ஆவிக்குரிய திருப்தி!

“நீ இடதுபுறம்போனால், நான் வலதுபுறம் போகிறேன். நீ வலதுபுறம்போனால், நான் இடதுபுறம் போகிறேன் என்றார்” (ஆதி. 13:9).

ஆபிரகாம், தனது ஆவிக்குரிய ஜீவியத்திலே திருப்தியுள்ளவராயிருந்தார். லோத்தினுடைய சொத்து சுதந்தரத்தைக் கண்டு, ஆபிரகாம் பொறாமைகொள்ளவில்லை. தனக்கு இடதுபுறத்திலுள்ள நிலங்கள்தான் வேண்டும். வலதுபுறம் வேண்டாம் என்று அடம் பிடிக்கவில்லை. விசுவாசிகளுக்கு இப்படிப்பட்ட ஒரு திருப்தி வேண்டும். தங்கள் சுதந்தரங்களை விட்டுக்கொடுத்து, வாழக் கற்றுக்கொடுக்க வேண்டும். இப்படிப்பட்டவர்களுக்கு, கர்த்தரால் பூமியிலும், பரலோகத்திலும், மிகுந்த ஆசீர்வாதம் உண்டாகும்.

லோத்து தன் கண்களால் ஏறெடுத்துப் பார்த்து, யோர்தான் நதிக்கு அருகேயான சமபூமி முழுவதும், நல்ல வளம் பொருந்தியிருக்கக் கண்டார். “அது கர்த்தருடைய தோட்டத்தைப் போலவும், எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது” (ஆதி. 13:10). இங்கே கவனித்தால், லோத்து தன்னுடைய சுய சித்தத்தின்படி தெரிந்தெடுத்தாரே தவிர, கர்த்தரால் நடத்தப்படவில்லை. லோத்து, ஆபிரகாமை விட்டுப் பிரிந்தபோது, ஆபிரகாம் தன் கண்களை மூடி, பரலோகத்திலுள்ள தேவனை நோக்கிப் பார்த்திருப்பார் என்று எண்ணுகிறேன். “கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும் கிழக்கேயும் மேற்கேயும் நோக்கிப்பார். நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும், நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுத்தேன் என்றார்” (ஆதி. 13:14,15).

திருப்தியில்லாமல் அநேகர் வாழுகிறவர்கள். தன் வீட்டுக்கு வரும் பெண், என்ன நகை கொண்டு வருகிறாள். எவ்வளவு ரொக்கம் கொண்டு வருகிறாள் என்று கவனிக்கிறார்கள். “மேலும், மேலும் வேண்டும்” என்று கதவை உடைத்து, திருடும் கொள்ளைக்காரர்களைப் போல, நடந்துகொள்ளுகிறார்கள். இப்படிப் பட்டவர்களுடைய குடும்பத்தைக் கர்த்தர் ஆசீர்வதிப்பதில்லை. கர்த்தருக்குப் பிரிய மில்லாதபடி வருகிற பணத்தினால், கஷ்டமும், நஷ்டமும் மட்டுமல்ல, வியாதிகளும், சாபங்களும், மரணங்களுமே தொடரும். பணம் படைத்த பெண்ணைத் தேடாமல், கர்த்தரால் கொடுக்கப்படுகிற, பயப்பக்தியுள்ள பெண்ணைத் தெரிந்தெடுங்கள்.

“கர்த்தரின் ஆசீர்வாதமே, ஐசுவரியத்தைத் தரும். அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்” (நீதி. 10:22). “போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே, மிகுந்த ஆதாயம்” (1 தீமோத். 6:6). ஆகவே தேவபிள்ளைகளே, கர்த்தருடைய நடத்துதலுக்கு ஒப்புக்கொடுத்து, “போதும்” என்ற தெய்வ பக்தி யோடும், ஆவிக்குரிய திருப்தியோடும் வாழுங்கள். செழிப்பான சோதோமை, மகிழ்ச்சியோடு லோத்துக்கு விட்டுக்கொடுத்த ஆபிரகாம், “தன் கூடாரத்தைப் பெயர்த்துக்கொண்டுபோய், எபிரோனிலிருக்கும் மம்ரேயின் சமபூமியில் சேர்ந்து குடியிருந்து, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினார்” (ஆதி. 13:18).

“மம்ரே” என்றால், “கொழுப்பானது” என்று அர்த்தம். “எப்ரோன்” என்றால் “செழிப்பானது” என்று பொருள். நீங்கள் கர்த்தரோடுள்ள நல்ல ஐக்கியத்தைப் பெற்றுக் கொள்வீர்களானால், செழிப்பாக, கொழுமையாக ஆசீர்வதிக்கப்படுவீர்கள். உலக ஆசீர்வாதங்களைப் பார்க்கிலும், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களும், உன்னதத்துக் குரிய, நித்திய ஆசீர்வதங்களும் மகா மகா மேன்மையானவை.

நினைவிற்கு:- “உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள். உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர்” (சங். 36:8).