யாக்கோபின் குடும்பம்!

“உன் தகப்பனுடைய ஆசீர்வாதங்கள், என் பிதாக்களுடைய ஆசீர்வாதங்களுக்கு மேற்பட்டதாயிருந்து; நித்திய பர்வதங்களின் முடிவுமட்டும் எட்டுகின்றன; அவைகள் யோசேப்புடைய சிரசின்மேலும், தன் சகோதரரில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வருவதாக” (ஆதி. 49:26).

ஆபிரகாமுக்கு எட்டு பிள்ளைகள். ஆனாலும் முழு ஆசீர்வாதமும் ஈசாக்குக்கு சென்றன. ஈசாக்குக்கு இரண்டு பிள்ளைகள். முழு ஆசீர்வாதமும், சேஷ்ட புத்திர பாகமும், கர்த்தருடைய ஆசீர்வாதமும், யாக்கோபுக்கு வந்தது. இப்பொழுது முற்பிதாவாகிய யாக்கோபின் வீட்டிற்கு செல்லுவோம். யாக்கோபுக்கு நான்கு மனைவிமார், 12 ஆண் பிள்ளைகளும், தீனாள் என்ற ஒரு பெண் பிள்ளையும் இருந்தார்கள். இந்த 12 ஆண் மக்களிலே, சேஷ்ட புத்திர பாகமும், தகப்பனுடைய ஆசீர்வாதமும் மூத்த மகனாகிய ரூபனுக்கு வரவில்லை. அவர் சாபத்தைத் தான் பெற்றுக்கொண்டார். ஆனால் அந்த ஆசீர்வாதம் அனைத்தும், யோசேப்புக்கு சென்றது. யோசேப்புக்கு இரண்டு மடங்கு ஆசீர்வாதம்.

“யோசேப்பு” என்ற வார்த்தைக்கு, “நீ பெருகுவாய்” என்பது அர்த்தமாகும். சிறு வயதிலிருந்தே ஆவிக்குரிய பெருக்கமும், கர்த்தருடைய கரமும், அவர் மேல் இருந்தது. தகப்பனுக்கும், கர்த்தருக்கும் பிரியமானவராய் நடந்துகொண்டதினாலே, கர்த்தர் யோசேப்புக்கு சொப்பனங்களையும், தரிசனங்களையும், அவைகளை விளக்கி, அர்த்தம் சொல்லும் கிருபைகளையும் கொடுத்திருந்தார். தகப்பனாகிய யாக்கோபு அவருக்கு பலவருண அங்கியைக் கொடுத்திருந்தார்.

குடும்பத்திலுள்ள அத்தனை பிள்ளைகளைப் பார்க்கிலும், அதிகமாய் பாடு அனுபவித்தவர், யோசேப்பு தான். தன் சிறு வயதிலேயே தாயை இழந்தார், தன் தம்பியை அருகிலிருந்து பராமரிக்க முடியவில்லை, அவருடைய மற்ற சகோதரர்களால் பகைக்கப்பட்டு, குழியில் போடப்பட்டு, முடிவில் எகிப்திலே விற்கப்பட்டுப் போனார். போத்திபார் வீட்டிலே அடிமையாக வேலை செய்தார். போத்திபாரின் மனைவி அபாண்டமான குற்றத்தை சுமத்தி, சிறைச்சாலையில் அடைக்கப்பட வழிவகுத்தாள். ஆனால் கர்த்தரோ, கிருபையாய் யோசேப்பை பார்வோனுடைய ஸ்தானத்திற்கு சமானமாய் உயர்த்தினபோது, தன் பெற்றோருக்கும், சகோதரருக்கும் உதவி செய்ய எண்ணி, தானியங்களைக் கொடுத்தார். எகிப்திலே தன்னோடு வாழும்படி வழி செய்தார். மன்னிக்கிற தெய்வீக சிந்தை, அவருக்குள் இருந்தது.

யாக்கோபு, தன் வயதான நாட்களிலே, யோசேப்புக்கு சேஷ்ட புத்திர பாகத்தை யும், ஆசீர்வாதங்களையும் சேர்த்து கொடுத்தார். “மகனே, நீ எப்பொழுதும் என்னோடிருக்கிறாய். எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது” என்று சொல்லுவதைப்போல இருந்தது. “உன் தகப்பனுடைய ஆசீர்வாதங்கள் என் பிதாக்களுடைய ஆசீர்வாதங்களுக்கு மேற்பட்டதாயிருந்தது; நித்திய பர்வதங்களின் முடிவுமட்டும் எட்டுகின்றன” (ஆதி. 49:26) என்றார்.

“யோசேப்பின் கோத்திரம்” தற்போது எங்கே இருக்கிறது? என்று வேதாகம ஆசிரியர்கள் சரித்திரத்தை ஆராய்ந்து பார்த்தபோது, அசீரியர் காலத்திலேயே அவர்கள், இங்கிலாந்து தேசமான பிரிட்டனில் வந்து குடியேறினார்கள் என்று கண்டறிந்தார்கள். யோசேப்புக்கு இரண்டு மடங்கு ஆசீர்வாதம் போல, சின்ன இங்கிலாந்து தேசத்திலிருந்து, இரண்டு கண்டங்கள் உருவாகின. ஒன்று அமெரிக்கா. அடுத்தது ஆஸ்திரேலியா உருவானது. தேவபிள்ளைகளே, நீங்கள் வாக்குத்தத்தத்தின் பிள்ளைகளாக, சுதந்தரவாளிகளாக விளங்க வேண்டும்.

நினைவிற்கு:- “யோசேப்பு கனிதரும் சேடி; அவன் நீர் ஊற்றண்டையிலுள்ள கனிதரும் சேடி; அதின் கொடிகள் சுவரின்மேல் படரும்” (ஆதி. 49:22) .