தடையாகிய சிவந்த சமுத்திரம்!

“நீ உன் கோலை ஓங்கி, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, சமுத்திரத்தைப் பிளந்துவிடு. அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர், சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந் தரையிலே நடந்துபோவார்கள்” (யாத். 14:16).

பார்வோனின் தடையை கடந்து வந்த, இஸ்ரவேல் ஜனங்களுக்கு, சிவந்த சமுத்திரம் அடுத்த தடையாக வந்தது. இருபது லட்சம் மக்களை கூட்டிக்கொண்டு, எப்படி மோசேயால் அதைக் கடக்க முடியும்? பின்னால் பார்வோனுடைய இராணுவங்களும், சேனைகளும், இரதங்களும், குதிரைகளும், அவர்களைத் துரத்திக் கொண்டு வந்தன. என்ன செய்வது? எப்படி இந்த தடையை உடைப்பது?
மோசே இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து சொன்னார், “பயப்படாதிருங்கள். நீங்கள் நின்றுகொண்டு, இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள். இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை, இனி என்றைக்கும் காணமாட்டீர்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார். நீங்கள் சும்மாயிருப் பீர்கள் என்றான்” (யாத். 14:13,14). கர்த்தர் மோசேயை நோக்கி, “நீ உன் கோலை ஓங்கி, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, சமுத்திரத்தைப் பிளந்துவிடு. அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோவார்கள்” (யாத். 14:16).

கர்த்தர் மோசேயை ஊழியத்திற்கு அழைத்தபோது, அவர் கையிலிருந்ததெல்லாம், ஒரு கோல் மட்டுமே (யாத். 4:2). அதைத் தரையிலே போட்டபோது, பாம்பாக நெளிந்தது. அது சுயசித்தத்தின் கோல். சாத்தான் கொண்டு வருகிற சுயஞானம், சுய அறிவு. மோசேயின் கோல், பாம்பாக மாறியது (யாத். 4:3). கர்த்தர் மோசேயைப் பார்த்து, அதனுடைய வாலைப் பிடிக்க சொன்னபோது, மீண்டும் கோலாய் மாறினது. இப்பொழுது அது தேவனுடைய கோல். தேவனுடைய நோக்கத்தையும், சித்தத்தையும் நிறைவேற்றும் கோல்.

“மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான். அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப்பண்ணினார். ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று” (யாத். 14:21). இந்த மோசேயின் கோல், “தேவனுடைய வாக்குத்தத்தங்களைக் குறிக்கிறது.” நீங்கள் தடைகளை சந்திக்கும்போது, கர்த்தருடைய வாக்குத்தத்தங்களைப் பேசுங்கள். விசுவாச வார்த்தைகளைப் பேசுங்கள். ஆவியும், ஜீவனுமாயிருக்கிற வேத வசனங் களைப் பேசுங்கள்.

மோசேயின் கோல், கர்த்தர் உங்களுக்குத் தந்திருக்கிற அதிகாரங்களையும், வல்லமையையும், ஆளுகையையும் குறிக்கிறது. அன்றைக்கு கர்த்தர், சீஷர்களுக்கு அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும், சகல நோய்களையும் நீக்கவும், அதிகாரம் கொடுத்தார் (மத். 10:1).

இன்று கர்த்தர் உங்களுடைய கைகளிலே, வேதத்தில் உள்ள எண்ணற்ற வாக்குத்தத்தங்களைக் கொடுத்திருக்கிறார். அவைகளையெல்லாம் நிறைவேற்ற கர்த்தர் வல்லமையுள்ளவராயிருக்கிறார். “தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் கிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், ஆமென் என்றும் இருக்கிறதே” (2 கொரி. 1:20). ஆகவே, எப்போதும் கர்த்தருடைய வார்த்தைகளையும், வாக்குத்தத்தங்களையும் பேசுங்கள். அப்பொழுது மலைகள் பெயர்ந்து, சமுத்திரத்தில் தள்ளுண்டு போகும். அத்திமரம் வேரோடு பட்டுப்போகும்.

நினைவிற்கு:- “நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன். நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறார் என்று நிச்சயித்துமிருக்கிறேன்” (2 தீமோத். 1:12).