குற்றச்சாட்டுகளின் மத்தியிலே!

“யோசேப்பின் எஜமான் அவனைப் பிடித்து: ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான். அந்தச் சிறைச்சாலையில் அவன் இருந்தான்” (ஆதி. 39:20).

யோசேப்பு, நூற்றுக்கு நூறு பரிசுத்தமாய் வாழ்ந்தபோதிலும், தன் எஜமானின் மனைவியோடு தவறாக நடக்க முயற்சித்தான் என்று, அவர் பேரில் தவறான குற்றச் சாட்டுகள் எழுந்தன. அந்த எஜமானின் மற்ற வேலைக்காரர்களும், ஊர் மக்களும் யோசேப்பை, எவ்வளவு அடி அடி என்று அடித்திருப்பார்கள். யோசேப்பின் எஜமான் சாதாரணமானவன் அல்ல. ராஜாவுக்கு மிகவும் நெருங்கினவன்.

அந்த வேளையிலே யோசேப்பு தன் நீதியை சொல்லவில்லை. கர்த்தருக்கு முன்பாக முறுமுறுக்கவில்லை. மற்றவர்கள்மேல் குற்றம் சுமத்தவுமில்லை. அந்த சிறைச்சாலை வாழ்வைக் குறித்து வேதம் சொல்லும்போது, “அவன் கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள். அவன் பிராணன் இரும்பில் அடைபட்டிருந்தது. கர்த்தர் சொன்ன வார்த்தைகள் நிறைவேறுமளவும், அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது” ( சங். 105:18,19).

அதுபோல, பிலிப்பி பட்டணத்தில், பவுலும், சீலாவும் சுவிசேஷத்தை அறிவித்ததினிமித்தம், அவர்களுக்கு விரோதமாய் ஏராளமான மக்கள் எழுந்தார்கள். கைகலந்தார்கள். குறி சொல்லுகிற ஒரு பெண்ணுக்கு இருந்த ஆவியைத் துரத்தி விடுதலையாக்கி தந்ததற்காக, பொது மக்கள் மகிழ்ச்சிபடவில்லை. அவர்களுடைய கால்களைத் தொழு மரத்தில் மாட்டி வைத்து, அடித்து காயப்படுத்தினார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலைகள் உங்களுக்கு வந்தால், நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்? தேவனுக்கு விரோதமாக, மனுஷனுக்கு விரோதமாக முறுமுறுத்திருப்பீர்கள். உங்கள் நியாயங்களைச் சொல்ல முற்பட்டிருப்பீர்கள்.

இயேசு கிறிஸ்துவை நோக்கிப்பாருங்கள். “அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப் பட்டும் இருந்தார். ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை. அடிக்கப் படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார். இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார். அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும்?” (ஏசா. 53:7,8).

“அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தா மலும் நியாயமாய்த் தீர்ப்புச் செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்” (1 பேது. 2:23). சர்வலோக நியாயாதிபதியாக, கிறிஸ்து விளங்குகிறார். ஆனால் அவருக்கு விரோதமாக மனுமக்கள் அநியாயமாய் தீர்ப்புசெய்தபோது, அமைதியோடு நின்ற இந்த சுபாவம், யோசேப்புக்கு இருந்தது, எத்தனை ஆச்சயரிமானது!
தேவபிள்ளைகளே, நீங்கள் செய்யாத தவறுகளுக்காக குற்றம் சாட்டப்படும்போது, யோசேப்பைப்போல நடந்துகொள்ள பிரயாசப்படுங்கள். மற்றவர்களையும் குறை கூறாதிருங்கள். தேவனிடமும் முறுமுறுக்காதிருங்கள். நிச்சயமாகவே, நியாயம் வெளியாகும் ஒருநாள் வரும். அதுவரை, பொறுமையோடு காத்திருக்க, உங்களை அர்ப்பணித்துவிடுங்கள்.

நினைவிற்கு:- “துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத் தூரமா யிருப்பதாக. நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக. சர்வலோக நியாயாதிபதி நீதி செய்யாதிருப்பாரோ?” (ஆதி. 18:25).