தூக்கிவிடுகிற துணை!

“ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான். ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ. அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே” (பிர. 4:10).

உங்களை தூக்கிவிடக்கூடிய துணை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துதான். உங்களை உளையான சேற்றிலிருந்து தூக்கியெடுகிறவர், பாவ பழக்க வழக்கங் களிலிருந்து தூக்கியெடுகிறவர், சிற்றின்ப மோகத்திலிருந்து தூக்கியெடுக்கிறவர், பாதாளத்தின் பிடியிலிருந்து பிடுங்கியெடுக்கிறவர். எந்த கேடுபாடும் அணுகுவதற்கு விடாமல் உங்களை தூக்கியெடுத்து மேன்மைப்படுத்துகிறவர்.

இரட்சிப்பு என்றால் என்ன? பாதாளத்திலிருந்து தூக்கிவிடப்படுவது தான் இரட்சிப்பு. பாவங்களிலிருந்தும், அக்கிரமங்களிலிருந்தும் கர்த்தர் உங்களைத் தூக்கியெடுத்து, தம்முடைய இரத்தத்தால் கழுவி, கன்மலையின்மேல் உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துகிறார். உங்களை பின் தொடர்ந்த எல்லா சாபங்களையும், சத்துருவாகிய பிசாசின் கிரியைகளையும் நீக்கி விடுதலையைத் தருகிறார். உங்களை தூக்கியெடுப்பதற்காகவே இயேசு கிறிஸ்து பரலோகத்தை விட்டு பூமிக்கு இறங்கி வந்தார்.

நான் சிறுவனாயிருந்தபோது நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆசையில் ஒரு கிணற்றில் மூழ்கிவிட்டேன். அங்கு ஒருவரும் எனக்கு துணையாயிருக்கவில்லை. தற்செயலாய் அங்கே வந்த என்னுடைய மூத்த சகோதரன் என்னுடைய துணிகளைப் பார்த்து இது என் தம்பியின் உடை அல்லவா? என்று கிணற்றுக்குள்ளே பாய்ந்து, குதித்து என்னை ஆழத்திலிருந்து தூக்கிக்கொண்டு வந்தார். ஆகவே உயிர் பிழைத்தேன். அப்படித்தான் பரலோகத்திலிருந்து தேவ குமாரன் உங்களுக்காக இந்த பூமியில் இறங்கி வந்து, பாதாளத்தின் ஆழத்திலே, பாவத்திலே மூழ்கிக் கிடந்த உங்களைத் தூக்கியெடுத்து ஆத்துமாவை மீட்டார்.

சிலுவையிலே ஒரு கள்ளன் தொங்கிக்கொண்டிருந்தான். ஆண்டவரே, உம்மு டைய ராஜ்யத்துக்கு வரும்போது அடியேனை நினைத்தருளும் என்று ஜெபித்தான். பாதாளத்துக்கும், அக்கினி கடலுக்கும் போக இருந்த அவன் ஆத்துமாவை கர்த்தர் அப்படியே தூக்கியெடுத்து, அவனுக்குத் துணை நின்று பரதீசியிலே கொண்டுபோய் சேர்த்தார். கர்த்தர் தூக்கிவிடுகிற துணை மட்டுமல்ல, விடுவிக்கிற துணையாகவுமிருக்கிறார். “தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக் கிறீர்” (சங். 40:17, 70:5) என்று தாவீது ராஜா சொன்னார்.

இன்றைக்கு நீங்கள் எந்த சிக்கலிலிருந்தாலும், எந்த பிரச்சனையில் மாட்டிக் கொண்டிருந்தாலும், கர்த்தரை நோக்கிப்பாருங்கள். அவர் வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் உங்களை விடுவித்து தப்புவிக் கிறவர். சத்துருக்களின் சதி ஆலோசனைகளிலிருந்தும், கொடுமையானவர்களின் சீறல்களிலிருந்தும் விடுவிக்கிறவர். பில்லிசூனிய கட்டுகளிலிருந்தும், செய்வினை வல்லமைகளிலிருந்தும் விடுவிக்கிறவர்.
வேதம் சொல்லுகிறது, “குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்” (யோவா 8:36). “சத்தியத்தையும் அறிவீர்கள். சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” (யோவா. 8:32). “கர்த்தரே ஆவியானவர். கர்த்தரு டைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு” (2 கொரி. 3:17).

இஸ்ரவேல் ஜனங்கள் நானூற்று முப்பது வருடங்கள் எகிப்தின் அடிமைத் தனத்திலே தத்தழித்தார்கள். பார்வோனுடைய கைகளிலிருந்து என்னை விடுவிப் பவர் யார்? என்று கதறினார். கர்த்தர் விடுவிக்க இறங்கினார். எப்பொழுது ஆட்டுக் குட்டியின் இரத்தம் இஸ்ரவேலரின் வீடுகளிலே பூசப்பட்டதோ, அன்றைக்கே எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்தும், பார்வோனிடத்திலிருந்தும் அவர்களுக்கு விடுதலை கிடைத்தது. ஆம், அவர் விடுவிக்கிற துணையானவர்.

நினைவிற்கு:- “கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியாரெல்லாரும் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார். சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன்” (2 தீமோத். 4:17).