நாளைய பற்றிய சிந்தை!

“நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள். நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்” (மத். 6:34).

இந்த நாளை கர்த்தர் தாமே நமக்குத் தந்திருக்கிறார். “இது கர்த்தர் உண்டுபண்ணின நாள். இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்” (சங். 118:24). அப்படியே கர்த்தர் நாளையத்தினத்தையும் ஆசீர்வதித்துத் தருவார். ஆகவே நாளையத்தினத்தைக் குறித்து கவலைப்படாமல், கர்த்தருடைய கரத்தில் ஒப்புவித்துவிடுங்கள். “கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு. அவர் உன்னை ஆதரிப்பார்” (சங். 55:22).

அநேகருக்கு நாளையத்தினத்தைக் குறித்த பெரிய கவலை. நாளையத்தினத்திற்கு உண்ணுவதற்கு, உடுப்பதற்கு, ஜீவனம் செய்வதற்கு என்ன இருக்கிறது? என்று கவலைப்படாதிருங்கள். கர்த்தருடைய கரத்திலே ஒப்புக்கொடுத்துவிடுங்கள். “கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்” (சங். 138:8) என்று விசுவாச அறிக்கையிடுங்கள்.

அப். யாக்கோபு எழுதுகிறார், “நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றி, பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே” (யாக். 4 14).

வயதான ஒருவர், இரண்டு பெரிய சாக்கு மூட்டைகளை, முதுகிலே தூக்க முடியாமல் சுமந்துக்கொண்டு வந்தாராம். அவரை, ஒரு தேவதூதன் பார்த்து, “எதற்கு நீ இந்த இரண்டு மூட்டைகளை சுமக்கிறாய்? இதற்குள்ளே என்ன இருக்கிறது?” என்று கேட்டான். அதற்கு அந்த வயோதிபர், “ஒரு மூட்டையில் நேற்றைய கவலைகள், அடுத்ததில் நாளைய தினத்தைக்குறித்த கவலைகள்” என்று சொன்னார். தேவதூதன் அவரை பார்த்து, “நேற்றையத்தினம் முடிந்து போய்விட்டது. நாளையத்தினம் இன்னும் பிறக்கவில்லை. அதற்காக ஏன் வீணாய் கவலைப்படவேண்டும்?” என்று சொல்லி ஒன்றுமில்லாத, அந்த மூட்டைகளை தூக்கி எறிந்தார். இப்படித்தான் அநேகர், ஒன்றும் இல்லாதவைகளுக்காக, வீணாக கவலைப்பட்டு கலங்கிக் கொண்டேயிருக்கிறார்கள்.

நாளையத்தினம், தன்னுடையவைகளுக்காக கவலைப்படும். நீங்கள் கவலைப்படவேண்டாம்.. ஒரு மீன் குஞ்சு, நாளையதினத்துக்காக கவலைப்பட்டதாம். இந்த கடலிலுள்ள எவ்வளவு பெரிய மீன்களும், திமிங்கலங்களும் கடல் தண்ணீரை குடித்துவிட்டால், நாளைக்கு நான் என்ன செய்வது? யோசேப்பின் பெரிய களஞ்சியத்தில், கூடுகட்டி வாழ்ந்த ஒரு சிட்டுக் குருவி, களஞ்சியத்திலுள்ள தானியம் தீர்ந்துவிட்டால் என்ன செய்வது என்று கவலைப்பட்டு, கலங்கி செத்தே போய்விட்டதாம்.

தேவபிள்ளைகளே, நாளையத்தினத்தை உருவாக்கி, உங்களுடைய கரங்களிலே தந்திருக்கிற கர்த்தரை, துதித்து சந்தோஷத்தோடு, அதனுள்ளே பிரவேசியுங்கள். “கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்” (மத். 6:27,34).

ஒரு உண்மையான கிறிஸ்தவனுக்கு விரோதமாக, ஒரு மேலதிகாரி, குற்றம் கண்டுபிடித்து, நாளையதினம் விசாரணை என்று கொண்டு வந்தார். அந்த மேலதிகாரியின் மேஜையில் இந்த கிறிஸ்தவரை பணி நீக்கம் செய்வதாக, டைப் செய்யப்பட்ட பேப்பர் இருந்தது. ஆனால் கையொப்பம் இடவில்லை. கர்த்தர் அந்த கிறிஸ்தவனிடம், “நாளையதினத்தைக் குறித்து பயப்படாதே, நான் உனக்காக யுத்தம் செய்வேன்” என்றார். அப்படியே அன்று இரவில் மேலதிகாரிக்கு இருதய நோய் தாக்கி (Heart Attack) மரித்துப்போனார். வழக்கும் தள்ளுபடியாயிற்று.

நினைவிற்கு:- “கர்த்தருடைய தயவோ, நீடிய வாழ்வு. சாயங்காலத்தில் அழுகை தங்கும். விடியற்காலத்திலே களிப்புண்டாகும்” (சங். 30:5).