வாக்குத்தத்தங்களைப் பிடியுங்கள்!

“பயப்படாதே, நான் உன்னோடேகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமி னிமித்தம், உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் என்றார்” (ஆதி. 26:24).

ஈசாக்கு, “ஒரு ஆவிக்குரிய மனிதன்” என்று தன் அன்பின் கிரியைகளினால் உறுதிப்படுத்தினார். அன்று இரவிலே, கர்த்தரிடத்திலிருந்து, ஒரு அருமையான தரிசனத்தையும், வாக்குத்தத்தத்தையும் பெற்றுக்கொண்டார். என்ன வாக்குத்தத்தம்? “நான் உன்னோடே இருந்து” என்ற கர்த்தருடைய வார்த்தைகளாகும், மாறாத தேவனுடைய பிரசன்னத்தையும், சமுகத்தையும் கர்த்தர் ஈசாக்குக்கு வாக்களித்தார். அதை ஈசாக்கின் சத்துருக்களும் உணர்ந்தார்கள்.
“நீ என்னை விட்டு போய்விடு” என்று கூறிய அபிமெலேக்கும், அவனது சிநேகித னாகிய அகுசாத்தும், அவன் சேனாபதியாகிய பிகோலும், கேராரிலிருந்து அவனிடத்திற்கு வந்தார்கள். நிச்சயமாய்க் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்” (ஆதி. 26:26,28) என்று சாட்சியாக கூறினார்கள். கர்த்தருடைய பிரசன்னத்தை நீங்கள் உணருவது என்பது ஒரு அனுபவம். ஆனால் கர்த்தர் உங்களோடிருக்கிறார் என்பதை உங்கள் பகைவர்களும், உணருவது, இன்னொரு சிறந்த அனுபவம்.

அநேகர், தேவ பிரசன்னத்தின் இனிமையை உணருவதில்லை. கர்த்தர் கொடுத்த அபிஷேகம் எவ்வளவு பெரியது என்று அறிந்து காத்துக்கொள்வதுமில்லை. இப்படித்தான் நியாயாதிபதியாகிய சிம்சோன், தேவனோடு செய்திருந்த உடன்படிக்கையை முறித்து, தன் பெலத்தின் இரகசியத்தை, வேசியாகிய தெலீலா ளிடம் அறிவித்து விட்டார். இதன் விளைவு என்ன? “அவர் (சிம்சோன்), நித்திரையை விட்டு விழித்து, கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்போதும்போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றார்” (நியாயா. 16:20).

தேவபிள்ளைகளே, கர்த்தருடைய பிரசன்னத்தை எப்பொழுதும் உங்களுக்குள்ளே காத்துக்கொள்ளுங்கள். கர்த்தர் உங்களோடிருப்பாரென்றால், எந்தப் போராட்டமும் தொடர முடியாது. “கர்த்தர் தாவீதோடேகூட இருக்கிறார் என்றும், தன்னை விட்டு விலகிப்போனார் என்றும், சவுல் கண்டு தாவீதுக்குப் பயந்திருந்தார்” (1 சாமு. 18:12). நீங்கள் எப்பொழுதும் தேவ பிரசன்னத்தை அனுபவியுங்கள்.

நாற்பது வருடங்கள், இஸ்ரவேலரை வழி நடத்தின மோசே, எப்பொழுதும் கர்த்தருடைய பிரசன்னத்துக்காக ஆவலோடு எதிர்பார்த்திருந்தார். கர்த்தருடைய பிரசன்னம் தன்னை வழிநடத்த வேண்டும் என்பதிலே, அவர் அவ்வளவு ஆர்வம் காட்டினார். உம்முடைய சமுகம் என்னோடேகூட செல்லாமற்போனால், என்னை இவ்விடத்திலிருந்து கொண்டு போகாதிரும். உமக்கும், உமது ஜனங்களுக்கும், உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்தது என்பது எதினால் அறியப்படும். நீர் எங்களுடனே வருவதினால் அல்லவா? என்று சொன்னார். அதற்கு கர்த்தர், “என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும். நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்” (யாத். 33:14) என்றார்.

தேவபிள்ளைகளே, ஈசாக்கின் வாழ்நாளெல்லாம் கூட இருந்தவர், அவரை உயர்த்தி, மேன்மையான நிலைமையில் வைத்தவர், உங்களையும் உயர்த்துவார். நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிராமல், ஆவிக்குரியவர்களாய் இருக்க தீர்மானியுங்கள். அப்பொழுது கர்த்தருடைய இனிய பிரசன்னம் உங்களை சூழ்ந்து கொள்ளும்.

நினைவிற்கு:- “அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால், அவனை விடுவிப்பேன். என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால், அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்” (சங். 91:14).