என் ஜனம்!

“நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன். அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள்” (2 கொரி. 6:16).

நீங்கள் தேவனுடய பிள்ளைகளாக வேண்டுமென்றால், கர்த்தர் உங்களுக்குள் உலாவி வரவேண்டும். உங்களுடைய குடும்பத்தில் உலாவி வரவேண்டும். தம்முடைய மகிமையின் பிரசன்னத்தாலே, உங்களை நிரப்ப வேண்டும். அப்படி உலாவி வரவேண்டுமென்றால், உங்களுக்குள் ஒரு வேறுபாட்டின் ஜீவியம் அவசியம் தேவை. முந்தின வசனம் சொல்லுகிறது, “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக. நீதிக்கும், அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும், இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும், பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?” (2 கொரி. 6:14,15).

அப்படி, நீங்கள் வேறுபாட்டின் ஜீவியம் செய்யும்போது, கர்த்தர் உங்களுக்கு வாக்குத்தத்தமாய் சொல்லுகிறார். “அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன். நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமா யிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்” (2 கொரி. 6:18).

நீங்கள் கர்த்தருடைய ஜனமாயிருப்பீர்களென்றால், கர்த்தரோடு நேரம் செலவழி யுங்கள். பாருங்கள்! ஆதாம் ஏவாளை தன்னுடைய சாயலின்படி, தன்னுடைய ரூபத்தின்படி சிருஷ்டித்து, தன்னுடைய பிள்ளைகளாக்கினார். ஆகவே, பகலின் குளிர்ச்சியான வேளையிலே, தன் பிள்ளைகளைத் தேடி வந்தார். தோட்டத்திலே கர்த்தர் உலாவுகிற சத்தத்தை, அவர்கள் கேட்டார்கள். எத்தனை இனிமையான சத்தமாய் இருந்திருக்கும்! மனுமக்கள், அவருடைய மடியிலே நித்தமும் செல்லப் பிள்ளைகளாய் களிகூர்ந்துகொண்டிருந்திருப்பார்கள். ஆனால் பாவம் குறுக்கிட்ட போது அவரை, “அப்பா, பிதாவே” என்று அழைக்கும் உரிமை பறிபோனது.

ஆனாலும்கூட, ஏனோக்கு தன் காலத்திலே தேவனோடு சஞ்சரிக்கத் தீர்மானித்தார். முந்நூறு வருடங்கள் அவர் தேவனோடு நடந்தார் (ஆதி. 5:24). அப்படியே நோவாவும்கூட, “தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும், உத்தமனுமாயிருந்தார்; நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தார்” (ஆதி. 6:9). ஆபிரகாமைப் பாருங்கள், “கர்த்தருடைய சிநேகிதன்” என்று அழைக்கப்பட்டார். வேதத்தில் மூன்று முறை, கர்த்தர் ஆபிரகாமை, “என் சிநேகிதனாகிய ஆபிரகாம்” என்று மகிழ்ச்சியோடு கூறினார் (யாக். 2:23).

மோசே பக்தன் தேவனோடு உலாவுவதை பாக்கியமாக கருதினார். அவரைக் குறித்து கர்த்தர் சாட்சி கொடுத்து, “என் தாசனாகிய மோசேயோ, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன். நான் அவனுடன் மறைபொருளாக அல்ல, முகமுகமாகவும் பிரத்தியட்சமாகவும் பேசுகிறேன். அவன் கர்த்தரின் சாயலைக் காண்கிறான் என்று சொன்னார்” (எண். 12:7,8).

தேவபிள்ளைகளே, கொஞ்சக் கால உலக வாழ்க்கையில், தேவ பிரசன்னத்துக்கும், அவருடைய சமுகத்துக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். விசுவாசத்தினாலே கர்த்தருடைய கரம் பிடித்து உலாவுவீர்களா? அவரைப் பிரியப்படுத்துவீர்களா? அவர் எவ்வளவு அன்போடு உங்களை தேடி வந்தார். பரலோக மேன்மையை துறந்து, அடிமையின் ரூபமெடுத்தாரே. நீங்கள் அவரை தெரிந்துகொள்ளாத வேளையிலே அவர் உங்களை தெரிந்துகொண்டு, உங்கள் தகப்பனானாரே. நீங்கள் அவருடைய பிள்ளைகளாயிருந்து, அவரோடுகூட உலாவுவீர்களாக.

நினைவிற்கு:- “இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப்போகாமல், தைரியமுள்ளவர்களா யிருக்கும்படிக்கு அவரில் நிலைத்திருங்கள்” (1 யோவா. 2:28).