யுத்தத்தை நடத்தும் துணை!

“நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே” (2 நாளா. 32:8).

அசிரீய ராஜா, இஸ்ரவேலின்மேல் படையெடுத்து வந்தபோது, எசேக்கியாவின் உள்ளமெல்லாம் கரைந்து போனது. சோர்ந்து போன இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தர் திடப்படுத்த சித்தமானார். யுத்தங்களை நடத்துகிறவர் கர்த்தர். அவர் நமக்கு துணையாயிருக்கிறரர் என்று தீர்க்கதரிசியின் மூலமாய் கர்த்தர் பேசினபோது, யூதா ஜனங்கள் திடப்பட்டார்கள்.

ஆனால் உங்களுக்கு விரோதமாய் யுத்தம் செய்கிறவர்களோடு கர்த்தர் தாமே வழக்காடி யுத்தம் செய்யும்படி உங்களுக்குத் துணையாய் முன்வருவார். அவர் சர்வ வல்லமையுள்ளவர். யுத்தத்தில் பராக்கிரமமுள்ளவர் சேனைகளின் கர்த்தரானவர். ஆகவே தைரியமாக சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார். யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர் (சங். 46:7) என்று நீங்கள் சொல்லலாமே.

பார்வோனும், அவனுடைய சேனைகளும் இஸ்ரவேல் ஜனங்களை நெருங்கி வந்தார்கள். இஸ்ரவேல் ஜனங்களோ யுத்த வீரர்களல்ல. அது வரை எகிப்திலே அடிமைகளாய் வாழ்ந்தவர்கள். அவர்களிடம் ஆயுதம் ஒன்றுமில்லை. கர்த்தர் ஒருவர்தான் துணைநின்று அவர்களுடைய யுத்தத்தை நடத்த வேண்டும். ஆகவே மோசே இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து, “கர்த்தர் உங்களுக்காக யுதம் பண்ணுவார். நீங்கள் சும்மாயிருப்பீர்கள்” என்றார் (யாத். 14:14).
கர்த்தர் அந்நேரத்திலே இஸ்ரவேலருக்கு துணை நின்று யுத்தம் செய்ய ஆரம்பித்தார். எப்படி தெரியுமா? எகிப்தியரின் இரதங்களிலிருந்து உருளைகள் சுழலவும், அவர்கள் தங்கள் இரதங்களை வருத்தத்தோடே நடத்தவும் பண்ணினார். கர்த்தர் அவர்களுக்குத் துணை நின்று எகிப்தியருக்கு விரோதமாய் யுத்தம் பண்ணுகிறார் (யாத். 14:25) என்று இஸ்ரவேலர் அதை பகைவரான எகிப்தியருக்கு கூறினர். பிரியமானவர்களே, கர்த்தர் உங்களுக்குத் துணை நிற்கும்போது, இதுவரையிலும் உங்களுக்கு விரோதமாய் போராடுகிற எல்லா சத்துருக்களையும் நீங்கள் மேற்கொள்வீர்கள். தேவன் பலத்த பராக்கிரம சாலியாக இஸ்ரவேலரின் ராணுவங்களின் அதிபதியாக உங்களுக்கு துணை நிற்கிறார்.

1948-ம் ஆண்டு மே மாதம் 14-ம் தேதி இஸ்ரவேல் தேசத்துக்கு சுதந்திரம் கிடைத்தது. அப்பொழுது தான் உருவாக்கின அந்த நிலத்தில் சூழ இருந்த பதினான்கு அரபு தேசங்கள் இஸ்ரவேல் தேசத்தை முற்றிலும் அழித்துப்போடும்படி போர் தொடுத்தன. கொஞ்சம் இஸ்ரவேலரால் நூறு மடங்கு பெரிய அரபு ராணுவத்தினரை எதிர்க்க முடியுமா? ஆனால் நடந்தது என்ன? கர்த்தர் அவர்களுக்குத் துணை நின்று யுத்தத்திலே வெற்றிச் சிறக்கும்படியான விசேஷ ஞானத்தைக் கொடுத்தார். அப்படியே 1967-ம் ஆண்டு நடந்த ஏழு நாட்கள் யுத்தத்திலே இஸ்ரவேலர் உலகமே ஆச்சரியப்படும்படி எதிரிகளை வீழ்த்தி வெற்றிச் சிறந்தனர்.

சிறிய தாவீது பெரிய கோலியாத்தை எதிர்க்கும்போது, தன்னுடைய சுய பெலத்தால் எதிர்க்கவில்லை. கர்த்தரையே துணையாகக் கொண்டு, கர்த்தருடைய பெலத்தினால் தான் கோலியாத்தையும், பெலிஸ்தியரையும் ஜெயங்கொண்டார் (1 சாமு.17:41). யுத்தம் கர்த்தருடையது. தோல்வி சாத்தானுடையது. ஜெயமோ நம்முடையது. ஆகவே உங்களுக்கு ஜெயங்கொடுக்கிற தேவனையே எப்பொழுதும் சார்ந்து கொண்டு, எனக்கு ஜெயம் கொடுக்கிறவரும், வெற்றிச் சிறக்கப்பண்ணுகிறவரும், என்னுடைய யுத்தங்களையெல்லாம் உம்முடைய யுத்தங்களாக எண்ணி, சத்துருவை முறியடிக்கிறவரே உமக்கு ஸ்தோத்திரம் என்று சொல்லுங்கள். அப்பொழுது ஒரு வழியாய் வருகிறவர்கள் ஏழு வழியாய் உங்களைவிட்டு ஓடிப்போவார்கள்.

நினைவிற்கு:- “இந்த யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல. யூதா மனுஷரே, எருசலேம் ஜனங்களே, நீங்கள் தரித்துநின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்” (2 நாளா. 20:17).