தடைகளா?

“தடைகளை நீக்கிப்போடுகிறவர், அவர்களுக்கு முன்பாக நடந்து போகிறார். அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்து போவார்கள். அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார். கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்” (மீகா. 2:13).

“தடைகளை நீக்கிப்போடுகிறவர்” என்ற ஒரு பெயரை, மீகா கர்த்தருக்கு சூட்டினார். “நீர் என்னைக் காண்கிற தேவன்” என்று, ஆகார் பெயரிட்டாள். “மறைபொருட்களை வெளிப்படுத்துகிறவர்” என்று அழைத்தார், தானியேல். “ஜெபத்தைக் கேட்கிறவரே” என்று கூப்பிட்டார், தாவீது. கர்த்தருடைய குணாதிசயத்தைக் குறித்தும், சுபாவங் களைக் குறித்தும் ஏராளமான பெயர்கள், வேதத்தில் உண்டு.

கர்த்தர் தடைகளை நீக்கிப்போடுகிறவர். அது பிசாசு கொண்டு வருகிற தடையானாலும் சரி, மனிதன் கொண்டு வருகிற தடையானாலும் சரி, அவைகளைக் தகர்த்துப்போட்டு, கர்த்தர் உங்களை வெற்றியின் பாதையிலே அழைத்துச் செல்லுவார். யோபு பக்தன் சொன்னார், “தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர். நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்” (யோபு 42:2). அது உலகப்பிரகாரமாய் முன்னேற முடியாத தடைகளாயிருந்தாலும் சரி, ஜெபிக்க முடியாத தடைகளானாலும் சரி, பரிசுத்த ஜீவியத்தில், முன்னேற முடியாத தடைகளா னாலும் சரி, தடைகளை தகர்க்கிற கர்த்தர்தாமே, உங்களுக்கு முன் செல்லுகிறார். அவர் கோணலானவைகளை செவ்வையாக்கி, மேடுகளையும், பள்ளங்களையும் சீர்ப்படுத்தி, உங்கள் பாதம், கல்லில் இடறாதபடி, கரம்பிடித்து வழிநடத்திச் செல்லுவார்.

போக்குவரத்துக்குத் தடையாயிருக்கிற கொடி கம்பங்கள், அரசியல் தலைவர் களின் சிலைகள், கோவில்களை சென்னை மாநகராட்சி வாரியம் அகற்றியது. ஒரு அரசியல்வாதி, தன் சொந்த விருப்பத்தின்படி கட்டியிருந்த மூன்று மாடி கட்டிடத்தை, ஒரு பெரிய புல்டோசர் வைத்து நொறுக்கினார்கள். கர்த்தரும் ஒரு புல்டோசர் தான். சாத்தானின் எல்லாக் கட்டுகளையும், தடைகளையும் உடைத்து போடுவார். “நான் செய்கிறதைத் தடுப்பவன் யார்? என்று கர்த்தர் கேட்கிறார் (ஏசா. 43:13).

தடைகளை நீக்கிப்போடும்படி, கர்த்தர் உங்களுக்கு முன்பாகப் போகிறார். அதே நேரத்தில், உங்கள் பின்பாகவும், காக்கிறவராகவும் இருக்கிறார். கர்த்தரை எப்பொழுதும் உங்களுக்கு முன்பாக வைத்திருக்கும்போது, நீங்கள் அசைக்கப் படுவதில்லை. புதிய வாசல்களை உங்களுக்குத் திறந்து தருவார். ஒரு ஜனாதிபதி வருகிறாரென்றால், அவருக்கு முன்பாக இராணுவ ஜீப்புகள், போலீஸ் அதிகாரிகள் போக்குவரத்துக்களை ஒழுங்கு செய்து பாதைகளை செவ்வைப் பண்ணுவார்கள். அப்படியே, கர்த்தர் வாக்குப்பண்ணி, “என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும். நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்கிறார் (யாத். 33:14).

நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு எதிர்த்து நிற்பதில்லை. “உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும், எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம். உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும், நீ குற்றப்படுத்துவாய்” (ஏசா. 54:17). இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட நேரம் முதல், கானானை சுதந்தரிக்கிற இடம் வரைக்கும், ஏற்பட்ட அத்தனை தடைகளையும் கர்த்தர் உடைத்து, இஸ்ரவேல் ஜனங்களோடு சென்று வெற்றிச் சிறந்தார். அந்த கர்த்தர் உங்களோடிருக் கிறார். உங்களுக்கு முன் செல்லுவார். தடைகளையெல்லாம் நீக்கிப்போடுவார்.

நினைவிற்கு:- “உன்னோடே போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய். உன்னோடே யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்” (ஏசா. 41:12).