தாவீதின் அனுபவம்!

“ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர்” (சங். 73:23).

கடந்த கால அனுபவத்தை தாவீது சொல்லவில்லை. எப்பொழுதும் என்கிற வார்த்தை, நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும்கூட சொல்லுகிறது. அதுபோலவே, “கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன். அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்” என்று சொல்லுகிறார் (சங். 34:1). எக்காலமும் என்பது, கடந்த காலம், நிகழ் காலம், வருங்காலத்தைக் குறிக்கிறது. ஒவ்வொரு நிமிடமும் அவரோடுகூட இருப்பதையும், அவரைத் துதிப்பதையும் குறிக்கிறது.

இந்த பூமியிலே உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறதோ, அதன் அடிப்படையில்தான், பரலோகத்திலும் உங்களுடைய வாழ்க்கை இருக்கும். நீங்கள் எப்பொழுதும் கர்த்தரோடுகூட இருக்க வேண்டும். அப்பொழுது அவர் உங்களுக்கு பூரண மன நிறைவைத் தந்தருளுவார். சமாதானத்தைத் தருகிறார், தைரியத்தைத் தருகிறார், நீங்கள் பயன்படும்படியான நிலையைத் தருகிறார்.

கெனசரேத் கடலருகே, கல்லறைகளின் மத்தியிலே, லேகியோன் பிசாசு பிடித்த ஒரு மனிதன் இருந்தான். அவனுடைய ஐக்கியம் பிசாசுகளோடு இருந்தது. கல்லறைகளின் மத்தியிலே குடியிருக்கவே அவன் விரும்பினான். பல் விளக்கியிருக்கமாட்டான். குளித்திருக்கமாட்டான். அருவருப்பான நிலைமையிலே இருந்திருப்பான். இயேசுவை கண்டதும் அவனுக்குள்ளேயிருந்த பிசாசுகள் அலறின. “உமக்கும், எங்களுக்கும் என்ன? எங்களை வேதனைப்படுத்தவா வந்தீர்?” என்று கேட்டன. இயேசு அதட்டியதும், அந்த பிசாசுகளெல்லாம், அங்கிருந்த பன்றி கூட்டத்திற்குள் புகுந்தன. அவை அனைத்தும் கடலிலே விழுந்து மாண்டன.

பாவ சிற்றின்பங்களை விரும்புகிறவர்கள், பிசாசுகளோடு ஐக்கியமாக இருக் கிறார்கள். பிசாசு, பன்றிகளோடு ஐக்கியமாயிருக்க விரும்பின. இப்பொழுது அந்த மனுஷனைப் பாருங்கள்! அவன் வஸ்திரம் தரித்து, கிறிஸ்துவினுடைய பாதத்திலே அமர்ந்திருந்தான். இப்பொழுது அவனுக்கு ஒரு இனிமையான, அருமையான ஐக்கியம் கிடைத்தது. அது இயேசு கிறிஸ்துவோடு உள்ள ஐக்கியம்.

இயேசு கிறிஸ்துவை சந்திப்பதற்கு முன்பாக, அவன் வஸ்திரமில்லாதவனா யிருந்தான். இப்பொழுதோ, சரீரத்துக்கு அவனுக்கு ஒரு நல்ல வஸ்திரம் கிடைக்கும் படி உதவி செய்தார். ஆத்துமாவுக்கும் ஒரு வஸ்திரத்தைக் கொடுத்தார். அது இரட்சிப்பின் வஸ்திரம். அது நீதியின் சால்வை (ஏசா. 61:10).

அவன் இயேசுவோடு இருக்க வேண்டுமென்று விரும்பினான். அதற்காக உத்தரவு கேட்டான். ஆனால், அவனுடைய விருப்பத்துக்கு நேர் மாறாக, அந்த கிராம மக்களின் விருப்பம் இருந்தது. அவர்கள் இவன் ஒரு புதிய மனிதனாக இயேசுவோடு வாழுவதை விரும்பவில்லை அவர்களுடைய பிரியமெல்லாம் பன்றிகளாகவே புது வாழ்வுத் தருகிற இயேசுவை, தங்களோடு வைத்துக் கொள்ள பிரியமில்லாமல், தங்களுடைய எல்லைகளை விட்டுப் போகும்படி கேட்டுக் கொண்டார்கள்.

தேவபிள்ளைகளே, இயேசுவோடுகூட எப்போதும் இருக்க வேண்டுமென்ற ஆவல் உங்களுக்கு உண்டா? அதை அனுபவமாக்குகிறீர்களா? “தாவீதைப்போல நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்” என்று சொல்ல முடியுமா? அப்பொழுது கர்த்தர் உங்களைப் பார்த்து, “என் மகனே, நீ எப்போதும் என்னோடேயிருக்கிறாய். எனக்குரியதெல்லாம் உனக்குரியதாயிருக்கிறது” என்று சொல்லுவார்.

நினைவிற்கு:- “உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்” (சங். 73:24).