என்னோடிருக்கிறாய்!

“மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதா யிருக்கிறது” (லூக். 15:31).

இந்த வார்த்தைகளை கர்த்தர்தாமே, நேரடியாய் என்னோடு பேசுவதாக உணர்ந்து, பரவசமடைந்திருக்கிறேன். இந்த வார்த்தைகள், எனக்கு மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான பரிசுத்தவான்களுக்கும் மனமகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. இந்த வார்த்தைகள் உங்களையும் உற்சாகப்படுத்தி, கர்த்தரோடு நெருங்கி ஜீவிக்க ஏவி எழுப்புவதாக! லூக். 15-ம் அதிகாரத்தில் வருகிற சம்பவத்தை, பொதுவாக, அநேகர் “கெட்ட குமாரனின் சரித்திரம்” என்று சொல்லுவார்கள். உண்மையில் இதற்கு ஒரு பெயர் வைக்க வேண்டுமென்றால், “அன்பும், பாசமும் உள்ள தகப்பனின் சரித்திரம்” என்று சொல்லலாம்.

ஒரு தகப்பனுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களுக்கு தாயோ, சகோதரிமார்களோ இருந்ததாக, வேதம் சொல்லவில்லை. இளையவன், தகப்பனை நோக்கி, என் ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை தர வேண்டும் என்று கேட்டான். பொதுவாக, தகப்பன் உயிரோடிருக்கும்போது, ஒரு மகன், “நான் உம்மை விட்டு போகிறேன். என் பங்கை எனக்கு தாரும்” என்று கேட்பது தகப்பனின் முதுகிலே குத்துவதற்கு சமானம். ஆயினும் அன்புள்ள தகப்பனோ, வேறு வழியின்றி, தன்னை விட்டு பிரிந்து செல்லுகிற மகனை வேதனையுடன் பார்த்து, பாகப் பிரிவினை செய்திருக்கக் கூடும்.

தகப்பன் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தைக் கொண்டு, இளைய மகன் ஒரு தொழிலையோ, வியாபாரத்தையோ ஆரம்பிக்கவில்லை. “தூர தேசத்துக்குப் புறப்பட்டுப்போய் அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்” (லூக். 15:13). மட்டுமல்ல, வேசிகளிடத்தில் தகப்பனுடைய ஆஸ்தியை அழித்துப் போட்டான் (லூக். 15:30). எல்லாவற்றையும் அவன் செலவழித்த பின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சம் உண்டாயிற்று. முடிவில் ஒரு குடியானவனிடம், பன்றி மேய்க்கும் வேலையை ஏற்படுத்திக் கொண்டான். அங்கே அவனுக்கு சரியான உணவு இல்லை. பன்றிகளுக்கு கிடைக்கும் தவிடுகூட, அவனுக்கு கிடைக்கவில்லை.

அப்பொழுது அவனுக்கு, அன்புள்ள தகப்பனுடைய ஞாபகம் வந்தது. அவன் தீர்மானித்தான், “நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய், தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும்” (லூக். 15:18,19) என்று கேட்பேன் என்று சொன்னான். குற்ற மனச்சாட்சியினால் வாதிக்கப்பட்ட இளைய குமாரன், தகப்பனிடத்தில், தள்ளாடி நடந்து வந்தான். ஆனால் அன்புள்ள தகப்பனோ, அவன் கழுத்தைக் கட்டிகொண்டு, அவனை முத்தம் செய்தான். தன் ஊழியக்காரர்களை நோக்கி, “நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டு வந்து இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும், கால்களுக்குப் பாத ரட்சைகளையும் போடுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து சந்தோஷமாயிருப்போம்” என்றான்.

தேவபிள்ளைகளே, எந்த நிலைமையில் பின்வாங்கிப் போயிருந்தாலும் அன்புள்ள தகப்பனாகிய கர்த்தர், உங்கள்மேல் அன்பு செலுத்தி அரவணைக்க ஆவலாயிருக்கிறார். ஆகவே எல்லா பின்மாற்றத்தையும் நீங்கள் விட்டு விலகி, பரம பிதாவண்டை வந்துவிடுங்கள்.

நினைவிற்கு:- “நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது. ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு” (சங். 16:6).