தனிமையும், சகிப்பும்!

“அபிமெலேக்கு ஈசாக்கை நோக்கி: நீ எங்களை விட்டுப் போய்விடு. எங்களைப் பார்க்கிலும் மிகவும் பலத்தவனானாய் என்றான்” (ஆதி. 26:16).

இளமையிலிருந்தே, ஈசாக்கை ‘தனிமை’ என்ற உணர்வு வாட்டி வதைத்தது. ஆகாருக்குப் பிறந்த இஸ்மவேல், தன் தம்பியாகிய ஈசாக்கை அன்போடு அரவணைக் காமல், பரியாசம் பண்ணினான். அதினிமித்தம் வீட்டைவிட்டு போய்விட்டான். ஈசாக்குக்கு, தன்னோடே பிறந்த வேறு அண்ணனோ, தம்பியோ, அக்கா, தங்கையோ இல்லை. தன்னுடைய இன்னல்கள் அனைத்தையும் யாரிடமாவது பகிர்ந்து கொண்டு ஆறுதலை எதிர்பார்க்காமல், தனக்குள்ளே தானே, சகித்துக் கொண்டார். எல்லாவற்றையும் மனதில் அடக்கிக் கொண்டார்.

ஆபிரகாம் மரித்தபின்பு, ஆபிரகாமின் நாட்களிலே வெட்டின துரவுகளை, பெலிஸ்தியர் தூர்த்துப்போட்டு விட்டனர். பெலிஸ்தியரின் ராஜாவான அபிமெலேக்கு ஈசாக்கிடம், “நீ எங்களை விட்டுப் போய்விடு” என்று அவனுக்கு விரோதமாக, அன்பற்ற கடுமையான சொற்களைக் கூறினார்.

ஒரு பக்கம் பொறாமை. மறுபக்கம் அவருக்கு விரோதமான அன்பற்ற சொற்கள். சில தகப்பன்மார் தங்கள் சொந்த பிள்ளைகளையே, “வீட்டைவிட்டு போய் விடு. உன்னால் எங்களுக்கு அவமானம்” என்று சொல்லக்கூடும். மாமனார், மாமியார் தங்கள் வீட்டுக்கு வந்த மருமகளை, “நீ எங்கயாவது போய் செத்து தொலை” என்று சொல்லி, வீட்டைவிட்டுத் துரத்தக்கூடும். அந்த பெண் வாழ முடியாது, தாய் வீட்டுக்கு வரும்போது, “நீ இங்கு வந்தால் எங்களுக்கு அவமானம். வாழ்வோ, சாவோ உன்னைக் கட்டி கொடுத்துவிட்டோம். இனி உன்பாடு” என்பார்கள்.

ஈசாக்குக்கு அப்படிப்பட்ட சூழ்நிலைகள் வந்தபோது, கர்த்தருக்கு விரோதமாய் முறுமுறுக்கவுமில்லை, கவலைப்படவுமில்லை, அழுதுகொண்டிருக்கவுமில்லை. விடாமுயற்சியோடு, மறுபடியும் மூடப்பட்ட துரவுகளைத் தோண்டினார். கர்த்தர் அந்த துரவுகளிலே ஆசீர்வாதத்தைத் தந்தார். அதற்குப் பிறகு, பெலிஸ்தியர் வாக்குவாதம் பண்ணவில்லை. மட்டுமல்ல, ஈசாக்கு, தன் தனிமையை சகித்ததினால், ‘ஆவிக்குரியவன்’ என்ற பெயரை பெற்றார்.
அதுபோலவே, நியாயாதிபதியாய் விளங்கின யெப்தாவுக்கும், அப்படிப்பட்ட பிரச்சனைகள் வந்தன. ஒருபக்கம், அவன் பலத்த பராக்கிரமசாலியாய் இருந்தாலும், மறுபக்கம் அவன் ஒரு பரஸ்திரீயின் குமாரனாயிருந்தபடியால், அவனுடைய சகோதரர்கள் அவனை நோக்கி, “உனக்கு எங்கள் தகப்பன் வீட்டிலே சுதந்தரமில்லை. நீ அந்நிய ஸ்திரீயின் மகன்” என்று சொல்லி, அவனைத் துரத்தினார்கள். எங்களுடைய மத்தியிலிருந்து போய்விடு” என்று சொந்த சகோதரர்களால், துரத்தப்பட்ட நிலைமையை எண்ணி சிந்தித்துப் பாருங்கள்.

அநேக பரிசுத்தவான்கள், இந்த வேதனையான பாதைகளின் வழியே கடந்து சென்றிருக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவினுடைய வாழ்க்கையை வாசித்துப் பாருங்கள். லேகியோன் பிசாசு பிடித்த ஒரு மனிதனை, அவர் தேடி சென்றார். அவனுக்குள்ளிருந்த பிசாசுகளைத் துரத்தினார். அவனை விடுதலையாக்கினார். அவனுக்குள்ளிருந்த பிசாசுகள் பன்றிக் கூட்டத்திற்குள் போய் முடிவில் அவைகள் கடலுக்குள் பாய்ந்து சென்று விழுந்துவிட்டன. அவனுக்கு உதவி செய்த இயேசுவை கிராம மக்கள் போற்றினார்களா? இல்லை. துரத்தினார்கள்.

நினைவிற்கு:- “அப்பொழுது, அந்தப் பட்டணத்தார் யாவரும் இயேசுவுக்கு எதிர் கொண்டுவந்து, அவரைக் கண்டு, தங்கள் எல்லைகளை விட்டுப் போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள்” (மத். 8:34).