தேவபிள்ளைகள்!

“நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்” (1 யோவா. 3:1).

நாம் இரண்டாவது நாளாக, இந்த வசனத்தைத் தியானிக்கப் போகிறோம். வானாதி வானங்களை உண்டுபண்ணின சர்வ வல்லவர், உங்களை சொந்தப் பிள்ளைகள் என்று அழைக்கிறார். அந்த கர்த்தருடைய அன்பை சற்று சிந்தியுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்தில் அனல் கொள்ளுவீர்கள், பரவசமடைவீர்கள்.

“நான் தேவனுடைய பிள்ளை” என்ற மகிழ்ச்சியுடன், ஒவ்வொருநாளும் நூறு முறையாவது சொல்லுங்கள், “நான் உன்னதமான தேவனுடைய பிள்ளை, ராஜாதி ராஜாவினுடைய பிள்ளை. வானத்தையும், பூமியையும் உண்டாக்கின, தேவனுடைய பிள்ளை. வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரமுடைய சர்வ வல்லவருடைய பிள்ளை. அண்டசராசரங்களைச் சிருஷ்டித்து, காத்து வருகிற உன்னதமான தேவனுடைய பிள்ளை” என்று வாய் திறந்து அறிக்கையிடுங்கள்.

நீங்கள் அனாதைகளல்ல, திக்கற்றவர்களல்ல. வானத்தின் கீழே திறந்துவிடப் பட்டவர்கள் அல்ல. நீங்கள் கர்த்தருடைய குடும்பத்தினர். அவரை அப்பா, பிதாவே, என்று அழைக்கிற புத்திர சுவிகார ஆவி, உங்களுக்குள்ளே இருக்கிறது. ஆகவே, உங்கள் மேல் சாத்தான், எந்தவிதத்திலும், தன்னுடைய கையை வைக்க முடியாது. தன்னுடைய அதிகாரத்தை செலுத்தவும் முடியாது.
நீங்கள் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறபடியால், கர்த்தருடைய சுதந்தர ராகவும் இருக்கிறீர்கள். தகப்பனுடைய சொத்துக்கும், ஆஸ்திக்கும், அவருடைய பிள்ளையே உரிமையானவன் அல்லவா? நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே (ரோம. 8:17). கர்த்தருடைய ஒவ்வொரு வாக்குத்தத்தத்திற்கும் சுதந்தரர், அவரு டைய ராஜரீகத்திற்கு சுதந்தரர், அவருடைய நித்தியத்திற்கு சுதந்தரர், பரலோக ராஜ்யத்திற்கும் சுதந்தரர்.

நீங்கள் பிள்ளைகளானபடியால், கர்த்தர் உங்களுடைய ஜெபத்தைக் கேட்கிறார். நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதை தந்தருளுகிறார். இயேசுகிறிஸ்து ஜெபிக்க கற்றுக்கொடுக்கும்போது, “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே” என்று உரிமையோடு அழைத்து ஜெபிக்க கற்றுக்கொடுத்தார். ஆகவே, நீங்கள் கர்த்தருடைய பிள்ளைகள் என்ற சிலாக்கியத்திலே நிலைத்து நில்லுங்கள்.

நீங்கள் இரட்சிக்கப்படாமல், மறுபடியும் பிறவாமல், இந்தப் பாக்கியத்தை பெறவே முடியாது. நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான கடமை ஒன்றுண்டு. அது என்ன? “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களா அவரை ஏற்றுக்கொண்டவர்கள் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” (யோவா. 1:12).

கர்த்தருடைய குடும்பம், பூமியிலும் உண்டு, பரலோகத்திலும் உண்டு. கிறிஸ்துவை சேவிக்கிற ஆயிரம் ஆயிரமான நீதிமான்களும், பரிசுத்தவான்களும் உண்டு. எண்ணற்ற தேவதூதர்கள், கேருபீன்கள், சேராபீன்கள் உண்டு. மட்டுமல்ல, நமக்கு முன்பாக இந்த உலகத்தில் வாழ்ந்து தன்னுடைய ஓட்டத்தை வெற்றியோடு ஓடி முடித்த பழைய ஏற்பாட்டு, புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் உண்டு. பரலோகத்திலே, நாம் தேவனோடும், குமாரனோடும், ஆவியானவரோடும், ஆபிரகாம், ஈசாக்கு என்பவர்களோடும், என்றென்றும் பந்தியிருப்போம். அவர்களோடு இணைந்து வாழுவோம். நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரியது!

நினைவிற்கு:- “மாம்சத்தினால் பிறப்பது, மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்” (யோவா. 3:6).