துணையாயிருப்பார்!

“அவன் (யோசேப்பு) மேய்ப்பனும், இஸ்ரவேலின் கன்மலையுமானான். உன் தகப்பனு டைய தேவனாலே அப்படியாயிற்று. அவர் உனக்குத் துணையாயிருப்பார்” (ஆதி. 49:24,25).

நீங்கள் கர்த்தருக்குப் பிரியமானவர்களாய் நடந்துகொள்ளும்போது, அவர் உங்களை ஆசீர்வதித்து, மகனே நீ எப்போதும் என்னோடேயிருக்கிறாய். எனக்குண்டானதெல்லாம் உனக்குண்டானதாயிருக்கிறது என்று மகிழ்ச்சியோடு சொல்லுவார். மட்டுமல்ல, உனக்கு எல்லாவற்றிலும் துணையாகவும், உறுதுணை யாகவும் இருப்பார்.

வாழ்க்கைத் துணையை பற்றி சொல்லும்போது, வாழ்நாளெல்லாம் உயர்ந் திருக்கும்போதும், தாழ்ந்திருக்கும்போதும், ஏக்கத்திலிருக்கும்போதும், துக்கத் திலிருக்கும்போதும் கூடவே நின்று ஒத்தாசையோடு இருக்கிற கணவனை, அல்லது மனைவியை குறிக்கிறது என்று எண்ணுகிறோம். உண்மை தான். ஆனால் அந்த இருவருக்கும் மேலாக கர்த்தர் துணை இருக்கும்போதுதான் சாத்தானை முறியடிக்க முடியும். வாழ்க்கையின் பிரச்சனைகளை மேற்கொள்ள முடியும். ஆ, அவரோ நம்முடைய ஆத்தும மணவாளன். வனாந்தரமான இந்த உலகத்திலே, முழுமையாய் சார்ந்துகொள்ளக் கூடிய துணையானவர்.

யோசேப்பை கர்த்தர் உனக்குத் துணையாயிருப்பார் என்று சொல்லி அவனை ஆசீர்வதித்ததின் காரணம் என்ன? யோசேப்பு சிறு வயதிலேயே தன் தாயை இழந்து அன்பு கிடைக்காமல் தவித்தார். தன் சொந்த சகோதரர்மேல் அன்பு வைத்து அவர்கள் துணையாயிருப்பார்கள் என்று எண்ணி, அவர்களுக்கு உணவை எடுத்துக்கொண்டு வனாந்தரத்திலே ஆடு, மாடு மேய்க்கும் இடத்திலே தேடிச் சென்றார். ஆனால் அவர்களோ, யோசேப்பை அடித்து பாழும் கிணற்றில் தூக்கிப்போட்டார்கள். எகிப்துக்குப் போகிற வியாபாரிகளிடம் இருபது வெள்ளிக் காசுகளுக்காக விற்றுப் போட்டார்கள்.

போத்திப்பார் வீட்டிலே அவரை புரிந்துகொள்ளுகிற துணை யாருமில்லை. அவர் மேல் அநியாயமாய் குற்றம் சாட்டி சிறையில் அடைத்தார்கள். அடிமையாகவே காலங்கள் கடந்தன. கர்த்தருடைய கிருபையால் எகிப்தில் அவர் உயர்த்தப்பட்டபோது, தற்செயலாய் அவருடைய பதினொன்று சகோதரர்களையும் சந்தித்தார். அவர்களை பழிக்குப் பழி வாங்காமல், அரவணைத்து பாதுகாப்புக்குள் கொண்டு வந்தார். வயதான தகப்பனாரை ஆள் சொல்லி அழைத்து பராமரித்தார்.

வயது முதிர்ந்த யாக்கோபு, தன் கைகளை யோசேப்பின்மேல் வைத்தபோது, அவருடைய உள்ளம் உருகிற்று. ஐயோ மகனே, நீ எவ்வளவாய் அன்புக்காக ஏங்கி துணையில்லாமல் தவித்தாய். சர்வ வல்லவரே உனக்கு துணையாய் நிற்பார் என்று சொல்லி கர்த்தருடைய கரத்திலே யோசேப்பை முழுமையாய் ஒப்புக்கொடுத்து ஆசீர்வதிக்கும் காட்சி உள்ளத்தை உருக்குவதாயிருக்கிறது.

என் தகப்பனார் மரணமடைகிற கடைசி நேரத்தில் நான் அவருடனேகூட இருந்தேன். என்னை மனப்பூர்வமாய் ஆசீர்வதித்தார். “இஸ்ரவேலே, நீ பாக்கியவான். கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ் செய்யும் கேடகமும், உனக்கு மகிமைபொருந்திய பட்டயமும் அவரே. உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள். அவர்கள் மேடுகளை மிதிப்பாய் என்று சொன்னார்” (உபா. 33:29). அந்த நிமிடம் முதல் என் தகப்பனைவிடவும், பரம தகப்பன் எனக்கு தணையாய் இருப்பதை உணர்ந்தேன். உங்களுக்கும் அவர் துணையாயிருப்பார்.

மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல. ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்று சொன்னவர், உங்களுடைய வாழ்க்கைத் துணையோடுகூட பிள்ளைகளின் துணையையும் கொடுப்பார். அதே நேரம் தேவனாகிய கர்த்தர் உங்கள் வாழ்நாளெல்லாம் உங்களுக்கு துணையாய் நின்று கரம்பிடித்து நடத்துவார். ஆகவே தேவபிரசன்னத்தை எப்போதும் உணர்ந்து, உங்கள் துணையாயிருக்கிற கர்த்தருடைய கரத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள்.

நினைவிற்கு:- “உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்” (ஏசா. 41:13).