தடையென்ன?

“இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன என்றார்” (அப். 8:36).

கர்த்தர் தடைகளைத் தகர்க்கிறவர். மனுஷன் கொண்டு வருகிற தடைகளானாலும், பாரம்பரியங்கள் கொண்டு வருகிற தடைகளானாலும், கிறிஸ்தவர்களே கொண்டு வருகிற தடைகளானாலும், கர்த்தர் வல்லவருமாயிருந்து, அந்த தடைகளையெல்லாம் நீக்குகிறவர். பார்வோனின் தடைகளையும், சிவந்த சமுத்திரத்தின் தடைகளையும் கர்த்தர் நீக்கி, சிவந்த சமுத்திரத்துக்குள்ளாகவும், மேகத்துக்குள்ளாகவும், இஸ்ரவேலருக்கு ஞானஸ்நானம் கொடுத்தாரே! (1 கொரி. 10:2).

அப். 8-ம் அதிகாரத்தில், எத்தியோப்பியாவின் மந்திரி, பண்டிகையிலே கலந்துகொள்ளும்படி எருசலேமுக்கு வந்திருந்தார். அவருடைய உள்ளத்தை அறிந்த கர்த்தர், பிலிப்பு என்ற சுவிசேஷகனை வனாந்தரமார்க்கமாய் அனுப்பி, அந்த மனிதனை சந்திக்கும்படி செய்தார். பிலிப்பு இயேசுகிறிஸ்துவைக் குறித்து பிரசங்கித்தபோது, அவருக்குள்ளே உணர்த்துதல் வந்தது. “இதோ, தண்ணீர் இருக்கிறதே. நான் ஞானஸ்நானம் பெறுவதற்குத் தடையென்ன?” என்று கேட்டார். அதைக்கேட்டவுடனே, பிலிப்பு அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்.

தாமதத்தைக் கர்த்தர் விரும்புவதில்லை. நாளையத்தினம் உங்களுடையதல்ல. இதுவே அநுக்கிரகக் காலம். இதுவே இரட்சண்ய நாள். நீங்கள் கர்த்தருக்கு தடை செய்யாமல், செய்ய வேண்டியதை நீங்கள் செய்யும்போது, கர்த்தர் உங்களுக்காக எல்லா தடைகளையும் மாற்றிவிடுவார்.

ஒரு சகோதரி என்னிடம் வந்து, “ஐயா என் வீட்டில், 84 வயதுடைய என் தகப்பனார், மரித்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு சுய நினைவு இல்லை. தாங்கள் வந்து, அவருக்கு ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் என்று வருந்திக் கேட்டுக் கொண்டார்கள். நான் சொன்னேன், “சுயநினைவு இல்லாமலிருக்கும்போது, அவருக்கு ஞானஸ்நானம் கொடுப்பதில், எந்தப் பிரயோஜனமுமில்லை. அவர் தனது பாவங்களை யெல்லாம் அறிக்கையிட்டு, பாவ மன்னிப்பைப் பெற வேண்டும். கிறிஸ்து எனக்காக மரித்தார். அடக்கம் பண்ணப்பட்டு, உயிரோடு எழுந்தார் என்பதை விசுவாச அறிக்கையிட வேண்டும். அப்படியில்லாத சூழ்நிலையில், அவருக்கு ஞானஸ்நானம் கொடுப்பதில், எந்தப் பிரயோஜனமுமில்லை” என்று சொன்னேன்.

பின்பு அவர்களைப் பார்த்து, அவர் சுய நினைவோடு இருந்த, 84 வயது வரையிலும், என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? ஏன் தாமதித்து கர்த்தருடைய கட்டளைகளை அசட்டை செய்தீர்கள்? என்று கேட்டேன். அந்த சகோதரி மௌனமாகி விட்டார்கள். “விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான். விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்” (மாற். 16:16).
“ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” (யோவா. 3:5). கர்த்தருடைய கட்டளையின்படி, முழுக்கு ஞானஸ்நானம் பெறுவதால், நீங்கள் ஒன்றும் குறைந்துபோவதில்லை. ஆனால் இந்த சின்ன காரியத்துக்கு விதண்டாவாதம் பண்ணி, மரிக்கும்போது, பரலோகம் உங்களை புறக்கணித்தால் என்ன செய்வீர்கள்? நீங்கள் ஒருபோதும் கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய கால தாமதம் செய்யக்கூடாது.

நினைவிற்கு:”இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன ? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு ,ஞானஸ்நானம் பெற்று ,உன் பாவங்கள் போகக் கழுவப்படு “(அப் 22:16)