தெளி தேன்!

“அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன் கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும், மதுரமுள்ளதுமாய் இருக்கிறது” (சங். 19:10).

தாவீது ராஜா, வேதத்தை கையில் எடுக்கும்போதெல்லாம், தேன் பாட்டிலை எடுப்பதைப்போல எடுத்தார். தேனை கையிலே ஊற்றி, நாக்கினால் தொட்டு ருசிக்கும்போது, எத்தனை மதுரமாயிருக்கும்! அதை விட வேதம் இனிமையானது. தேனிலும், தேன் கூட்டிலிருந்து ஒழுகும், தெளிதேனிலும் மதுரமானது!
அநேகருக்கு, வேதப் புத்தகத்தின் அருமையான மதுரம் தெரியவில்லை. கடமைக் காகவும், பாரம்பரியத்துக்காகவும் வேதத்தை வாசிக்கிறார்கள். சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் வேதத்தை எடுத்து படியுங்கள் என்று கட்டாயப்படுத்தும்போது, அவர்கள் விளக்கெண்ணெய் பாட்டிலை கையிலே எடுப்பதுபோல ஏந்தி, வேப்பம் எண்ணெயைக் குடிப்பதுபோல குடிக்கிறார்கள். ஆயிரக்கணக்கான தேனீக்கள், பல மலர்களிலிருந்து எடுக்கும் தேனை, தங்கள் கூட்டில் சேமித்து வைக்கின்றன. வேதம் ஒரு தேன் கூட்டுக்கு ஒப்புமையானது. நாற்பதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஏறக்குறைய 1600 வருட இடைவெளியில், பரலோக தேனை கொண்டு வந்து, வேதப் புத்தகத்தில் சேகரித்திருக்கிறார்கள்.

மோசே, வனாந்தரத்திலிருந்து தமது வார்த்தைகளை எழுதினார். எரேமியா, குகையிலிருந்து வேதத்தை வரைந்தார். தானியேல், அரண்மனையிலிருந்தும், மலையடிவாரத்திலிருந்தும், இதை வடித்தார். பவுல், சிறைச்சாலையிலிருந்து தமது நிருபங்களுக்கு, வரி வடிவம் கொடுத்தார். யோவான், பத்முதீவின் சிறையிருப் பிலிருந்து, வெளிப்படுத்தின விசேஷத்தை வெளிக்கொண்டு வந்தார். லூக்கா, தமது பிரயாணத்திலிருந்து, கர்த்தருடைய வார்த்தைகளை எழுதினார். தாவீது, வேத வார்த்தைகளை, யுத்த நாட்களில் அதிகமாக எழுதினார். சாலொமோனோ, சமாதான காலத்தில், கர்த்தருடைய வார்த்தைகளை தொகுத்து உரைத்தார்.

பரிசுத்த ஆவியானவர், பல தேவ மனிதர்களை பயன்படுத்தி, வேதாகமத்தை எழுதி யிருந்தாலும், அவர்கள் ஒருவரையொருவர் சந்தித்ததும், பார்த்ததும்கூட கிடையாது. அவர்கள் பல்வேறு துறைகளிலிருந்தும், பல்வேறு சூழ்நிலைகளிலிருந்தும், பல்வேறு இடங்களிலிருந்தும் எபிரெய, கிரேக்க, லத்தீன் மொழிகளிலே எழுதினார்கள். இன்று, எத்தனையோ ஆயிரமாயிரமான மொழிகளில், அது மொழி பெயர்க்கப்பட்டு விட்டது. வேதாகமத்தின் கருத்து, இன்றைக்கு நமக்கு தேனாக இனிக்கிறது. பாலாக விசுவாசிகளை வளரச் செய்கிறது.

தேனின் ஒரு குணாதிசயம், அது கண்களை தெளிவிப்பதாகும். யுத்தத்தில் களைப்படைந்திருந்த யோனத்தான், தன் கோலின் நுனியினாலே, தேனை எடுத்து ருசி பார்த்ததினால், அவனுடைய கண்கள் தெளிவடைந்தது (1 சாமு. 14:27). வேத வசனம் என்ற கன்மலையின் தேனினால், ஆன்மீக கண்கள் தெளிவடையும். ஆகவே, தேனிலும், தெளிதேனிலும் மதுரமான, வேத வசனங்களை அருந்துங்கள்.

“ஜான் ஆதாம்” என்ற பக்தன் சொல்லுகிறார், “என் பிள்ளைகள் வேதாகமத்தை படிக்க ஆரம்பித்தபோது, அவர்கள் இந்நாட்டின் தலைச்சிறந்த பிரஜைகளாக வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்குள் பிறந்தது” என்றார். தேவபிள்ளைகளே, நீங்கள் வேதத்தை விரும்பி வாசித்து, வெற்றியை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.

நினைவிற்கு:- “மனுபுத்திரனே, நான் உனக்குக் கொடுக்கிற இந்தச் சுருளை நீ உன் வயிற்றிலே உட்கொண்டு, அதினால் உன் குடல்களை நிரப்புவாயாக என்றார். அப்பொழுது நான் அதைப் புசித்தேன்; அது என் வாய்க்குத் தேனைப்போல் தித்திப்பா யிருந்தது” (எசேக். 3:3).