வேதமும் தினசரி குறிப்பும்!

“உம்முடைய வேதத்தை மனுஷர் காத்து நடவாதபடியால், என் கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது” (சங். 119:136).

வருடத் தொடக்கத்திலே, நம்மிலே அநேகர் நாட்குறிப்பு எழுத ஆரம்பிப்பது உண்டு. புத்தாண்டில் பல தீர்மானங்களைச் செய்வதுண்டு. ஆனால், நாளடைவில், அந்தத் தீர்மானங்கள் நிறைவேறுவதில்லை, நாட்குறிப்பையும் அவர்கள் தொடர்ந்து எழுதுவதும் இல்லை. சரி, வேதம் நம்மைக் குறித்துத் தன் நாளேட்டில், எழுத ஆரம்பித்தால், அது எப்படியிருக்கும்?
ஜனவரி 10:- இன்று ஒரு புதுமணத் தம்பதியருக்கு நான் பரிசாக அளிக்கப்பட்டேன். ஏராளமான பரிசுப் பொருட்கள் குவிந்து கிடந்தன. அவைகளுக்குக் கிடைத்த வரவேற்பு எனக்குக் கிடைக்கவில்லை. மிகவும் அலட்சியமாய், “வேத புத்தகமா?” என்று சொல்லி, ஒரு ஓரத்தில் வைத்துவிட்டார்கள்.

ஜனவரி 16:- இன்று ஞாயிற்றுக்கிழமை, புதுமணத் தம்பதிகள் ஆலயத்திற்கு புறப்பட்டார்கள். அப்போது தான் புதிய வேதாகமத்தை கையில் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு வந்தது. ஆகவே, நான் கண்டுபிடிக்கப்பட்டேன். பத்திரமாக ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டேன். என்னை விரிக்காமல், திறக்காமல், அப்படியே வீட்டிற்குக் கொண்டு வந்து விட்டார்கள்.

ஜனவரி 27:- அன்று அவர்கள் புதிதாகத் தொடங்க இருந்த, தொழிலை ஆசீர்வதித்து ஜெபிக்கும்படி போதகர் வந்தார். அவர் உபாகமம் 28-ஆம் அதிகாரத்திலிருந்து, “நீ கையிடும் எல்லா வேலையிலும், உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார். உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார்” என்ற வசனம் வாசிக்கப்பட்டபோது, அவர்களுக்கு சந்தோஷமாய் இருந்தது.

ஜூலை 5:- நான் திறக்கப்பட்டும், வாசிக்கப்பட்டும், பல மாதங்களாகி விட்டன. இன்று, இரவிலே திடீரென்று என்னைத் தேடினார்கள். மனைவி கெட்ட சொப்பனம் கண்டு அலறவே, திடுக்கிட்டு விழித்த அவர்கள், என்னைத் தேடி எடுத்து, அவள் தலையணைக்கு அடியிலே வைத்துக் கொண்டார்கள்.

நவம்பர் 1:- வீட்டு வேலைக்காரிக்குத் திடீரென்று பேய் பிடித்துவிட்டது. அவள் முன்னறையில் பயங்கரமாய்த் தலைவிரித்து ஆடினாள். அப்போது மீண்டும் என்னைத் தேடி வந்தார்கள். என்னைக் கையிலே எடுத்துக் கொண்டுபோய், வேலைக் காரியின் தலையில், அடியாய் அடித்துப் பிசாசை விரட்ட முயற்சித்தார்கள்.

டிசம்பர் 15:- கிறிஸ்மஸ்-க்காக வீட்டை வெள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். படுக்கை அறையிலிருந்த என்னை, அழுக்குக் கூடையிலே வைத்து வீட்டின் பின்பகுதியிலே எடுத்து வைத்தார்கள். வெள்ளையடித்து முடிக்கிற வரையிலும், நான் அங்கேயே, பழைய துணிகளோடும், குப்பைகளோடும், கிடக்க வேண்டியதாயிற்று. என் பரிசுத்த மேனிக்கு, அவர்கள் கொடுத்த இடத்தால், “நான் அனலில் இட்ட புழுப்போல்” துடித்தேன், சொல்லொண்ணா வேதனை அடைகிறேன்.

பின் குறிப்பு:- சுய நலத்திற்காகவே என்னைப் பயன்படுத்தி, மற்ற நேரங்களில் புறக்கணிக்கும் அவர்கள், என் வசனத்தாலே நியாயந்தீர்க்கப்படுவார்கள் என்பதை அறியாமல் இருக்கிறார்களே. எவ்வளவு காலம் இந்த இடத்திலே நான் இருக்க வேண்டியது வருமோ தெரியவில்லை. தேவபிள்ளைகளே, இது ஒரு கற்பனையான நாட்குறிப்பேடுதான் என்றாலும் சற்று ஆழமாய்ச் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் வேதத்தை வாசிக்கிறீர்களோ இல்லையோ, ஆனால் வேதம் உங்கள் வாழ்க்கையை வாசித்தறிகிறது.

நினைவிற்கு:- “உமது வசனத்தைத் தியானிக்கும்படி, குறித்த ஜாமங்களுக்கு முன்னே என் கண்கள் விழித்துக்கொள்ளும்” (சங். 119:148).