தடையாகிய எரிகோ!

“எரிகோ, இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது. ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை” (யோசு. 6:1).

வாக்குத்தத்தத்தை சுதந்தரித்துக்கொண்ட இஸ்ரவேலர், கெம்பீரமாக காண்டா மிருகத்துக்கொத்த பெலனோடு, எரிகோவை நோக்கி, வெற்றி நடைபோட்டு வந்தார்கள். அதுதான், அவர்கள் முதலில் சந்தித்த பட்டணமாகும். அவர்களை உள்ளே போக விடாதபடி, எரிகோ மதில்கள் தடுத்தன. வெண்கல கதவுகள், சவால் விட்டன. ஆனால் தடைகளை நீக்கிப்போடுகிற கர்த்தரோ, இஸ்ரவேலரோடு நின்றார்.
முதல் தடை, பார்வோனாகிய ஒரு மனுஷனால் ஏற்பட்டது. இரண்டாம் தடை, ஒரு சமுத்திரத்தினால் வந்தது. மூன்றாம் தடை, ஒரு நதியின் வெள்ளத்தினால் வந்தது. நான்காம் தடை, ஒரு பட்டணத்தின் மதில் சுவராய் வந்தது. தடைகள் வித்தியாசப்படலாம். ஆனால் தடைகளைத் தகர்ப்பவர், ஒருவரே. அவர் என்றைக்கும் மாறாதவராய், ஜீவனுள்ளவராய், வல்லமையுள்ளவராய் உங்களோடிருக்கிறார்.

“எரிகோ” என்பது, யோர்தான் பள்ளத்தாக்கிலே உள்ள, ஒரு பிரத்தியேக பட்டணம். உலகத்துக்கு முதன்முதலில் நாகரீகம் அங்கிருந்துதான் வந்தது என்று சரித்திர ஆசிரியர்கள் நம்புகிறார்கள். “எரிகோ” என்றால், “பேரீச்சம் மரங்கள் நிறைந்த இடம்” என்று அர்த்தம். ஆனால் எரிகோவின்மேல், பல சாபங்கள் இருந்தன. யோசுவா அதைப் பிடித்தபோது, அந்தப் பட்டணத்தின்மேல் சாபத்தைக் கூறினார். அந்தப் பட்டணத்திலுள்ள, எல்லாப் பொருட்களும் சாபத்தீடானது. அதிலே ஒன்றும் எடுக்கக்கூடாது என்று, கர்த்தரே எச்சரித்தார்.

அநேக குடும்பங்களில் சாபத்தின் விளைவாக, பல தடைகள் ஏற்படுகின்றன. பிள்ளைகளுக்குத் திருமணமாகவில்லை, வேலை கிடைக்கவில்லை, குழந்தை பாக்கியம் இல்லை. எவ்வளவு பாடுபட்டாலும், வியாபாரம் தழைக்கவில்லை. இரும்புத் தாழ்ப்பாள்களும், வெண்கலக் கதவுகளும் போல, பல எரிகோக்கள் உங்களுக்கு முன்பாக நின்று கொண்டிருக்கலாம்.

இன்று, தடைகளைத் தகர்க்கிற கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள். பெரிய தடைகளா? “பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்” (சகரியா 4:7). பெரிய கோலியாத்தே, நீ எம்மாத்திரம்? செருபாபேல் கொண்டுவருகிற கல்லுக்கு முன்பாக, நீ சமபூமியாவாய். பெரிய எரிகோவே, தடைகளைத் தகர்க்கிற, கர்த்தருக்கு முன்பாக நீ எம்மாத்திரம்?
எரிகோவாகிய தடையைத் தகர்க்க, கர்த்தர் கற்றுக்கொடுத்த வழி முறை என்ன? ஆசாரியர்கள் எக்காளங்களை ஊத வேண்டும். ஜனங்களெல்லோரும் மகா ஆரவாரத்தோடே ஆர்ப்பரிக்க வேண்டும். அப்பொழுது பட்டணத்தின் அலங்கம் இடிந்து விழும் (யோசு. 6:2,5). எரிகோ தடையை உடைக்க, கர்த்தர் கொடுத்த ஆயுதம், துதியின் சத்தமாகும். அவருக்கு ஈட்டியும், அம்பும், குதிரை வீரர்களும் தேவையில்லை. அவருக்கு தேவையெல்லாம், “கர்த்தரைத் துதிக்கும் துதி.”

கர்த்தரைத் துதித்து, ஆர்ப்பரிக்கும்போது, கர்த்தருடைய பிரசன்னம் அங்கே இறங்குகிறது. துதிகளின் மத்தியிலே வாசம்பண்ணுகிறவர், அங்கே இறங்கி வருகிறார். அப்பொழுது, எரிகோவின் மதில்கள் முறிந்து, நொறுங்கி விழும். தேவபிள்ளைகளே, உங்கள் வாழ்க்கையில், துதியின் சத்தத்தைக் கொண்டு வாருங்கள். எல்லா எரிகோ மதில்களும், நொறுங்கி விழப்போகின்றன.

நினைவிற்கு:- “பூமியின் குடிகளே, நீங்களெல்லாரும் கர்த்தரை நோக்கி ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள். முழக்கமிட்டுக் கெம்பீரமாய்ப் பாடுங்கள். கர்த்தராகிய ராஜாவின் சமுகத்தில் பூரிகைகளாலும் எக்காள சத்தத்தாலும் ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள்” (சங். 98:4,6).