இருதயத்தில் எழுதுங்கள்!

“இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது” (உபா. 6:6).

ஆம், கர்த்தருடைய வார்த்தைகளை நீங்கள் உங்களுடைய இருதயத்தில் எழுத வேண்டும். உள்ளத்தின் ஆழத்தில் எழுத வேண்டும். நினைவில் எழுத வேண்டும். பாருங்கள், சிறு பிள்ளைகள், சிலேட்டில் எழுதுகிறார்கள், ஆசிரியர்கள் கரும்பலகை களில் எழுதுகிறார்கள், மாணவர்கள் நோட்டுபுத்தகத்தில் எழுதுகிறார்கள். அச்சிடு கிறவர்கள், காகிதத்தில் எழுதுகிறார்கள். ஆனால், அவைகளோ காலத்தால், அழிந்து போகின்றன.
நாமோ, வேத வசனங்களை நம்முடைய இருதயத்தில் எழுதுகிறோம். மனப்பாடமாகப் பதித்து வைக்கிறோம். கர்த்தருடைய வார்த்தைகள் ஏற்ற சமயத்தில் நமக்கு எவ்வளவு உதவி செய்து அருமையான பாதுகாப்பை தருகின்றன, விடுதலை அளிக்கின்றன!
தாவீது ராஜா சொன்னார், “நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்யாதபடிக்கு உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்” (சங். 119:11). அப்.பவுல் சொன்னார், “இந்த வார்த்தை உனக்குச் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது; இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே” (ரோமர். 10:8).

வேதப்புத்தகம், வெளிப்பார்வைக்கு, உலகப்பிரகாரமான ஒரு புத்தகத்தை போல பேப்பரிலும், மையால் அச்சிட்டிருந்தாலும், அதிலுள்ள ஒவ்வொரு வசனத்துக்கும் ஜீவன் இருக்கிறது, ஆவியிருக்கிறது. அது ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறது. பேதையை ஞானியாக்குகிறது. உலக ஓட்டத்திற்கு பின்பு, தேவ சாயலில் உங்களை மறுரூபமாக்குகிறது. நீங்கள் மகிமையின் மேல் மகிமையடைவீர்கள்.
உங்கள் இருதயத்தில் எழுதப்பட்ட இந்த வார்த்தைகளை பிரசங்கியுங்கள். கர்த்தரின் மீட்பின் செய்தியை, கர்த்தர் தமது தூதர்களின் கையில் கொடுக்காமல், உங்களுடைய கையிலே கொடுத்திருக்கிறார். நீங்கள் பிரசங்கிக்கிற இந்த இரட்சிப் பின் செய்தி, பாதாளத்திற்குச் செல்கிற பாவியை, பரலோகத்திற்கு செல்லும் பரிசுத்தவான்களாய் மாற்றுகிறது.

கர்த்தருடைய ஊழியக்காரனாகவும், தீர்க்கதரிசியாகவும், விளங்க எரேமியா பலவித சாக்குபோக்குகளை சொன்னார். அதற்கு கர்த்தர் “நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக” (எரே. 1:7) என்றார்.

அப்படியே தீர்க்கதரிசியாகிய எசேக்கியேலை பார்த்து, “மனுபுத்திரனே, உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவலாளனாக வைத்தேன்; நீ என் வாயினாலே வார்த்தையைக் கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக” (எசே. 3:17) என்றார்.

சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த அப்போஸ்தலர்களை, கர்த்தருடைய தூதன் விடுவித்து, “நீங்கள் போய், தேவாலயத்திலே நின்று, இந்த ஜீவ வார்த்தைகள் எல்லாவற்றையும் ஜனங்களுக்கு சொல்லுங்கள் என்றார்” (அப். 5:20). தேவபிள்ளைகளே, சமயம் வாய்த்தாலும், வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணுங்கள் (2 தீமோ. 4:2).

நினைவிற்கு:- “கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது” (ரோம. 1:16).