ஆபத்துக்காலத்தில் துணை!

“தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்” (சங். 46:1).

கர்த்தர் உங்களுக்கு துணையாயிருப்பதினாலே பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்து போனாலும், அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும் நாம் பயப்படோம்” (சங். 46:2,3).

ஆபத்துக்காலம் எப்பொழுது வருகிறது என்று நமக்குத் தெரியாது. எப்போது நோய்களும், வியாதிகளும் பற்றிக்கொள்ளுகிறது, எப்பொழுது விபத்துக்கள் நேரிடுகிறது. எப்பொழுது வறுமை, எப்பொழுது தரித்திரம் தாக்குகிறது. எப்பொழுது கடன் பிரச்சனைகள் அலைமோதுகிறது என்று நமக்குத் தெரிவதில்லை. ஆனால் கர்த்தரோ, நமக்கு ஆபத்துக் காலத்திலே அநுகூலமான துணையுமானவர்.

அந்த துணையானவர் உங்களுக்குக் கொடுக்கிற வாக்குத்தத்தம் என்ன? “ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு. நான் உன்னை விடுவிப்பேன். நீ என்னை மகிமைப்படுத்துவாய்” (சங். 50:15). “என்னை நோக்கிக் கூப்பிடு. அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்” (எரே. 3:3).

இரண்டாம் உலக போர் நடந்துகொண்டிருந்தபோது, ஜெர்மனி நாட்டு விமானங்கள் லண்டன் மீது குண்டுகளைப் பொழிந்தன. ஒரு விசுவாசி மட்டும் பயப்படாமல் அந்த பதுங்கு குழிக்குள்ளே போய் ஒழியாமல் வீட்டிலே இருந்தார். எல்லோரும் கேட்டார்கள், உனக்கு பயமே இல்லையா? பட்டணமே தீப்பிடித்து அழிந்துகொண்டிருக்கிறது. பாதுகாப்பான இடத்திற்குப் போகவில்லையா? அதற்கு அந்த மூதாட்டி கர்த்தர் என் துணையானவர். ஒருபோதும் அவர் என்னை விட்டுவிலகுவதுமில்லை. கைவிடுவதுமில்லை. நான் ஏன் பயப்படவேண்டும் என்று பதில் சொன்னார். “உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது” என்று கர்த்தர் வாக்களித்திருக்கிறார் (சங். 91:7). ஆம், “கர்த்தரின் நாமம் பலத்த துருகம். நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்” (நீதி. 18:10). உண்மையாகவே கர்த்தர் ஆபத்துக்காலத்தில் உனக்கு அநுகூலமான துணையாயிருப்பார்.

தாவீது ராஜா, தன் வாழ்க்கை முழுவதிலும் கர்த்தரைத் துணையாகக் கொண்டு இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தினார். அவர் சொன்னார், “கர்த்தரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்” (சங். 33 20). ஆம், தேவ பிள்ளைகளே, கர்த்தர் எப்பொழுதும் உங்களுக்குத் துணையாயிருப்பார். ஆதலால் தீங்கு உங்களை அணுகாது. அவர் துணையாயிருப்பாரானால், பொல்லாப்பு உங்களுக்கு நேரிடாது. வாதை உங்கள் கூடாரத்தை அணுகாது. ஆகவே சங்கீதக்காரனோடு சேர்ந்து, “தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்” (சங். 40:17, 70:5) என்று சொல்லி கர்த்தரைப் போற்றிப் புகழுங்கள்.

சத்துருக்கள் எல்லா பக்கமும் நெருக்கின போதும், ஆபத்துக்கள் அருகிலிருந்த போதிலும், தாவீது அஞ்சவில்லை. தேவனே எனக்கு துணை செய்ய விழித்து என்னை நோக்கிப்பாரும்” (சங். 59:4) என்று சொல்லி ஜெபித்தார்.
தமிழிலே ஒரு அழகான பாடல் உண்டு. “துணை வேண்டும் தகப்பனே உலகிலே, என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே”. அந்த பாடலைப் பாடும் போதெல்லாம் நீங்கள் கர்த்தருடைய கரத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். அவர் உங்களை வாழ்நாளெல்லாம் உங்களுக்கு துணையாக கூடவே வருவார். எல்லாவித அற்புதங்களையும் செய்வார்.

நினைவிற்கு:- “நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன்” (சங். 63:7).