வாக்குத்தத்தத்தின் மகன்!

“சகோதரரே, நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாயிருக்கிறோம்” (கலா. 4:28).

வேதம் உங்களுக்கு ஒரு பெயரைக் கொடுக்கிறது. “நீங்கள் வாக்குத்தத்தத்தின் பிள்ளைகள்.” ராஜாதி ராஜாவினுடைய பிள்ளைகள். உன்னதமானவரின் சுதந்தர பிள்ளைகள். கர்த்தரை “அப்பா பிதாவே!” என்று அழைக்கக்கூடிய புத்திர சுவிகார ஆவியின் பிள்ளைகள்.

உலகத்தார், கர்த்தரையும், அவருடைய கல்வாரி அன்பையும் புறக்கணித்து விட்டு மனம்போல வாழ்கிறபடியால், அவர்கள் கீழ்ப்படியாமையின் பிள்ளைகளாக, கோபாக்கினையின் பிள்ளைகளாக, திக்கற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இருப்பதில்லை. அடைக்கலமும் இல்லை. ஆனால் நீங்களோ, கர்த்தருடைய பிள்ளைகளாய் இருக்கிறபடியால், நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருக்கிறீர்கள். பரவிப்போகிற ஆறுகளைப் போல இருக்கிறீர்கள். நீங்கள் வாக்குத்தத்தத்தின் பிள்ளைகள்.

நீங்களே, வேதத்திலுள்ள அவ்வளவு வாக்குத்தத்தங்களுக்கும் உரிமையானவர்கள். வேதப்புத்தகத்தில் மூவாயிரத்திலிருந்து, ஏழாயிரம் வரையிலும் வாக்குத்தத்தங்கள் இருக்கின்றன. வாக்குத்தத்தங்களைக் கொடுத்தவர், அதை நிறைவேற்ற வல்லவரா யிருக்கிறார். முதன்முதலில், மேசியாவாகிய கிறிஸ்து, பின்பு, பரிசுத்த ஆவியானவர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டார். பின்பு, கர்த்தர் நமக்கு நித்திய ஜீவனையும், பரலோக மேன்மையையும் வாக்குப் பண்ணினார். ஆம், நாம் ஈசாக்கைப் போல வாக்குத்தத்தத்தின் பிள்ளைகள்.

ஆபிரகாமுக்கு, ஆகார் மூலமாக “இஸ்மவேலும்” கேத்தூராள் மூலமாக, ஆறு பிள்ளைகளும் பிறந்தார்கள். ஆனால், அவர்கள், கர்த்தருடைய வாக்குத்தத்தத்தின்படி, தேவசித்தத்தின்படி பிறந்தவர்கள் அல்ல. சாராள் மூலமாக பிறந்த, ஈசாக்கு ஒருவனே வாக்குத்தத்தத்தின் பிள்ளையானவன். ஈசாக்கின் மூலமாகத்தான், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இஸ்ரவேல் ஜனங்கள் வந்தார்கள்.

புதிய ஏற்பாட்டுக்கு வரும்போது, வாக்குத்தத்தத்தைக் கொடுத்தவரும், வாக்குத் தத்தத்தை நிறைவேற்றுகிறவருமாகிய கிறிஸ்துதாமே, ஆபிரகாமின் சந்ததியில் தோன்ற சித்தமானார் (மத். 1:1). கிறிஸ்துவின் மூலமாய், புதிய உடன்படிக்கைக்குரிய விசுவாச சந்ததி தோன்றிற்று. “ஆகையால் விசுவாச மார்க்கத்தார்கள் எவர்களோ, அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகள் என்று அறிவீர்களாக!” (கலா. 3:7). ஆயக்காரனாயிருந்த சகேயு, கர்த்தரை விசுவாசித்தப்படியால், “இவனும் ஆபிரகாமுக்கு குமாரனாயிருக்கிறானே” என்று இயேசு சொன்னார் (லூக். 19:9). பதினெட்டு வருஷமாய் கூனியாயிருந்த, ஒரு பெண்ணைக் கர்த்தர் குணமாக்கினபோது, “ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை, ஓய்வுநாளில் இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா?” என்றார் (லூக். 13:16).

தேவபிள்ளைகளே, நீங்கள் இயேசுவை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும்போது, அவருடைய பிள்ளைகளாகும் அதிகாரத்தை உங்களுக்குத் தந்திருக்கிறார் (யோவா. 1:12). ஆகவே, விசுவாசத்திலே கடைசி வரை உறுதியாக நின்று, வாக்குத்தத்தங்களை சுதந்தரித்துக் கொள்ளுங்கள்.

நினைவிற்கு:- “ஆபிரகாமுக்கும், அவனுடைய சந்ததிக்கும், வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு என்று அநேகரைக் குறித்துச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக் குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்தச் சந்ததி கிறிஸ்துவே” (கலா. 3:16).