நன்றி மறந்தாலும் நன்மைக்கே!

“ஆனாலும், பானபாத்திரக்காரரின் தலைவன், யோசேப்பை நினையாமல் அவனை மறந்துவிட்டான்” (ஆதி. 40:23).

சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்ட பானபாத்திரக்காரன், மறுபடியும் பதவியிலே, அமர்ந்தபோது, யோசேப்பை மறந்துபோனான். “ஐயோ, இந்த சிறைச்சாலையிலே கொடூரமாய் என் கால்களை விலங்கிட்டு ஒடுக்குகிறார்களே? சொப்பனத்துக்கு நான் சொன்ன அர்த்தத்தின்படியே பானபாத்திரக்காரன் உயர்த்தப் பட்டும், என்னை மறந்து போனானே” என்று யோசேப்பு, கண் கலங்கவில்லை. பானபாத்திரக்காரனை, “நன்றி கெட்ட துரோகி” என்று நினைக்கவுமில்லை.

“அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிற தென்று அறிந்திருக்கிறோம்” (ரோம. 8:28). ஒருவேளை பானபாத்திரக்காரன் சொல்லி, பார்வோன், யோசேப்புக்கு மனமிரங்கியிருந்தால், சிறையிலிருந்து விடுதலை மட்டுமே கிடைத்திருந்திருக்கும். ஏதோ, ஒரு சிறு தொழில் செய்து, யோசேப்பு எகிப்திலே பிழைத்திருந்திருப்பார். ஆனால் ஏற்றக்காலத்தில் உயர்த்தும்படி கர்த்தருடைய பலத்த கரத்துக்குள், யோசேப்பு அடங்கியிருந்தபடியால், கர்த்தர் தாமே பார்வோனுக்கு சொப்பனத்தைக் கொடுத்து, யோசேப்பை அழைப்பித்து, பார்வோனுக்கு அடுத்தபடியாக, உன்னத நிலைமையிலே உயர்த்தினார்.

பார்வோனுடைய சொப்பனத்துக்கு, அர்த்தத்தை யோசேப்பு சொன்னபோது, வரப்போகிற செழிப்பான நாட்களையும், அதைத் தொடர்ந்து வரப்போகிற ஏழு வருஷ பஞ்சக் காலங்களையும், யோசேப்புக்கு முன்னறிவித்தார். “அந்த பஞ்ச காலத்துக்கு உதவுவதற்கு நான் இருக்கிறேன். தனக்கு நிர்வகிக்கக்கூடிய திறமை உண்டு” என்றெல்லாம் சொல்லாமல், தாழ்மையோடு பார்வோனிடத்தில், “விவேகமும் ஞானமுமுள்ள ஒரு மனுஷனைத் தேடி, அவனை எகிப்துதேசத்துக்கு அதிகாரியாகப் பார்வோன் ஏற்படுத்துவாராக” (ஆதி. 41:33) என்றான்.

யோசேப்பின் தாழ்மை மட்டுமல்ல, அவருடைய விவேகமும், ஞானமும்கூட நம்முடைய உள்ளத்தைத் தொடுகிறது. யாரிடம் எப்படி பேச வேண்டும்? என்னென்ன காரியத்தை முன் வைக்க வேண்டும்? எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்பதையெல்லாம் யோசேப்பு அறிந்திருந்தார். பார்வோன் யோசேப்பிடம் சொன்னார். “உன்னைப்போல விவேகமும், ஞானமுமுள்ளவன் வேறொருவனும் இல்லை. நீ என் அரமனைக்கு அதிகாரியாயிருப்பாய். உன் வாக்கின்படியே, என் ஜனங்கள் எல்லாரும் அடங்கி நடக்கக்கடவர்கள். சிங்காசனத்தில் மாத்திரம், உன்னிலும் நான் பெரியவனாய் இருப்பேன் என்றான்” (ஆதி. 41:39,40).

ஆம், யோசேப்பு ஒரு ஆவிக்குரியவன். தனது உதவியை மறந்த, நன்றியற்ற வர்களை, ஒரு பொருட்டாக எண்ணவில்லை. மனுஷனிடத்திலிருந்து வருகிற உயர்வை எதிர்பார்க்காமல், “கர்த்தரோ என்னை உயர்த்துவார். கர்த்தர் மேலே நம்பிக்கையாயிருப்பேன்” என்று ஒப்புகொடுப்பதைப்போலவே, நீங்களும் உங்களை ஒப்புக்கொடுப்பீர்களா?
ஆபிரகாமுக்கு ஐசுவரியத்தையும், கொள்ளைப்பொருட்களையும் கொடுக்க சோதோமின் ராஜா முன்வந்தபோது, ஆபிரகாம் சொன்னது என்ன? “ஆபிரகாமை ஐசுவரிவானாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு, உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன்” என்று மன உறுதியோடு இருந்தார் (ஆதி. 14:22).

நினைவிற்கு:- “வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனாகிய கர்த்தருக்கு நேராக என் கையை உயர்த்துகிறேன்” (ஆதி. 14:23).