பாக்கியமுள்ள ஜனம்!

“இஸ்ரவேலே, நீ பாக்கியவான்” (உபா. 33:29).

நீங்கள் யார்? கர்த்தர் உங்களை எவ்வாறு காண்கிறார்? கிறிஸ்துவுக்குள் உங்களுக்குள்ள சிலாக்கியம் என்ன? ஆம், நீங்கள் பாக்கியவான்கள். பாக்கியமான வாழ்க்கைக்கு வேதப் புத்தகம் வழிகாட்டுகிறது. ‘பாக்கியவான்கள்’ என்பதற்கு ‘பேர் பெற்றோர், மேன்மை பெற்றோர், ஆசீர்வாதம் உள்ளவர்கள்’ என்பது அர்த்தமாகும். உண்மையிலே கர்த்தரை தெவமாகக் கொண்டிருக்கிற ஜனங்கள், பாக்கியமானவர்கள் (சங். 144:15).

உலக ஜனங்கள், இந்த பாக்கியத்தை அறியாமல், அனாதைகள் போல வாழ் கிறார்கள். வானத்தின் கீழே திறந்து விடப்பட்டவர்களாக, விபத்துக்கும், அழிவுக்கும் ஆளாகிறார்கள். ஆனால், தேவபிள்ளைகளாகிய நீங்களோ, பாக்கியவான்கள். உங்களுடைய ஜெபத்தைக் கேட்கிறதற்கு, பரலோகத்தில் ஒரு தேவன் உண்டு. அவர் உங்களுடைய பரம பிதா! தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறது போல இரங்குகிறவர், தா தேற்றுகிறதுபோல தேற்றுகிறவர்.

நீங்கள் இரட்சிப்பையும், அபிஷேகத்தையும் பெற்றது, பாக்கியத்திலும் பாக்கியம். ஆவியின் வரங்களை செயல்படுத்தி, உண்மையுள்ள தேவனுடைய ஊழியக்காரர்களாய் விளங்குவது, மாபெரும் பாக்கியமாகும். ஒருவன் இயேசுவை ஏற்றுக் கொள்ளும் போது, பாக்கியமான பரலோக குடும்பத்திற்கு வந்து சேருகிறான்.

“நீங்களோ, சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர் களினிடத்திற்கும், பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும், புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப் பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்” (எபி. 12:22-24).

அநேகர், பாக்கியம் என்றால் பணம், பொருள், அந்தஸ்து, கார், வீடு, பங்களா என்று எண்ணி விடுகிறார்கள். ஆனால், இதைப் பார்க்கிலும் தேவ பிரசன்னம், தேவ சமுகம், தேவ வல்லமை, தேவ கிருபை, தேவ காருண்யம், தெவீக சந்தோஷம், தெவீக சமாதானம் எவ்வளவு பெரிய பாக்கியங்கள்! நித்திய ஜீவனைப் பெற்று, பரலோகத்திற்கு கடந்து சேல்வது, எவ்வளவு மகிமையான பாக்கியம்! இம்மைக்குரிய பாக்கியத்தைப் பார்க்கிலும், நித்தியத்திற்குரிய பாக்கியங்கள் ஆயிரமாயிரம் மடங்கு மேன்மையானவை. “அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்” (எபே. 1:3).

இயேசுகிறிஸ்து, தம்முடைய ஊழியத்தின் ஆரம்பத்திலே, “பாக்கியவான்கள் யார்?” என்பதை தமது மலைப்பிரசங்கத்திலே விவரித்து சோல்லியிருக்கிறார். ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள், துயரப்படுகிறவர்கள், சாந்த குணமுள்ளவர்கள், நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள், இரக்கமுள்ளவர்கள், இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள், சமாதானம் பண்ணுகிறவர்கள், நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் எல்லோரும் பாக்கியவான்கள். நீங்கள் பாக்கியமான வாழ்வு வாழ வேண்டுமானால், கிறிஸ்து காண்பித்த வழியிலே சேன்று, பாக்கியங்களை பெற்றுக் கொள்ளுங்கள்.

நினைவிற்கு:- “கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்” (சங். 119:1).