கர்த்தருடைய சிநேகிதர்!

“ஆம், அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்” (எரே. 31:3).

வேதாகமம், உங்களுக்கு கொடுக்கிற ஒரு அருமையான பெயர், “கர்த்தருடைய சிநேகிதர்.” நீங்கள் கர்த்தரை நேசிப்பதற்கும், சிநேகிப்பதற்கும் முன்பு, அவர் உங்களை, உயிருக்கு உயிராய் சிநேகித்துவிட்டார். “அநாதி சிநேகத்தால் உன்னை சிநேகித்தேன்” என்று மனதுருகி சொல்லுகிறார். “சிநேகிதன்” என்ற வார்த்தை மிகவும் ஆழமானது, அருமையானது. ஒருவன், தன் சிநேகிதனுக்காக எப்பொழுதும் தியாகம் செய்வான். “உயிர் காப்பான் தோழன்” என்பது பழமொழி.

“உடுக்கையிழந்தவன் கைபோல ஆங்கே, இடுக்கண் களைவதாம் நட்பு” என்றார் வள்ளுவர். கர்த்தருடைய சிநேகிதம் உலகத்தோற்றத்திற்கு முன்பே ஆரம்பித்துவிட்டது. “தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்” (யோவா. 13:1).

பல வருடங்களுக்கு முன்பு, ஒரு போதகரின் வீட்டில் தங்கியிருந்தேன். அங்கு மூன்று வயது சிறுமி ஒருவள் இருந்தாள். அவளுடைய நண்பர்களெல்லாம் பொம்மையாய் இருந்தன. அவள் கொஞ்சம் நேரம் அந்தப் பொம்மைகளோடு விளையாடி விட்டு, சலித்துப் போய், என்னிடத்தில் வந்து, “அங்கிள், இந்தப் பொம்மைகளிடம் நான் எவ்வளவோ அன்பு பாராட்டி பேசுகிறேன். ஆனால், அவைகள் ஒன்றும் என்னிடத்தில் திரும்ப பேசுவதுமில்லை, அன்பாயிருப்பதும் இல்லை” என்றாள்.

நான் அவளுடைய நிலைமையை புரிந்துகொண்டு, “சரி! கவலைப்படாதே. நான் உனக்கு நண்பனாக இருக்கட்டுமா? நான் நிச்சயமாகவே உன்னிடம் பேசுவேன்” என்றேன். அவளுக்கு மிகுந்த சந்தோஷம். அவள் எப்பொழுதும் என்னை “பிரண்ட் அங்கிள்” என்று கூப்பிடுவாள். நான் ஆலயத்தில் பிரசங்கித்து முடித்ததும், உரிமை யோடு என் கைகளை பிடித்துக்கொண்டு, அவளோடு பாலர் பள்ளியில் படிக்கும் அனைவரிடமும், “என்னுடைய பிரண்ட் அங்கிள்” என்று அறிமுகம் செய்வாள். இன்று அவள் வளர்ந்து, தன் கணவனுடன் டாக்டராக பணியாற்றுகிறாள்.

நட்புக்கு இலக்கணமாக வேதத்திலே தாவீதையும், யோனத்தானையும் காணலாம். யோனத்தானுடைய ஆத்துமா, தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது. யோனத்தான், அவனைத் தன் உயிரைப்போல சிநேகித்தான் (1 சாமு. 18:1). யோனத்தான் யுத்தத்திலே மடிந்தபோது, அதை தாவீதால் தாங்கிக்கொள்ள முடியா மல், “உன் சிநேகம் ஆச்சரியமாயிருந்தது; ஸ்திரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் அதிகமாயிருந்தது” என்று புலம்பல் பாடினார் (2 சாமு. 1:26). “யோனத்தான் நிமித்தம், யாருக்காகிலும், நான் தயவு பாராட்ட கூடுமா?” என்று தாவீது விசாரித்து, முடமான அவனது மகன் மேவிபோசேத்துக்கு, இரக்கம் பாராட்டினார்.

இயேசுகிறிஸ்து நம்மை நண்பனாக ஏற்றுக்கொண்டு, அளவற்ற அன்பை நம்மேல் பொழிவதற்கு நாம் எந்தவிதத்திலும் பாத்திரரல்ல. “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சோல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் சேகிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்” என்றார் (யோவா. 15:13-15).

நினைவிற்கு:- “என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள். என்னைச் சிநேகிக்கிறவர்கள் மெப்பொருளைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்” (நீதி. 8:17,20).