர்களா? தேவபிள்ளைகளே, கல்வாரி இரத்த ஊற்றை தியானஞ்செய்யுங்கள். பரலோக ஜீவ ஊற்று உங்களிலிருந்து புறப்படும்.

நினைவிற்கு:- “நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே” என்றார் (யோவான் 8:11).