இயேசுவினால் தைரியம்!

“பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாத வர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனே கூட இருந்தவர்களென்று அறிந்து கொண்டார்கள்” (அப். 4:13).

பேதுருவும், யோவானும் படித்தவர்களல்ல, அவர்கள் பணக்காரர்களுமல்ல, அவர்கள் படிப்பறிவில்லாத மீனவர்கள். ஆனாலும் அவர்களுடைய வாயிலிருந்து புறப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும், வல்லமை நிறைந்ததாய், இருதயத்தை ஊடுருவிச் செல்லக்கூடியதாயிருந்தது. அவர்கள் அங்கிருந்த ஆத்துமாக்களோடுகூட பேசினார்கள். தைரியத்தோடுகூட பேசினார்கள். “பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல. உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்” (மத். 10:20). அவர்கள் பேசினதிலே அவர்களுடைய சாட்சியிருந்தது. “உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும், தேவனால் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டருமாயிருக் கிறார்” என்று முழங்கினார்கள் (அப். 4:10).

பிரதான ஆசாரியனே, காய்பாவே, மந்திரிகளே, அதிகாரிகளே, தெரிந்து கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இந்தபிறவி சப்பாணி சொஸ்தமாக்கப்பட்டிருக்கிறான். இந்த அற்புதத்தை எருசலேமிலுள்ள ஒருவராலும் மறுக்க முடியாது. ஏனென்றால் இவன் எருசலேம் தேவாலயத்திலுள்ள அலங்கார வாசலருகே அமர்ந்து, பிச்சை கேட்டவன். இதுவரை பலரால் சுமக்கப்பட்டுக் கொண்டு வரப்பட்டவன். இப்பொழுது அவன் நடக்கிற நடையும், துள்ளுகிற துள்ளலும் பாருங்கள். இனி இவன் பிச்சையெடுக்கிற இடத்தில் உட்காராமல், தேவனோடு இருக்கும்படி தேவாலயத்துக்குள் சென்றிருக்கிறான். அவனுடைய உள்ளமோ, கர்த்தரோடிருக்கவும், அவருடைய பிரசன்னத்தையும், சமுகத்தையும் நாடவும் ஆவல் கொண்டிருந்தது.

நீங்கள் தேவனுடைய சமுகத்தில் நேரம் செலவழிக்கிறவர்களாயிருந்தால், கர்த்தரு டைய வல்லமையை நாடுங்கள். ஆவியின் வரங்களை நாடுங்கள். நிருபிக்கக்கூடிய அற்புதத்தை நீங்கள் செய்யும்போது, நிச்சயமாகவே மற்றவர்கள் சொல்லுவார்கள், “நீங்கள் ஆண்டவரோடு இருக்கிறவர்கள், கிறிஸ்துவோடு இருக்கிறவர்கள்”. இதனால், உலகப்பிரகாரமான பழக்கங்கள் யாவும் நீங்கி, தைரியம் வந்து விடும்.

சாலொமோன் ஞானி சொல்லுகிறார், “நீதிமான்களோ, சிங்கத்தைப் போல தைரியமாயிருக்கிறார்கள்” (நீதி. 28:1). நீங்கள் கிறிஸ்துவோடிருக்கும்போது, அவர் தம்முடைய நீதியை உங்களுக்குத் தந்தருளுகிறார். அப்போது நீதிமான்களாகிறீர்கள். மனச்சாட்சியிலிருந்த எல்லா பயமும், அடிமைத்தனத்தின் ஆவியும் விலகியோடி, உள்ளான மனுஷனிலே வல்லமையினாலும், அக்கினியினாலும், தைரியத்தினாலும் நிரப்பப்படுவீர்கள்.

பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கு முன்பு, பேதுருவுக்கு பயந்த சுபாவம் இருந்தது. ஒரு வேலைக்காரி அவரை பார்த்து, நீ இயேசுவோடு இருந்தவன் அல்லவா? என்று கேட்டபோது, தைரியமாய் “ஆம், நான் கர்த்தரோடிருக்கிறவன்” என்று சொல்ல முடியவில்லை. இயேசுவை மறுதலித்தார். சபித்தார் சத்தியம் பண்ணினார். ஆனால் இப்பொழுது அந்த பயமெல்லாம் போய் தைரியம் வந்தது. “என்ன வந்தாலும் நான் கர்த்தரோடிருப்பேன்” என்ற தீர்மானம் வந்தது. அவர் பெற்ற அபிஷேகத்தாலே பெலனடைந்தார். சிங்கத்தைப்போல தைரியமானார். தேவபிள்ளைகளே, நீங்கள் கிறிஸ்துவோடுகூட இருந்தால் எந்த தீய மனுஷரையும், எந்த துஷ்ட தனமான ஆவியையும் கண்டு, பயப்படாதிருப்பீர்கள்.

நினைவிற்கு:- “தைரியமாயிரு; நம்முடைய ஜனத்திற்காகவும், நம்முடைய தேவனு டைய பட்டணங்களுக்காகவும், சவுரியத்தைக் காட்டுவோம்” (2 சாமு. 10:12).