பரிசுத்தவான்களாக்கும் வேதம்!

“எவ்விதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் பாத்திரராக மாத்திரம் நடந்துகொள்ளுங்கள்” (பிலி. 1:27).

தேவனாகிய கர்த்தர், சுவிசேஷத்தையும், வேதப் புத்தகத்தையும், தேவதூதர்களை நம்பிக் கொடுக்காமல், சாதாரண மனிதராகிய நம்மை நம்பி, நம்முடைய கைகளிலே கொடுத்திருக்கிறார். “நீங்கள் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள்” என்று கட்டளையிட்டிருக்கிறார் (மாற். 16:15). இது எத்தனை பாக்கியம்!
உங்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட சுவிசேஷம், மகிமையான சுவிசேஷம். இந்த சுவிசேஷம் கல்வாரி சிலுவையிலே, இயேசுகிறிஸ்து இரத்தக்கிரயம் செலுத்தி, பெற்றுக்கொண்ட சுவிசேஷம். ஜனங்களை விடுதலையாக்கும் அற்புதமான சுவிசேஷம். கர்த்தருடைய வருகையிலே, தேவபிள்ளைகளை மறுரூபமாக்குகிற சுவிசேஷம். இந்த வேதப் புத்தகத்தை “தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷம்” என்று வேதம் அழைக்கிறது (2 கொரி. 4:4).

இந்திய தேசத்திற்கு, இந்த மகிமையான சுவிசேஷம் தந்ததற்காக, நாம் கர்த்தருக்கு துதி ஸ்தோத்திரங்களை செலுத்த வேண்டும். இன்றைக்கு, நாம் நமது தாய் மொழியில், கர்த்தருடைய வார்த்தைகளை வாசித்து, மகிழ்ச்சியடைகிறோம். அதற்காக கர்த்தருக்கும், வேதத்தை நமது தாய் மொழியில் மொழிபெயர்த்து தந்த பரிசுத்தவான்களுக்கும், நன்றியுள்ளவர்களாய் இருக்கவேண்டியது அவசியம்!
இந்தியாவில் பேசப்படும், மொத்த மொழிகள் 880 ஆகும். இவைகளில் வேதம் முதல் முதலில் மொழிபெயர்க்கப்பட்டது, தமிழ் மொழியில்தான். அது நேரடியாக மூல பாஷையான எபிரெயு, கிரேக்கு பாஷைகளில் இருந்து, மொழி பெயர்க்கப்பட்டது. முதலில் மொழிபெயர்த்தவர், டென்மார்க் தேசத்திலிருந்து மிஷனெரியாக இந்தியாவிற்கு வந்த, ‘சீகென்பால்’ என்பவர்
இந்தியாவை பற்றியும், தமிழ்மொழியைப் பற்றியும், ஒன்றுமே அறியாத அவருடைய உள்ளத்தை, கல்வாரியின் நேசம் நெருக்கி ஏவினது. அவர் தம்முடைய சொந்த தேசமாகிய ஸ்பெயினிலிருந்து, ஏழு மாதங்கள் கப்பலில் பிரயாணம் செய்து, தமிழ்நாட்டில் உள்ள தரங்கம்பாடியை அடைந்தார். ஆனால், கப்பலிலிருந்து தரை இறங்குவதற்கு, அரசாங்கத்திலிருந்து அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.

ஆகவே, ஒரு சிறு அறையில், அவர் நான்கு மாதங்கள் தொடர்ந்து அடைக்கப் பட்டிருந்தார். அவருக்கு நேரிட்ட சோதனைகளும், போராட்டங்ளும் அதிகம். மொழி தெரியாமல் தவித்தார். வெயில் அகோரம் தாங்க முடியால் துடித்தார். இந்தியரை அடிமைப்படுத்த வந்த, “வெள்ளைக்காரன்” என்று எண்ணி, அவரை ஜனங்கள் வெறுத்துத் தள்ளினார்கள்.

சரியான உணவின்றி, உடையின்றி, ஏற்றத்தாழ்வுகளுள்ள சீதோஷ்ண நிலையில், அவர் அதற்காக பாடுபட வேண்டியதிருந்தது. எனினும், அவர் சோர்ந்துபோக வில்லை. “என் ஆண்டவர் என்னோடு இருக்கிறார்” என்று, கர்த்தரையே சார்ந்து கொண்டு, வேதத்தை தமிழிலே மொழிபெயர்த்தார்.

வேதத்தை நீங்கள் கையிலே எடுக்கும்போதெல்லாம், இந்த வேதத்தை உங்கள் கைகளில் கிடைக்கச் செய்த கர்த்தருக்கு நன்றி செலுத்துங்கள். உங்களுக்காக தியாகம் செய்த மிஷனெரிகளுக்காக நன்றியோடு கர்த்தரைத் துதியுங்கள். நீங்களும் வேதப் புத்தகம் மற்றவர்களுக்குக் கிடைக்கும்படி தியாகம் செய்யுங்கள்.

நினைவிற்கு:- “கர்த்தருடைய சொற்கள் மண் குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப் பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது” (சங். 12:6).