தடையாகிய பார்வோன்!

“நான் இஸ்ரவேலைப் போகவிடக் கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு, அவர் யார்? நான் கர்த்தரை அறியேன். நான் இஸ்ரவேலைப் போகவிடுவதில்லை என்றான்” (யாத். 5:2).

தானியம் வாங்க, எகிப்துக்குப் போன இஸ்ரவேலரை, பார்வோன், கொஞ்சம் கொஞ்சமாக அடிமைகளாக்கிவிட்டான். இஸ்ரவேலருக்கோ, கர்த்தர் வாக்குப்பண்ணின கானானுக்கு போக வேண்டும் என்ற விருப்பமே இல்லாதிருந்தது. இஸ்ரவேலர் தங்கியிருந்த கோசேன் நாடு செழிப்பான இடமாயிருந்தது. ஆடு, மாடு, மேய்ப்பதற்கு பசுமையாகவும், வசதியான இடமாகவுமிருந்தது. இப்படித்தான் அநேகர், உலக ஆசீர்வாதங்களை எண்ணி, பாவ சந்தோஷங்களுக்குள் போய், பிசாசுக்கு அடிமையாகி விடுகிறார்கள். “பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான்” (யோவா. 8:34).

கர்த்தரோ, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்கு கானான் தேசத்தை வாக்குப்பண்ணி யிருந்தார். கால் மிதிக்கும் தேசமெல்லாம் உனக்கு சொந்தமாய்த் தருவேன் என்று உறுதி செய்திருந்தார். ஆனாலும், பாலும், தேனும் ஓடுகிற தேசத்தை சுதந்தரிக்க முடியாதபடி, பார்வோன் தடுத்தான். உலகத்தின் அதிபதியான சாத்தான், பலவித இச்சைகளைக் காண்பித்து, தேவ ஜனங்களை அடிமைப்படுத்துகிறான். “அனுபவி ராஜா அனுபவி” என்று ஆசைக் காட்டி, அடிமையாக்கி விடுகிறான்.

மனுஷர் பாவ சந்தோஷங்களை விரும்பி ஓடுகிறார்களே தவிர, அதற்குப் பின்னால் வலை விரித்திருக்கிற சாத்தானைப் பார்ப்பதில்லை. ஏவாளுக்கு, விலக்கப்பட்ட கனியை அழகாகவும், அருமையானதாகவும் காண்பித்தானே ஒழிய, அதற்குப் பின்னாலிருக்கிற தேவ கோபாக்கினையையும், நியாயத்தீர்ப்பையும் காண்பிக்கவில்லை. இன்றைக்கு இப்பிரபஞ்சத்தின் லோகாதிபதியானவன், இப்படியே, ஜனங்களுடைய மனக்கண்களைக் குருடாக்கி, வைத்திருக்கிறான்.
பார்வோனுடைய அடிமைத்தனத்திலிருந்து மீட்க, முதலாவது கர்த்தர் பத்து வாதைகளை எகிப்தில் அனுப்பினார். ஆனாலும் பார்வோனுடைய இருதயம் கடினப் பட்டது. “நீங்கள் போய், உங்கள் தேவனுக்கு தேசத்திலேதானே பலியிடுங்கள்” (யாத். 8:25). இரண்டாவதாக, “நீங்கள் அதிக தூரமாய்ப் போக வேண்டாம்” (யாத். 8:28). மூன்றாவதாக, புருஷர் மாத்திரம் போங்கள் (யாத். 10:11). நான்காவதாக, ஆடு, மாடுகளும் மாத்திரம் நிறுத்தப்பட வேண்டும் என்றான் (யாத். 10:24).

பல பேச்சு வார்த்தைகள், மோசேக்கும், பார்வோனுக்குமிடையே நடந்தன. தடைகளோ நீங்கவில்லை. முடிவாக, பஸ்கா ஆட்டுக்குட்டியினுடைய இரத்தம் நிலைக்கால்களிலே பூசப்பட்டபோது, சங்காரத்தூதன் பாளயத்துக்குள் புகுந்து, எகிப்தியரின் தலைப்பிள்ளைகளையெல்லாம் சங்காரம் பண்ணினான். அதோடு பார்வோனுடைய தடை உடைந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து விடுதலையாகி, மகிழ்ச்சியோடு புறப்பட்டார்கள்.

உங்களுடைய வாழ்க்கையிலுள்ள தடைகள் உடைக்கப்பட வேண்டுமானால், இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தம் உங்கள்மேலும், உங்களுடைய குடும்பத்தின் மேலும் தெளிக்கப்பட்டிருக்க வேண்டும். கிறிஸ்துவின் இரத்தம், சகல பாவங்களையும் நீக்கும். சாபங்களை நீக்கி, விடுதலையாக்கும். பாவ அடிமைத்தனத்திலிருக்கிறவர்கள் மேலும், கல்வாரியின் இரத்தம் விழும்போது, அவர்கள் விடுதலையாகி, இரட்சிப்பின் சந்தோஷத்தைப் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.

நினைவிற்கு:- “குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப் பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே” (1 பேது. 1:19).