கிறிஸ்தவர்கள்!

“முதல் முதல் அந்தியோகியாவிலே, சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று” (அப். 11:26).

நீங்கள் யார்? கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள், கிறிஸ்துவைத் தரித்தவர்கள். கிறிஸ்து எனக்குள்ளே வாழுகிறார் என்கிற நம்பிக்கையுடையவர்கள். கிறிஸ்துவைப் போல மாறவேண்டுமென்ற ஏக்கம் கொண்டவர்கள். விசுவாசிகளுக்குக் கொடுக்கப் பட்ட பெயர், “கிறிஸ்தவர்கள்” என்பதாகும். இன்னும் இரண்டு இடங்களிலே கிறிஸ்தவன் என்ற பெயரை காணலாம்.

“அகிரிப்பா பவுலை நோக்கி: நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப் பண்ணுகிறா என்றான்” (அப். 26:28). “ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால், பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்” என்று பேதுரு சபை விசுவாசிகளுக்கு எழுதுகிறார் (1பேது. 4:16). கிறிஸ்துவை பின்பற்றுகிற அவருடைய சீஷர்களே, கிறிஸ்தவர்களாவார்கள். “நான் கிறிஸ்துவுடையவன், அவர் என்னுடையவர். நான் அவருக்கே சொந்தம்” என்பவர்கள் தலைநிமிர்ந்து, தோளை நிமிர்த்தி, மகிழ்ச்சி யோடு நான் கிறிஸ்தவன் கர்த்தருக்கு சொந்தம்” என்று சொல்ல முடியும்.

ஒருமுறை ஓரல் ராபர்ட்ஸ் என்ற பக்தன் தன் பிரசங்கத்திலே, “நான் கர்த்தருக்கு சொந்தமானவன், சாத்தானே, உன் கரங்களை கிறிஸ்தவனாகிய என்மேல் நீ வைக்க முடியாது என்று பிசாசை நோக்கி, நீங்கள் திரும்பத் திரும்ப சொல்லும்போது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்” என்று சொன்னார். இந்தப் பிரசங்கம் ஒரு சகோதரியின் உள்ளத்தில் ஆழமாய் பதிந்தது. ஒருநாள், தனிமையாக இருண்ட பாதையிலே நடந்துவந்தபோது, ஒரு திருடன் வேகமாக அவள் முன்னால் வந்து, ஒரு கத்தியை அவள் தொண்டைக்கு அருகில் நீட்டி, “நீ என் ஆசை இச்சைகளுக்கு இணங்காவிட்டால், உன்னை நான் கொலை செய்து விடுவேன்” என்று பயமுறுத்தினான். அவளுக்கு திடீரென்று தான் கேட்ட பிரசங்கம் ஞாபகம் வந்தது.

“சாத்தானே, நான் கர்த்தரின் சொத்து. உன் கையை என்மேல் நீட்ட முடியாது. சாத்தானே, நான் கர்த்தரின் சொத்து, உன்னுடைய திட்டங்கள் பலிக்காது” என்று திரும்பத் திரும்ப மன உறுதியோடு சொன்னாள். இந்த வார்த்தைகள் அந்த தீய மனிதனை மின்சாரம் தாக்கியதைப்போல தாக்கியது. பிரமைபிடித்தவன் போல அப்படியே நின்றுவிட்டான். தற்செயலாய் அங்கே வந்த போலீசார், அவனை கைது செய்து, இழுத்துக்கொண்டு போனார்கள்.

“நீ உனக்கு சொந்தமல்லவே, மீட்கப்பட்ட பாவி, நீ உனக்கு சொந்தமல்லவே” என்று பக்தன் பாடுகிறான். ஆம். நீங்கள் கர்த்தருடைய சொத்து. அவர் உங்களை சிருஷ்டித்தார். உங்களை தேடி வந்து மீட்டுக்கொண்டார். நீங்கள் கர்த்தருடைய சொத்து. “உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?” (1 கொரி. 6:19).

நியாயப்பிரமாணத்திற்காக வைராக்கியமாக இருந்த, அப்போஸ்தலனாகிய பவுல், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவனாய் மாறி, தன் வாழ்நாளெல்லாம் புறஜாதியினரையும் கிறிஸ்துவின் மந்தைக்குள் கொண்டுவர பாடுபட்டார். அகிரிப்பா ராஜாவை, கொஞ்சங்குறைய கிறிஸ்தவனாக்கிவிட்டார். தேவபிள்ளைகளே, நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை அறிவித்து, அவர்களை சீஷர்களாக்குங்கள்.

நினைவிற்கு:- “ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்கு மாத்திரமல்ல, அவர் நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது” (பிலி. 1:29).