தேவ ஆவியால்!

“வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது” (2 தீமோ. 3:16).

வேதப்புத்தகம், விலையேறபெற்ற ஒரு புத்தகமாகும். இங்கே பழைய ஏற்பாட்டு, புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் அனைவரையும் நீங்கள் உயிரோட்டமாய் காணலாம். அவர்களை பற்றி அறிந்துகொள்வதும், அவர்கள் காட்டின முன் மாதிரியின்படியே நடப்பதும், நமக்கு எவ்வளவு பாக்கியமானது! ஏதோ, சரித்திரத்தில் வருகிற புருஷர்களை போல, அவர்களை நீங்கள் சாதாரணமாக எண்ணாமல், உங்களுடைய முற்பிதாக்களை போல, சகோதர, சகோதரிகளை போல, குடும்ப அங்கத்தினரை போல உணரமுடியும். சில வேதாகம கதாபாத்திரங்கள் உங்களுக்கு எச்சரிப்பை தருகிறார்கள்.

சிலரது வாழ்க்கை, உங்களை ஊக்கப்படுத்துகிறது. ஊன்றிக்கட்டுகிறது. “தேவனோடு சஞ்சரிப்பது எப்படி?” என்பதை ஏனோக்கின் மூலமாகவும், நோவா வின் மூலமாகவும், கர்த்தருக்கு சிநேகிதனாய் இருந்த மோசேயின் மூலமாகவும், நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

ஆபிரகாமுக்கு இருந்த விசுவாசத்தின் உன்னத நிலையை கண்டு பிரமிப்பு அடைகிறோம். கர்த்தர் அவரை, “புறப்பட்டு வா” என்று அழைத்தபோது, எவ்வளவு மன உறுதியோடு, தகப்பன் வீட்டையும், தாய் வீட்டையும் விட்டு புறப்பட்டு, கர்த்தர் காண்பித்த தேசத்திற்குப் போனார். கர்த்தர்மேல் விசுவாசம் வைத்து, தன் ஒரேபேறான மகனை பலிபீடத்தில் கிடத்தினார். “கர்த்தர், தன் மகனை உயிரோடு எழுப்ப வல்லவர்” என்று விசுவாசித்தான். இது உங்கள் விசுவாசத்தை அனல் மூட்டி எழுப்பி விடட்டும்.

கர்த்தரைத் துதிக்கிற தாவீதை, சங்கீதக்காரனாக பார்ப்பதும், அவருடைய பாடல் களை பாடி மகிழ்வதும், எத்தனை மகிழ்ச்சியானது! அந்த சங்கீதங்களின் ராகம் என்ன, தாளம் என்ன, நமக்கு தெரியாவிட்டாலும், பக்தர்களின் உணர்வுகளை பகிர்ந்துகொள்கிறோம். கர்த்தர்மேல் வைத்த வைராக்கியம், அன்பு, கர்த்தரை துதிக்கிற துதி உங்களை பரவசப்படுத்தட்டும். நீங்களும் அவரோடு சேர்ந்து கர்த்தரை துதித்து மகிழ தீர்மானியுங்கள்.

அக்கினி சூளையிலே பாடுபடும்போது, சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவின் பக்தி வைராக்கியமும், சிங்க கெபியிலே பாடுபடும்போது, தானியேலின் விடா நம்பிக்கையும், உங்களை வைராக்கியப்படுத்துகின்றன. எந்த சவால்களையும், தேவனுடைய வல்லமையோடு, எதிர்த்து நின்று வெற்றி பெறலாம் என்கிற நம்பிக்கையைக் கொண்டு வருகிறது. எலியாவைக் குறித்து நினைக்கும்போதெல்லாம், உங்களுடைய நாடி நரம்புகளில் பரிசுத்த ஆவியின் அக்கினி ஓடட்டும். எலியா கர்த்தருக்காக எவ்வளவு பக்தி வைராக்கியமாய் நின்று, அந்த தேசத்தையே கர்த்தர் பக்கமாக திருப்பி விட்டார்! ஆவியோடும், பெலத்தோடும், கர்த்தரின் இரண்டாம் வருகைக்கு ஆயத்தம் செய்வீர்களா?
இன்றைக்கும் வேதத்திலிருந்து, புதுப்புது வெளிபாடுகளை பெறுகிறோம். வேத இரகசியங்களின் ஆழங்களைப் பெற்றுக்கொள்கிறோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட நிருபங்கள், இன்றைக்கும் வல்லமையுள்ள தாகவும், உங்களுடைய வாழ்க்கைக்கு ஏற்றதாகவும், ஆசீர்வாதமாகவும் அமைந் திருக்கிறதினால், கர்த்தரைத் துதியுங்கள்.

நினைவிற்கு:- “தீர்க்கதரிசனமானது; ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள், பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்” (2 பேது. 1:21).