பவுலோடிருந்த தீமோத்தேயு!

“தகப்பனுக்குப் பிள்ளை ஊழியஞ்சேவதுபோல, அவன் (தீமோத்தேயு) என்னுடனே கூட சுவிசேஷத்தினிமித்தம் ஊழியஞ்சேதானென்று அவனுடைய உத்தமகுணத்தை அறிந்திருக்கிறீர்கள்” (பிலி. 2:22).

தீமோத்தேயுவின் பெயரை முதன் முதலாக அப். 16:1-ல் காணலாம். தீமோத்தேயு அப். பவுலுக்கு, நல்ல உடன் ஊழியக்காரனாக இருந்தார். மக்கெதோனியாவிலிருந்து தீமோத்தேயு வந்தபோது, பவுல் ஆவியில் வைராக்கியங்கொண்டு, “இயேசுவே கிறிஸ்து” என்று யூதருக்கு திருஷ்டாந்தப்படுத்தினார். தீமோத்தேயு நல்ல பக்தியுள்ள குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இரண்டு, மூன்று தலைமுறைகளாக அவர்கள் விசுவாசத்தில் உறுதியாய் நின்றார்கள்.

தீமோத்தேயுவின் தாயாரின் பெயர், ஐனிக்கேயாள். பாட்டியின் பெயர் லோவிசாள் (2 தீமோ. 1:5). தீமோத்தேயுவினுடைய தகப்பன் ஒரு கிரேக்கனாக இருந்ததால், அவனைக் குறித்து நமக்கு ஒன்றுமே தெரியவில்லை. ஆனால் தீமோத்தேயு தன்னுடைய வாலிப நாட்களிலிருந்து அப்.பவுலோடு இணைக்கப்பட்டிருந்தார்.உவமையில், எப்படி அந்த அன்புள்ள தகப்பன், தன்னுடைய மூத்த குமாரனிடம், “மகனே, நீ எப்பொழுதும் என்னோடிருக்கிறாய், எனக்குண்டானதெல்லாம் உனக் குரியதாயிருக்கிறது” என்று சொல்லுவது போல, தீமோத்தேயுவை, “கர்த்தருக்கு உண்மையுள்ள என் குமாரனாகிய தீமோத்தேயு” என்று அன்போடு அழைத்தார் (1 கொரி. 4:17). பின்பு, “விசுவாசத்தில் உத்தம குமாரனாகிய தீமோத்தேயு” என்று குறிப்பிட்டார்.

ஆதி திருச்சபை வரலாற்றை வாசிக்கும்போது, அப். பவுலுக்கு பிறகு, தீமோத்தேயு, தலைமை தாங்கி வல்லமையாக ஊழியம் செய்தார். அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்தார். எபிரெயருக்கு எழுதின புத்தகத்தை, அப். பவுல் அல்ல, தீமோத்தேயு தான் எழுதியிருக்கவேண்டுமென்எ அநேகம் வேத பண்டிதர்கள் கூறுகிறார்கள். “பூவோடு சேர்ந்த நாறும் மணம் பெறும்.” அப். பவுலோடு, தீமோத்தேயு இருந்தபடியால், தேவ ஞானம், வேதத்தின் ஆழம், தேவ இரகசியங்கள், வெளிப்பாடுகள் அவரிடத்தில் இருந்தன.

தேவ பிள்ளைகளே, நீங்கள் கிறிஸ்துவோடு இருங்கள், ஆவியானவரோடு இருங்கள். தேவ பிரசன்னத்தில் நிலைத்திருங்கள். நிச்சயமாகவே உங்களுக்கு ஒரு எதிர்காலம் உண்டு. நீங்கள் கர்த்தரோடிருந்தால், சாத்தானால் உங்களை நெருங்கவே முடியாது. எந்த பாவ சோதனைகளும் உங்களை மேற்கொள்ள முடியாது. நிச்சயமாகவே பரிசுத்தமுள்ள வெற்றி வாழ்க்கை வாழுவீர்கள்.
இந்த உலகிலுள்ள கொஞ்சகால வாழ்க்கையில், கிறிஸ்துவோடு, அவருக்கு பிரியமான வாழ்க்கை வாழுவீர்களென்றால், நித்தியத்திலும் அவரோடு என்றென்றும் வாழுவீர்கள். இயேசு சொன்னார், “நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும் படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்” (யோவா. 14:3).

எந்த இடத்தை பிதா தன்னுடைய ஒரே பேறான குமாரனாகிய கிறிஸ்துவுக்கு நித்தியத்திலே கொடுத்திருக்கிறாரோ, அதேயிடத்தில் நாம் அவரோடுகூட என்றென்றைக்கும் வாழுவோம். ஆகவே, சந்தோஷமாக சொல்லுங்கள், “என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும், கிருபையும் என்னைத் தொடரும். நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.”

நினைவிற்கு:- “நம்முடைய குடியிருப்போ, பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக் கிறோம்” (பிலி. 3:20).