கைக்கொண்டால்!

“அவர் சத்தத்திற்கு உண்ைமையாய்ச் செவிகொடுப்பாயானால், கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும், உன்னை மேன்மையாக வைப்பார்” (உபா. 28:1).

பொதுவாக, உபாகமம் 28-ஆம் அதிகாரத்தின் 1 முதல் 12 வசனங்களை, முக்கியமான வைபவங்களில் வாசித்து, குடும்பத்தினரை ஆசீர்வதிப்பதைக் கண்டிருக்கிறேன். வேத வசனங்களைக் கைக்கொண்டு, “கர்த்தருடைய வார்த்தைக்குச் செவிகொடுக்கும் போது, என்னென்ன ஆசீர்வாதங்கள் வந்து பலிக்கும்” என்பதைக் குறித்து, அங்கே மிகவும் விபரமாக எழுதப்பட்டிருக்கிறது.

கர்த்தர் விதிக்கிற கட்டளைகளின்படியெல்லாம் செய்ய, ஒருவன் கவனமாயிருந் தால், அவன் பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பான்; வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பான். அவன் கர்ப்பத்தின் கனியும், அவன் நிலத்தின் கனியும், அவன் மாடுகளின் பெருக்கமும், அவன் ஆடுகளின் மந்தைகளுமாகிய மிருக ஜீவன்களின் பலனும், ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். அவன் கூடையும், மாப்பிசைகிற அவன் தொட்டியும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். அவன் வருகையிலும், ஆசீர்வதிக்கப்பட்டவன், போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டவன். சத்துருக்களை, கர்த்தர் அவனுக்கு முன்பாக முறியடிப்பார்.

“ஒரு வழியாய் வருகிறவர்கள், ஏழு வழியாய் அவனுக்கு முன்பாக ஓடிப்போவார்கள்” என்றெல்லாம் அங்கு வாக்குத்தத்தங்கள் கொடுக்கப்பட்டிருக் கின்றன. எந்தெந்த தேசங்கள், வேதாகமத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, வேதத்தின் வழியிலே நடக்க தீர்மானித்தனவோ, அந்தத் தேசங்களையெல்லாம் கர்த்தர் ஆசீர்வதித்தார். விக்டோரியா மகாராணியின் காலத்தில், இங்கிலாந்து தேசம், வேதத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தது. ஆகவே, வேதத்தை வாசித்துக் கனப்படுத்திய அந்த மகாராணி அரசாண்டபோது, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் சூரியன் அஸ்தமிப்பதில்லை என்று சொல்லப்படும் அளவுக்கு, எத்தனையோ நாடுகளை அது கீழ்ப்படுத்தி அரசாண்டது.

அதற்குப் பின்பு, அமெரிக்க தேசம், வேதத்திற்கும், கர்த்தருக்கும் முக்கியத்துவம் கொடுத்தது. அவர்கள் தங்களுடைய ஒவ்வொரு டாலர் நோட்டுகளிலும் கூட, (கர்த்தரே எங்கள் நம்பிக்கை) என்று அச்சிட்டார்கள். ஆகவே, கர்த்தர் அந்தத் தேசத்தை ஆசீர்வதித்துப் பாலும், தேனும் ஓடுகிற தேசமாக்கினார். இன்று உலகத்தில் சிறந்த வல்லரசாகத் திகழ்கிறது. கர்த்தருடைய வார்த்தைகளைக் கைக்கொள்ளும்போது, கர்த்தர் உங்களோடும், உங்கள் குடும்பத்தோடும் உடன்படிக்கை செய்கிறார். அந்த உடன்படிக்கையிலே, அவர் நமக்குக் கொடுக்கிற வாக்குத்தத்தங்கள் எவை எவை?
1. உனக்கு என்றைக்கும் கொடுக்கிற தேசத்திலே, நீ நீடித்த நாளாயிருப்பாய் (உபா. 4:40). 2. என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ, ஆயிரம் தலைமுறை மட்டும் இரக்கம் செய்வேன் (யாத். 20:6). 3. உனக்கு நன்மையுண்டாகும் (உபா. 10:13). 4. நீ கர்த்தருடைய சொந்த ஜனமாயிருப்பாய் (உபா. 26:18). 5. நான் உன்னோடிருந்து உனக்கு நிலையான வீட்டைக் கட்டுவேன் (1 இராஜா. 11:38). 6.நீ ஜீவனில் பிரவேசிப்பாய் (மத். 19:17)
வேதாகமம் முழுவதிலும், எண்ணற்ற உடன்படிக்கையின் வாக்குத்தத்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. வேத வாக்கியத்தைக் கைக்கொண்டால், அவருடைய கட்டளைகளின்படி நீங்கள் நடந்தால், அந்த நிபந்தனையின் பேரில், உங்களுக்குக் கொடுக்கப்படும் வாக்குத்தத்தங்களே, மேற்கூறப்பட்டவைகள்.

நினைவிற்கு:- “தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்பு கூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல” (1யோவா. 5:3).