சோர்வின் எண்ணங்கள்!

“இப்போதும் சேனைகளின் கர்த்தர் சோல்லுகிறார்: உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள்” (ஆகா. 1:5).

உலகத்தின் முடிவுக்கு, காலங்களின் இறுதிக்கு வந்திருக்கிறோம். கிறிஸ்துவின் வருகையும், அந்திகிறிஸ்துவின் நாட்களும், மிக மிக நெருங்கிக்கொண்டிருக்கின்றன. நம்மை நாமே ஆராய்ந்து பார்த்து, சீர்படுத்த வேண்டியவைகளை சீர்படுத்தவும், பரிசுத்தத்தோடு கிறிஸ்துவை சந்திக்கவும், இது எத்தனை அருமையான நேரம்.

சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் ஓடுகிற கிறிஸ்தவ ஓட்டத்தில் சரியாய் ஓடிக்கொண்டிருக்கிறீர்களா? ஓட்டத்தின் முடிவில் நீதியின் கிரீடத்தையும், மகிமையான பரலோக சுதந்திரங்களையும், பெற்றுக்கொள்ளுவீர்களா? கர்த்தர் எதிர்பார்க்கிற பரிசுத்தமும், நீதியும், ஜெப ஜீவியமும் உங்கள் வாழ்க்கையில் இருக்கிறதா? அநேகரின் மனதை சோர்வுகள் பற்றிக்கொண்டன.

ஒரு காலத்தில் கர்த்தருடைய வருகையையும், பரலோக ராஜ்யத்தையும் எண்ணி எண்ணி மகிழ்ந்தவர்கள், இன்றைக்கு சோர்ந்து, தூங்கிபோய்விட்டார்கள். முயலும், ஆமையும் தங்களுடைய ஓட்டத்தை நன்றாகவே ஆரம்பித்தன. ஆனால் முயல் ஓடி களைத்து, சோர்ந்து, தூங்கிபோய்விட்டது. ஆனால் ஆமையோ மெதுவாக ஓடினாலும்கூட, சோர்வடையாமல் வெற்றியை பெற்றுக்கொண்டது.

இரண்டு தவளைகள், ஒரு தயிர் சட்டிக்குள் விழுந்துவிட்டன. எவ்வளவோ முயற்சித்தும், அதைவிட்டு, அவைகளால் வெளிவர முடியவில்லை. ஒரு தவளை சோர்ந்துபோய், தன்னுடைய முயற்சியை கைவிட்டுவிட்டு, இனிமேலும் தன்னால் முடியாது என்று சொல்லி மரித்தது. ஆனால், அடுத்த தவளையோ தனது முழு பெலனையும் திரட்டி, எப்படியாவது வெளியே வந்துவிடவேண்டுமென்று முயன்று கொண்டேயிருந்தது. தவளை தன் கால்களை அடித்ததில் அந்த தயிரிலுள்ள வெண்ணெய் மிதக்க ஆரம்பித்தது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தவளை வெண்ணெயின் மேல் ஏறி, ஒரே தாவாக தாவி வெளியே வந்துவிட்டது.

தேவபிள்ளைகளே, எந்த நிலைமையாக இருந்தாலும், சோர்ந்து போய், உங்களுடைய முயற்சியை நிறுத்திவிடாதிருங்கள். இன்னும் ஜெப ஆவி, இன்னும் வல்லமை, இன்னும் ஊழியம், என்று முன்னேறிக்கொண்டே செல்லுங்கள். அப்பொழுது கர்த்தர் உங்களுக்கு உதவியாயிருப்பார். “சோர்ந்துபோகிறவனுக்கு அவர்பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார். இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ, புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் சேட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்” (ஏசா. 40:29-31). அப். பவுல் எழுதுகிறார், “நன்மைசேகிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்” (கலா. 6:9).

நீங்கள் பரிசுத்தத்தில், ஜெப ஜீவியத்தில், முன்னேற வேண்டுமென்று எண்ணும்போது, சாத்தான் நிச்சயமாகவே எல்லாவிதத்திலும் சோர்வு வரப்பண்ணுகிற எண்ணங்களைத் தருவான். அப்போதெல்லாம் “நீங்கள் இளைப்புள்ளவர்களா, உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாப் பாவிகளால் சேயப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த, அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்” (எபி. 12:3).

நினைவிற்கு:- “ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்து போகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது” (2 கொரி. 4:16).