தடை செய்யாதிருங்கள்!

“யோவான் அவருக்குத் தடை செய்து, நான் உம்மாலே ஞானஸ்நானம் பெற வேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான்” (மத். 3:14).

ஸ்திரீகளில் பிறந்தவர்களுக்குள்ளே, “பெரியவன்” என்று அழைக்கப்பட்ட யோவான்ஸ்நானகனை, அனைவரும், “திருமுழுக்கர்” என்று அழைப்பதுண்டு. அவ்வளவு பெரியவருக்கு, கர்த்தர் கொடுத்த, ஒரே வேலை முழுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதுதான். ஆகவே, அவர் தண்ணீர் நிறைந்த, “அயினோன்” என்ற இடத்தில், யோர்தான் நதியிலே, ஜனங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து வந்தார்.
அப்பொழுது, வரலாற்று சிறப்பு மிக்க ஒரு சம்பவம் நடந்தது. கர்த்தர் யோவான்ஸ்நானகனை கொண்டு ஞானஸ்நானம் கொடுக்கும்படி தெரிந்துகொண்டு அழைத்தாரே, அவரே முன்மாதிரியை காண்பித்து, யோவானால் ஞானஸ்நானம் பெறும்படி, அவரிடத்தில் வந்தார். நான் நினைக்கிறேன், இயேசுவை கண்டதும், யோவான்ஸ்நானகனுக்கு கையும், காலும் ஓடியிருந்திருக்காது. “யோவான் அவருக்குத் தடை செய்து, நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றார்” (மத். 3:14).

காரணம், நான் சாதாரண ஜலத்தினால்தான் ஞானஸ்நானம் கொடுக்கிறேன். ஆனால் இயேசு கிறிஸ்துவோ, பரிசுத்த ஆவியினாலும், அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுக்கிற தேவன். யோவான் தடை செய்தாலும், கிறிஸ்து அந்த தடையை நீக்கிப்போட்டு, “இப்பொழுது இடங்கொடு. இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது” என்றார். அப்பொழுது யோவான் அவருக்கு இடங்கொடுத்தான்.

எனக்கு ஒரு மூத்த சகோதரன் இருந்தார். அவர் எப்பொழுதும் கர்த்தருடைய கட்டளையாகிய முழுக்கு ஞானஸ்நானத்திற்கு எதிர்த்து நின்றுகொண்டேயிருந்தார். இதனால், அவருடைய குடும்ப ஆசீர்வாதம், தடைபட்டுக்கொண்டே வந்தது. எந்த காரியம் செய்தாலும், அது வாய்ப்பதில்லை. குடும்பத்திலே அமைதியும், சமாதானமுமில்லை. எப்போதும் புயல் வீசிக்கொண்டிருந்தது. குடும்பத்தில் கொந்தளிப்பின்மேல் கொந்தளிப்பு.

தற்செயலாய், ஒரு போதகர் யோனாவைப் பற்றி பிரசங்கித்தார். கர்த்தருக்கு கீழ்ப்படியாத யோனாவினால், கடல் கொந்தளித்தது. அவரால், கப்பலில் பயணம் செய்த அத்தனைபேருக்கும், கஷ்டம், நஷ்டம். கப்பல் சரக்குகளை, வீணாய் கடலிலே எறிந்தார்கள். யோனாவை தண்ணீருக்குள் போட்டபோது மட்டுமே கொந்தளிப்பு அமர்ந்தது. சிலரைத் தண்ணீரிலே தூக்கிப்போட்டு, முழுக்கு ஞானஸ்நானம் கொடுத்தால்தான், இந்த கொந்தளிப்பு அமரும் என்று போதகர் பிரசங்கித்தார். அந்த வார்த்தை, என்னுடைய சகோதரனை தொட்டது. கர்த்தர் அவருடைய உள்ளத்திலே பேசி, எல்லா தடைகளையும் அகற்றினார். ஆகவே அந்த குடும்பத்தில், மீண்டும் சந்தோஷம் நிலவினது.

ஒரு கூட்டத்தார், “யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட ஆயக்காரர், முதலான சகல ஜனங்களும் அவனாலே ஞானஸ்நானம் பெற்று, தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டார்கள்” (லூக். 7:29). மற்ற கூட்டத்தார் யார்? “பரிசேயரும், நியாய சாஸ்திரிகளுமோ, அவனாலே ஞானஸ்நானம் பெறாமல், தங்களுக்குக் கேடுண்டாகத் தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்” (லூக். 7:30). தேவபிள்ளைகளே, கர்த்தருடைய கட்டளைகள் சிறியதோ, பெரியதோ, உங்களைத் தாழ்த்தி, தேவ நீதியை நிறைவேற்றுங்கள்.

நினைவிற்கு:- “விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான். விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்” (மாற். 16:16).