மாரியும் மழையும்!

“மாரியும், உறைந்த மழையும், வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்தது, அதில் முளை கிளம்பி விளையும்படிச் செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ, அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்” (ஏசா. 55:10,11).

தேவனுடைய வசனமானது, மாரிக்கும், மழைக்கும் ஒப்பிடப்பட்டுள்ளது. மழை இந்த உலகத்திற்கும், தாவரங்களுக்கும், மனிதருக்கும், மற்றும் ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும், எவ்வளவு பெரிய ஆசீர்வாதம்! மழை பெய்யாத காரணத்தால், அநேக கிராமங்கள், பாழாய்ப் போய், பாலைவன நிலங்களாகிவிட்டன; வனாந்திரமான மணல் பரப்புகளாகி விட்டன. ஆனால், மழை பெய்த கிராமங்கள் தழைத்து, ஓங்கி தலைநிமிர்ந்து நிற்கின்றன.
எங்கள் கிராமத்தில், ஏறக்குறைய இருபது ஆண்டுகளாகத் தொடர்ந்து மழையில்லா மல் போனதால், பூமி காய்ந்து வெடித்தது. மரங்கள் பட்டுப்போயின. கிராம மக்களுக்குத் தொழில் கிடைக்கவில்லை. விவசாயம் ஒன்றும் நடைபெறாததினால், பெரும்பாலான ஜனங்கள், ஊரை விட்டு, வேலைதேடி ஓட வேண்டியதாயிற்று.

மழை இருந்திருக்குமானால், கிராமம் செழித்துத் தழைத்தோங்கி இருந்திருக்கும். சென்னை பட்டணத்தில் ஒரு வருஷம் மழை பெய்யாமல் போனால், அதனால் லட்சம் லட்சமான மக்களுடைய நிலைமை என்னவாகும் என்று எண்ணிப்பாருங்கள். குடி தண்ணீர் பஞ்சம், பயங்கரமாகத் தலைவிரித்தாடும். வெயில் அகோரமாகிவிடும். ஜனங்கள் வாழ்வது அரிது என்ற சூழ்நிலை ஏற்பட்டு விடக்கூடும்.
கர்த்தர் மாரியையும், மழையையும் கிருபையாக உலகத்திற்குக் கொடுக்கிறது போலவே, வேத வசனங்களையும், அபிஷேகத்தையும் நமக்குக் கொடுத்து, ஞாயிறு ஆராதனையிலும் மழை பொழிவது போல, கர்த்தருடைய வார்த்தைகளை பொழிய செய்கிறார். வாக்குத்தத்த வசனங்களை பெற்றுக்கொள்கிறோம். ஆலயங்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன.

மழையைக் குறித்து, கர்த்தருடைய வாக்குத்தத்தம் என்ன? “ஏற்ற காலத்திலே மழையைப் பெய்யப்பண்ணுவேன்; ஆசீர்வாதமான மழை பெய்யும்” (எசே. 34:26). ஒவ்வொரு காலத்திலும், கர்த்தர் தீர்க்கதரிசிகளை எழுப்பித் தந்து, மழையை போல, கர்த்தருடைய வார்த்தைகளை பொழியச் செய்கிறார். கர்த்தர் மழையை பெய்யப்பண்ணும்போது, தூறலை போல அல்லாமல், ஏராளமாய், தாராளமாய் பொழியும்படி செய்கிறார். அதினால் பூமி நனைகிறது. குளங்கள் பெருகுகின்றன. ஆறுகளால் வயல்வெளிகள் செழிப்பாகின்றன. குடிப்பதற்கு போதுமான தண்ணீர் கிடைக்கிறது.

வேத வசனத்தின் மூலமாகவே, சபைகள் பெருகுகின்றன. ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படுக்கிறார்கள். எங்கும் எழுப்புதலின் அக்கினி காணப்படுகின்றன. வேத வசனங்கள்தான் உயிர்மீட்சியை தேசத்தில் கொண்டு வருகிறது. மழை பட்சபாத மின்றி யாவர்மேலும் பொழிகிறது. “அவர் தீயோர் மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யபண்ணுகிறார்” (மத். 5:45).
அப்படியே, வேத வசனமும் எல்லோருக்கும் பொதுவானது. முழு உலகத்திற்கும் கர்த்தர் கிருபையாக, வேதத்தை அருளிச்செய்திருக்கிறார். தேவனுடைய பிள்ளை களே, அதை வாசித்து, கர்த்தருடைய முகத்தை நோக்கிப்பாருங்கள்.

நினைவிற்கு:- “எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற, பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும்” (எபி. 6:7).