தீர்க்கதரிசன வசனங்கள்!

“இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான்’ (வெளி. 22:7).

வேத புத்தகம் ஒரு தீர்க்கதரிசன புத்தகம். இது “வார்த்தை, பரிசுத்த எழுத்துக்கள், தேவனுடைய கட்டளைகள்” என்று அழைக்கப்படுகிறது. இதற்கு “வேத வாக்கியங்கள்” என்றும், “ஆவியின் பட்டயம்” என்றும் பெயர்கள் உண்டு. வெளிப் படுத்தின விசேஷத்தை, தீர்க்கதரிசன புத்தகமாகக் காணலாம்.

உலகத்தின் புத்தகங்களெல்லாம் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் மட்டுமே சொல்லும். ஆனால், பரிசுத்த வேதாகமம் மாத்திரமே, நடக்கப்போகிற வருங்கால நிகழ்ச்சிகளைக் குறித்தும், துல்லியமாக உரைக்கக் கூடியது.
பழைய ஏற்பாட்டில் நேபுகாத்நேச்சார் என்று சொல்லப்பட்ட பாபிலோன் ராஜா, “இனிமேல் சம்பவிக்கப்போகிறது என்ன?” என்கிற நினைவுகளுடன் படுக்கைக்குச் சென்றபோது, கர்த்தர் வருங்கால சம்பவங்களை எல்லாம், அவருக்கு அழகாக வெளிப்படுத்தி, விளக்கிச் சொன்னார். இரவு அந்த ராஜா நித்திரை செய்தபோது, மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவர், சம்பவிக்கப் போகிறதை சொப்பனத்தின் மூலம் தெரிவித்தார் (தானி. 2:29).

அதைப் போலவே, சீஷர்கள் வருங்காலத்தைக் குறித்து, அறிந்து கொள்ள விரும்பி, இயேசுவைப் பார்த்து, “உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன எங்களுக்குச் சொல்லும்” என்று அன்போடு கேட்டபோது, இயேசுகிறிஸ்து, அவர்களுக்கு தெளிவாக வருங்காலத்தைக் குறித்து விளக்கிச் சொன்னார். மத்தேயு 24-ம் அதிகாரம் முழுவதும் தீர்க்கதரிசன அதிகாரமாய் இருக்கிறது. பரிசுத்த வேதாகமம் முழுவதிலும், 27% வார்த்தைகள், தீர்க்கதரிசன வார்த்தைகளாவே இருக்கின்றன. உலகத்தின் வேறு எந்தப் புத்தகத்திற்கும் இல்லாத, ஒரு தனித்தன்மையை, இந்தத் தீர்க்கதரிசனங்களின் மூலமாகப் பரிசுத்த வேதாகமம் பெற்றிருக்கிறது.

கர்த்தருடைய வருகையைக் குறித்தும், அந்திக்கிறிஸ்துவினுடைய ஆட்சியைக் குறித்தும், அதன் பின்பு பூமியிலே நடக்கப்போகிற ஆயிரம் வருஷ அரசாட்சியைக் குறித்தும், நித்தியத்தைக் குறித்தும், ஏராளமான தீர்க்கதரிசன வசனங்கள் வேதத்தில் உள்ளன. பரலோகத்திலுள்ள பல பிரிவுகள் என்ன? நரகம் எப்படி இருக்கும்? என்பதை எல்லாம் வேதம் விவரித்துச் சொல்லுகிறது. நீங்கள் வருகைக்கு ஆயத்தப்பட வேதத்தை வாசிக்க வேண்டியது எத்தனை அவசியமானது!
புதிய ஏற்பாட்டில் 7,959 வசனங்கள் உள்ளன. அந்த வசனங்களிலே 330 வசனங்கள் தீர்க்கதரிசன வசனங்களாகக் கிறிஸ்துவினுடைய இரண்டாவது வருகையைக் குறித்து நமக்கு அறிவுறுத்திக் கொண்டேயிருக்கின்றன. வேதம் முழுவதிலும், ஏறக்குறைய 1,845 இடங்களிலே வருங்காலம் எப்படி இருக்கும் என்பதைக் குறித்த தீர்க்கதரிசன வசனங்களைக் காணலாம். வேதம் இத்தனை முறை கர்த்தருடைய வருகையைக் குறித்து திரும்பச் சொல்வதினால் நீங்கள் எச்சரிப்பைடைந்து, பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தத்தைப் பெற்று, வருகைக்கு ஆயத்தப்படுவோமாக!
தேவனுடைய பிள்ளைகளே, “அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு, பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற, அவ்வசனத்தைக் கவனித் திருப்பது நலமாயிருக்கும்” (2 பேது. 1:19).

நினைவிற்கு:- “கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார், அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்” (1 தெச. 4:16).