தடைபடாது!

“தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர். நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்” (யோபு 42:2).

அநேகருடைய வாழ்க்கையிலே, பல தடைகள், பல போராட்டங்கள், பல பிரச்சனை களினால் முன்னாலே செல்ல முடியவில்லை. “திருமணக் காரியங்களிலே என்ன முடிவெடுப்பது? ஒரே தடையாயிருக்கிறது.” தொழில் ஆரம்பிக்க வேண்டுமானாலும் சரி, வீடு கட்ட வேண்டுமானாலும் சரி, ஏராளமானத் தடைகள்.

இன்றைக்கு கைகளை உயர்த்தி, கர்த்தருக்கு முன்பாக நின்று, “தேவரீர் சகலத் தையும் செய்ய வல்லவர். நீர் செய்ய நினைத்தது தடைபடாது” என்று அறிந்திருக் கிறேன்” என்று சொல்லுங்கள். நிச்சயமாகவே, “கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்” (ஏசா. 53:10). கர்த்தரை நம்பி, அவரிலே சார்ந்து கொள்ளும் போது, கர்த்தர் தாமே, எல்லாத் தடைகளையும் நீக்கி, உங்களுக்கு குறித்ததை நிச்சயமாகவே கொண்டு வருவார். அதை யாராலும் தடுக்கவே முடியாது.

நானும், நீங்களும் ஆராதிக்கிற தேவன் யார்? அவர் தடைகளைத் தகர்க்கிறவர் (மீகா 2:13). கரடு முரடானவைகளை, சமமாக்குகிறவர் (ஏசா. 40:4). கோணலானவைகளைச் செவ்வையாக்குகிறவர் (ஏசா. 45:2). மலைகளை வழியாக்கி, பாதைகளை உண்டாக்குகிறவர் (ஏசா. 49:11). அவர் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குகிறவர் (ஏசா. 43:19).
தகப்பனில்லாத, ஏழைப் பெண்ணை திருமணம் செய்துகொள்ள ஒரு மாப்பிள்ளை விட்டார் வந்தார்கள். பெண்ணுக்கோ, மாப்பிள்ளையை மிகவும் பிடித்தது. ஆனால் அவர்கள் மிகவும் ஏழைகளாக, திருமணம் செய்துகொள்ளக்கூட பணம் இல்லாதவர் களாயிருந்தபடியாலே, அந்த திருமணம் நின்று போயிற்று. ஆனால் அந்த பெண்ணும், தாயும் மிகுந்த பக்தியுள்ளவர்களாயிருந்தபடியால், விடாப்பிடியாக கர்த்தருடைய பாதத்தைப் பிடித்து, “தேவனே, நீர் தான் எங்களுக்கு ஒத்தாசை செய்ய வேண்டும். நீர் செய்ய நினைக்கிற காரியம் தடைபடாது” என்று வேதம் சொல்லு கிறது. “கர்த்தாவே, உம்முடைய கையைத் தடுத்து, நீர் என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனுமில்லையே” (தானி. 4:35) என்று ஜெபித்தார்கள்.

மலைபோன்றிருந்த எல்லா தடைகளையும், கர்த்தர் ஒரே நிமிடத்திலே மாற்றிப்போட்டார். அனைவருடைய உள்ளத்திலும், நல்ல ஏவுதலைத் தந்து திருமணத்தை சிறப்பாக நடத்தினார். தேவபிள்ளைகளே, நீங்களும் கர்த்தர் பேரில் நம்பிக்கையாயிருங்கள். இன்றைக்கு எந்த பிரச்சனை, உங்கள் உள்ளத்தை ஒரு முள் போல குத்திக்கொண்டிருந்தாலும், கர்த்தரைத் துதிப்பீர்களென்றால், அந்த தடைகளை நீக்கிப்போடுவார்.
ஆனால், கர்த்தர் கிரியைச் செய்ய முடியாதபடி, உங்களுடைய வாழ்க்கை யிலிருக்கிற தடைகள் என்ன? என்று ஆராய்ந்துப் பாருங்கள். ஏசாயா தீர்க்கதரிசி சொல்லுகிறார், “உங்கள் அக்கிரமங்களே, உங்களுக்கும், உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது. உங்கள் பாவங்களே, அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு, அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது” (ஏசா. 59:2).

ஆகவே, கர்த்தர் உங்களை ஏவுவாரென்றால், குடும்பமாக ஒரு நாள் உபவாசமிருந்து உங்களுடைய பாவங்களுக்காகவும், மீறுதல்களுக்காகவும் மனம் கசந்து அழுது, கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுங்கள். மன்னிப்புக்காக கதறி அழுங்கள். அப்பொழுது கர்த்தர், மனமிரங்கி, தடைகளை அகற்றுவார். ஒரு வாசலைத் திறப்பார். நினைவிற்கு:- “ஒருவேளை கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார். அநேகம்பேரைக் கொண்டாகிலும், கொஞ்சம்பேரைக் கொண்டாகிலும், ரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை என்றான்” (1 சாமு. 14:6).