எப்படி வாசிக்க வேண்டும்!

“உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள்முழுதும் அது என் தியானம்” (சங். 119:97).

வேதத்தை எப்படி சொந்தமாக்கி, அனுபவமாக்கிக் கொள்ளவேண்டும் என்பதை, ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் அறிந்திருந்தால், நலமாயிருக்கும்! ஏனென்றால், அது வெற்றியின் வாழ்க்கையிலே உங்களை நடத்தி செல்கிற, பரிசுத்தமான புத்தகம்.

விதவிதமான மலர்களும், நறுமணமும் மிக்க பூக்களும் இவ்வுலகில் உள்ளன. ஒரு பூங்காவுக்கு செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். முதலாவது, நீங்கள் அங்கே ஒரு வண்ணத்துப் பூச்சியை பார்க்கிறீர்கள். அது அழகாக பறந்து சென்று, அங்கு மலர்ந்திருக்கும் ஒரு பூவின்மேல் அமருகிறது. அது பல மலர்களில் அமர்ந்த போதும்கூட, மலரின் மகரந்த தூளினாலோ, அதினுள்ளிருக்கும் தேனினாலோ அதிகமாக பலன் அடைவதில்லை.
இரண்டாவதாக, அங்கே ஒரு சிறுமி வருகிறாள். மலர்களை எல்லாம் கண்குளிரப் பார்க்கிறாள். ஒரு பூவை பறித்து முகர்ந்து பார்க்கிறாள். அதின் அழகின் கவர்ச்சியால், அதைப் பறித்து, தன் தலையில் சூடிக்கொள்கிறாள். அதன் பிறகு அதைக் குறித்து, கவலைபடாமல், சென்றுவிடுகிறாள்.

மூன்றாவதாக, அங்கே ஒரு தேனீ பறந்து வருகிறது. அது ஒரு பூவில் அமர்ந்து, அதின் மகரந்தங்களை, தன்னுடைய காலில் சேர்த்து கொள்கிறது. மட்டுமல்ல, மலரின் குழாய்கள் போன்ற உட்பகுதியின் ஆழத்திற்கு சென்று, அங்கேயுள்ள தேனை உறிஞ்சிக் குடிக்கிறது. தனக்கு மட்டுமல்ல, தன் இனத்திற்கும், சிறு குஞ்சுகளுக்கும் எடுத்து சென்று, தன் கூட்டை நோக்கி பறந்து செல்கிறது. தேவ பிள்ளைகளே, நீங்கள் வண்ணத்துப் பூச்சியா அல்லது தேனீயா? வேதத்தை ருசித்து, வாசிக்கிறீர்களா? நீங்கள் கற்றதை மற்றவர்களிடம் பகிர்ந்து, அவர்களையும் மகிழ்ச்சிப்படுத்துகிறீர்களா?
மார்ட்டீன் லூத்தர் ஒருமுறை சொன்னார்: “வேதத்தை என் கையில் எடுக்கும் போதெல்லாம் பழங்கள் நிறைந்த சோலைக்கு செல்வதாக நான் எண்ணுகிறேன். முழு வேதாகமத்தையும், ஒரு ஆப்பிள் மரமாக நான் காண்கிறேன். அதின் அடிமரத்தை பிடித்து முழு பெலத்தோடு உலுக்கும்போது, நன்றாய் பழுத்த பழங்கள் கீழே விழுகின்றன. கனிந்த அப்பழங்களை புசித்து மகிழுகிறேன்.

பிறகு நான், ஒவ்வொரு கிளைகளாக உலுக்குகிறேன். பின்பு, ஒவ்வொரு சிறுசிறு கொப்புகளையும், உலுக்குவது உண்டு. அதைப் போலவே, நான் வேதத்தை கையில் எடுக்கும்போது, முழு புத்தகத்தையும் முழுவதுமாக வாசித்து முடிப்பேன். அதற்கு பிறகு ஒவ்வொரு அதிகாரமாக தியானிப்பேன். அதற்கு பிறகு ஒவ்வொரு வசனமாக, ஆப்பிள் பழத்தை ருசிப்பது போல, ருசிக்க ஆரம்பித்து விடுவேன். அது, என் ஆவிக்குரிய ஜீவியத்திற்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது என்றார்.” வேதத்திலே நீங்கள் பிரியமாய் இருக்கும்போது மட்டுமே, அதை வாசிப்பதற்கு உங்களுக்கு ஆர்வம் ஏற்படும்.

வேதத்தை வாசிப்பதினால், என்னென்ன நன்மைகள் உண்டு? என்னென்ன ஆசீர்வாதங்கள் உண்டென்று நீங்கள் அறியும்போது, உங்களுக்குள் தாகமும், வாஞ்சையும் ஏற்படும். அது தேனிலும், தெளித்தேனிலும் மதுரமானது. பொன்னி லும் பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கது. தாவீது வேதத்தை வாசித்து தியானித்தார். கர்த்தருக்குள் பெலன் அடைந்தார்.

நினைவிற்கு:- “கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்; உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே” (1 பேது. 1:25).